Saturday, August 29, 2009

மாவை வரோதயனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகில் மற்றுமொரு பாரிய இழப்பாகும்.

என்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

ஊடக செய்திக் குறிப்பு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக அயராது செய்றபட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சுவையுணர்வு மிகும் ஆக்கங்களாற் தாயகத்துக்கு வளமூட்டினார்.

அவரது கவிதைகளும் உரைச் சித்திரங்களுங் கட்டுரைகளும், நாடகப் பிரதிகளும், தெளிவும், ஆழமும், சமூகப் பயனுமுடையன. தனது பல்வேறு தனிப்பட்ட துன்ப துயரங்கட்கிடையிலுங் குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகக் கடுமையான நோய்க்கு உட்பட்டிருந்த போதிலும், தன்னாலியன்றளவுக்கு தாயகத்திற்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வந்தார். சமூகச் சிந்தனை மிக்க சீரிய படைப்பாளிகள் பிற்போக்காளராற் காழ்ப்புணர்வுடன் நிந்திக்கப்பட்ட வேளைகளில், நிதானந் தவறாது உண்மைகளை விளக்கி அவதூறுகளை நிராகரித்துப் புதிய கலை இலக்கியப் பண்பாட்டை நிலை நிறுத்தும் ஓர்மம் அவரிடம் இருந்தது. அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும், பிள்ளைகட்கும், குடும்பத்தினருக்கும், தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களையுத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து தனது ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்கின்றது.

தேசிய கலை இலக்கியப் பேரவை.

Tuesday, August 25, 2009

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றைய தினத்துடன் (25-08-2009) வானியலின் தந்தை கலீலியோ கலிலி தொலைநோக்கி என்ற அரிய பொருளை கண்டுபிடித்து 400 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதன் நினைவாக, கலீலியோ கலிலியின் தொலைநோக்கி கண்டுபிடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த வானியல் சாதனைகள் தொடர்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றியது. 1609ஆம் ஆண்டில் கலீலியோ என்ற வானியலாளர் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தியதன் 400ஆவது ஆண்டு கொண்டாட்டமாக இந்த ஆண்டு (2009) சர்வதேச வானியல் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுரை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.
1608 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட போதிலும் கலீலியோதான் நல்ல திறனுடைய தொலைநோக்கிகளை உருவாக்கினார். கலீலியோ தொலைநோக்கிகளை உருவாக்கியதோடு நிற்கவில்லை. அதைக் கொண்டு வானை ஆராய முற்பட்டார். வானில் நம் கண்ணால் பார்க்கக்கூடிய பூமியின் துணைக்கோளான சந்திரனில் தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில் பறக்கும் எரிகற்கள் என அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினார். கவனித்ததோடு நில்லாது அவை செல்லும் பாதைகளை குறிக்கத் தொடங்கினார். கலீலியோவுக்கு முன்னதாக ஐரோப்பாவில் அதிகம் வானியல் ஆராய்ச்சிகள் நடந்ததில்லை. எனவே, கலீலியோவை வானியலின் தந்தை என்று சொல்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், நிச்சயமாக கிரேக்கர்கள், இந்தியர்கள், சீனர்கள் இன்னும் பல பண்டைய நாகரிகத்தவர்கள் வானை கவனமாக ஆராய்ந்திருந்தனர்.

கலீலியோ தான் கண்டறிந்தவற்கை எழுதி வைத்தார். கோபர்நிகஸ் என்ற அவருக்கு முன்னிருந்த வானியலாளர் சூரியன் தான் மையத்தில் உள்ளது. மற்ற அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றித்தான் வருகின்றன என்று சொல்லியிருந்தார். கலீலியோ தனது தொலைநோக்கியால் கண்டறிந்தவற்றை வைத்து கோபர்நிகஸின் கூற்று சரியானதே என்று சொன்னார். ஆனால் 17ஆம் நூற்றாண்டில் கிறித்துவ தேவாலயம் இதனை ஏற்க மறுத்தது. கலீலியோவை அச்சுறுத்தி, வீட்டுக் காவலில் வைத்து தான் சொன்னது தவறு என்று அவரையே சொல்ல வைத்தனர்.

வீட்டுக் காவலில், கண் குருடாகி கலீலியோ உயிரைவிட்டார். ஆனால் அவரது தொலைநோக்கியும், அவரது வானியல் ஆராய்ச்சியும் அழியவில்லை. அடுத்த சில வருடங்களில் டைகோ பராஹே, யோஹானஸ் கெப்ளர் போன்றோர் தொலைநோக்கியின் உதவியுடன் ஒவ்வொரு கோளும் எப்படிச் சுற்றுகின்றது என்ற துல்லியமான தகவல்களைத் திரட்டினர். ஆதற்குப்பின் அழியாப் புகழ் கொண்ட ஐஸக் நியூட்டன வானில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி இயங்குகின்றது என்பதற்கான தன்னுடைய ஈர்ப்புவிசைக் கோட்பாட்டை வெளியிட்டார்.
இதன் பின்னரும் 18ஆம் நூற்றாண்டில் வானியல் மாற்றங்கள் தொடர்பில் முழுமையான அறிவினை எவரும் பெறவில்லை. சூரியன், சூரியனைச் சுற்றி வரும் சில கோள்கள், அதனைச் சூழ துணைக்கோள்கள் என்பவற்றை மாத்திரமே வானில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. வானில் தொலைவில் காணப்படும் நட்சத்திரங்கள் எவை? ஆதன் பருமன் என்ன? அவை எவ்வாறு ஒளி தருகின்றன? பிறகோள்கள் ஒளி தராமைக்கு காரணம் என்ன? சூரியன் ஒளி தரக் காரணம் என்ன? இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு தோன்றின? கோள்கள் எப்படித் தோன்றின? வால்நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன? பிரபஞ்சத்தில் வேறு எவையெல்லாம் உள்ளன? என்று பல கேள்விகளுக்கான பதிலை சாதாரண தொலைநோக்கிகளால் தரமுடியவில்லை. அதிகபட்சமாக யுரெனஸ் கோளை கண்டுபிடித்தமை மாத்திரமே இந்த தொலைநோக்கிகளின் சாதனையாகும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கிரகங்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இந்த நிலையில் 20ஆம் நூற்றாண்டில் புளுட்டோ என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அது கோள் அல்ல என வானியலாளர்களால் அறிவிக்கப்பட்டது.

தொலைநோக்கிகளின் வளர்ச்சியில், 20ஆம் நூற்றாண்டில் ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொலைநோக்கியின் ஊடாக, வெற்றுக் கண்ணால் நாங்கள் பார்க்கும் ஒளியை குவித்துத் தர முடியும். இதன் காரணமாகவே வெகுதூரத்தில் உள்ள பொருளை தொலைநோக்கியூடாக நாம் பார்க்கும் போது அந்த பொருள் தெளிவாக, பெரிதாகத் தெரிகின்றது. வெற்றுக் கண்ணால் நாங்கள் காணும் ஒளி மின்காந்த அலைகள்(400-700 நனோ மீற்றர்) என்று சொல்லப்படும் அலைகளில் ஒரு சிறு பகுதிதான். மனிதக் கண்ணால் நாங்கள் காண முடியாத பல மின்காந்த அலைகள் உள்ளன. (உதாரணம்: புறஊதாக் கதிர், அகச் சிவப்புக் கதிர், எக்ஸ் கதிர், மைக்ரோ கதிர்கள், காமா கதிர்கள்). ரேடியோ தொலைநோக்கி என்பது வெற்றுக் கண்ணால் காண முடியாத குறித்த மின்காந்த அலைகளை பெற்று அவற்றின் மூலம் பொருளின் வடிவத்தை பார்க்க் கூடியதாகவுள்ளது. ரேடியோ தொலைநோக்கி என்பது கலீலியோ செய்த குழாய் வடிவிலானதாகவோ, பைனாகுலர் போன்ற வடிவிலோ இருக்காது. இது செய்மதி டிஸ் அன்டனாவைப் போன்றது.

ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், 1929ஆம் ஆண்டில் எட்வின் ஹப்பள் என்பவர் பிரபஞ்சம் விரிந்துகொண்டே போவதனை (நம்மிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் நம்மை விட்டு விலகிச் செல்லுதல்) கண்டுபிடித்தார். 1930இல் ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எட்வின் ஹப்பளின் கண்டுபிடிப்பு உண்மையென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முன்னர் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்புகொள்கையிலும் பிரபஞ்சம் விரிவாகிக் கொண்டு போவதனை கண்டறிந்தார். ஆனால் அப்போது அதனை அவறால் ஏற்கமுடியவில்லை. எனவே, தனது கொள்கையின் சமன்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திபிரபஞ்சம் விரிவாகுதல்என்பது உண்மையாகாது பார்த்துக் கொண்டார். எனினும், ரேடியோ தொலைநோக்கி மற்றும் எட்வின் ஹப்பளின் கண்டுபிடிப்புக்களினைத் தொடர்ந்து தனது சமன்பாடுகளை மீண்டும் திருத்திபிரபஞ்சம் விரிவாகுதலைஏற்றுக் கொண்டார்.

பிரபஞ்ச விரிவாகுதல் என்ற கருத்தின் பயனாக எழுந்த வினாக்களே அண்ட பெருவெடிப்புக் கொள்கைக்கும் ஆதாரமாக அமைந்தன. பிரபஞ்சம் விரிடைகின்றது என்றால், அதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் மிகநெருக்கமாக, குறுகிய இடத்தில் வான்பொருள்கள் ஒன்றாக இருந்து அழுத்தம் தாங்காது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும், அவ்வாறுதான் நட்சத்திரங்கள், விண்கற்கள், கோள்கள் என்பன உருவாகியிருக்கலாம் என் அண்டபெருவெடிப்புக் கொள்கை தோன்றியது. ஆனால் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? ஆதற்கான ஆதாரங்கள் எவை?

இந்த வினாக்களுக்கான விடைகளை கண்டறிவதற்காகவே, இவ்வாறு அழுத்தம் காரணமாக வெடித்து உருவானவை கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் என கருதுவோமானால், அவ்வாறு சிதறி பரவும் போது வெப்ப, மின்காந்த அலைகள் பெரும் அளவில் பரவியிருக்கும். அந்த அலைகள் இப்போதும் எஞ்சியிருக்கலாம். அந்த அலைகளை கண்டறிந்து அளப்பதன் மூலம் இந்த கொள்கையை உண்மையாக்க முடியம் என 1948இல் ஜோர்ஜ் காமா, ரால்ஃப் ஆல்ஃபர், ரொபர்ட் ஹென்மன் ஆகியோர் கருத்து ரீதியாக இதனை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக 1964ஆம் ஆண்டு ஆர்னோ பென்ஸியாஸ் மற்றும் ரொபர்ட் வில்சன் ஆகியோர் தங்களது ரேடியோ தொலைநோக்கியின் ஊடாக இந்த கொஸ்மிக் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டறிந்து, பெருவெடிப்புக் கொள்கை ஊடாகத்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். இதன் பொருட்டு இவர்கள் இருவருக்கும் 1978 ஆம் ஆண்டு நொபெல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.கலீலியோவின் தொலைநோக்கிக்கு 400வயதுகள் ஆகியுள்ள தற்போது, பல புதிய விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.

  • இந்த பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பம் பால்வீதி அண்டத்தில் ஒரு சிறு பகுதி. சூரியனைச் சுற்றி 8 கோள்கள் உள்ளன. அதில் ஒரு கோளான பூமியில் நாம் வசிக்கின்றோம்.
  • சூரியன்நட்சத்திர வகையைச் சேர்ந்தது. அதன் மையத்தில் அணுச்சேர்க்கையினால் ஐதரசன் மற்றும் ஹீலியம் அணுக்கள் தோன்றுகின்றன. அதன் பயனாக உருவாகும் வெப்பமும், ஒளியுமே பூமிக்கு ஒளியைத் தருகின்றன.
  • சூரியனைப் போன்ற அளவில் பெரிய பல இலட்சம், பல கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
  • பூமியைப் போன்ற கோள்களில் அணுச்சேர்க்கைகள் நடைபெறுவதில்லை.
  • சூரியனை பூமியும், கோள்களும் சுற்றிவர, சூரியன் பால்வீதி அண்டத்தைச் சுற்றி வருகின்றது.
  • பால்வீதி அண்டம் போன்ற பல அண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு அண்டத்திலும் பல நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என்பன காணப்படுகின்றன.நமது பால்வீதி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டம் ஆந்திரோமீடா அண்டமாகும்.
  • நட்சத்திரங்கள், கோள்கள் மாத்திரமல்லாது வேறு பலப் பொருட்களும் வானில் உள்ளன.
  • ஒரு நட்சத்திரம் எரிந்து முடிக்கும் போது, அணுச்சேர்க்கை நடக்காது என்ற நிலையை எட்டும்போது, அந்த நட்சத்திரம் சூப்பர் நோவா என்ற நிலையை அடைந்து அதிபயங்கர வெளிச்சத்துடன் எரிந்து வெண்குள்ளன, கருங்குள்ளன் அல்லது நியூட்ரான் என்ற நிலையை அடையும்.
  • பால்வீதி அண்டத்தில் காணப்படும் வேறு கோள்களில் மனிதர்கள் உயிர்வாழ்கிறார்களா அல்லது மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு உகந்ததா என்பது தொடர்பில் தற்போது பரவலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
  • 5மில்லியன் ஆண்டுகளில் சூரியன் பூமியை விழுங்கிவிடும் என்ற கருத்தும் காணப்படுகின்றது. அதுவரை பூமியில் உயிர்கள் இருக்குமா என்பது இதுவரை கண்டறியப்படாத விடயம். ஏவ்வாறாயினும், பூமி தோன்றி சுமார் 3.7 மில்லியன் ஆண்டுகளாவதாகவும், மனிதர்கள் உருவாகி சுமார் 2இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : 1564ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பிறந்த கலீலியோ கலிலி 1642ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி உயிரிழந்தார்.இத்தாலியாரான இவர் வைத்தியர், கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் தத்துவியலாளர் என பல் திறமைகள் வாய்ந்தவர்.
உசாத்துணை மற்றும் நன்றிகள்: பிரபஞ்ச ரகசியம் - பத்ரி சேஷாத்ரி (அம்ருதா-ஏப்ரல்), விக்கிபீடியா, கூகுள் தேடல்

Monday, August 24, 2009

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

ந்தசாமிசுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம். கடைசியாக வெளிவந்த விக்ரமின்பீமாதிரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில், புதிய இயக்குநர்களின் வரவு, சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது. படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன. படபூஜைக்கான அழைப்பிதழ், படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில், படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது.

தர்க்கரீதியாக
பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை. சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம். மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது. கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை. சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமியைப் பயன்படுத்தி இயக்கியிருக்கிறார். படம் முழுக்க விக்ரமின் நடிப்பு சிறப்பாக இருக்கின்றது. ஒரு சி.பி. அதிகாரியாக வரும் காட்சிகளிலும், மக்களுக்கு உதவும் கந்தசாமி பாத்திரத்திலும் சரி நடிப்பு பிரமாதம். சிறப்பாக மெக்சிக்கோவில் கண்ணைக் கட்டிக் கொண்டு செய்யும் சண்டைக் காட்சி. கனல் கண்ணனுக்கும் பாராட்டுக்கள் சேர வேண்டும். சண்டைக் காட்சிகள் என்றாலே எல்லோரையும் பறக்க வைக்கும் கனல் கண்ணன் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சியை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே. விக்ரம் கதைக்கு ஏற்றவாறு உடம்பை நன்றாக தேற்றியிருக்கின்றார் (நேற்று திரையரங்குக்கு என்னோடு படம் பார்க்க வந்த நண்பர்களில் ஒருவர் இன்று முதல் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்லப் போவதாக கூறும் அளவுக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அத்துடன், விக்ரம் கொக் கொக் கொக் கந்தசாமியாக வரும் இடங்களிலும், பெண் வேடத்திலும், கிழவர் வேடத்திலும் கலக்கியிருக்கின்றார். ஆனால் கிழவர் வேடத்தில் அவர் தோன்றும் காட்சி மிக சில விநாடிகளே இருப்பதுடன், விக்ரமின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அந்த வேடத்தில் வழங்கப்படவில்லை. (அந்த வேடத்தில் நடிப்பதற்கு அவருக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கலாம் அல்லது அந்த காட்சியைத் தவிர்த்து அந்த காட்சிக்கான பொருத்தமான வேறு உபாயத்தை இயக்குநர் கையாண்டிருக்கலாம்). விக்ரமின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் புதுமுகங்கள் என்றாலும், அவர்களது பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள்.
விக்ரமை விடுத்து படத்தில் வரும் ஏனைய நட்சத்திரங்களின் பங்களிப்பு ஒரளவுதான் பொருந்தியிருக்கின்றது. படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மழை திரைப்படத்தில் இருந்து இன்று வரை இடுப்பாட்டத்தில் மாத்திரம் தான் தேறியிருக்கிறார். பெர்ரிதான சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நடிப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. கதையின் பிரகாரம் அவருக்கு நடிப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், இயக்குனர் அவரை நடிக்கவைக்க முயற்சிக்கவில்லையா அல்லது முடியவில்லையா என்பது சுசிகணேசனுக்கு மாத்திரமே தெரிந்த ரகசியம். படத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருக்கின்றன. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை தனித்து ஒரு நகைச்சுவை கலாட்டாவாக பார்த்து சிரிக்கலாம். வடிவேலு புதிதாக எதுவுமே செய்துவிடவும் இல்லை. வழமை போலவே எல்லோரிடமும் அடிவாங்கும் ஒருவராக (கொஞ்சம் புதிய முறைகளில்) வந்திருக்கின்றார். இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் மற்றவர்கள் அடிவாங்குவதை பார்த்து தமிழ் திரைப்பட ரசிகர்கள் சிரிப்பார்கள் என இந்த நகைச்சுவை நடிகர்கள் நினைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. முற்றுமுழுதாக அருவருப்பான விடயமாகவும், இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் இந்த நகைச்சுவைக் காட்சிகள் மாறிவருகின்றன. அதைத்தவிர படத்துடன் அவ்வளவாக அவருடைய நகைச்சுவை பொருந்தவில்லை. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை கத்திரித்துவிட்டு படத்தை பார்த்தால் ஒரளவு சீரியஸான படமாகவும், கொஞ்சம் நீளத்தில் அளவான படமாகவும் வந்திருக்கும்.

படத்தில் மெசிக்கோ அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது. பாடல்களில் ஸ்ரேயா தோன்றும் காட்சிகள் (பாடல்கள் உட்பட), மெச்கிக்கோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் என மிகவும் சில இடங்களில் மாத்திரமே ஒளிப்பதிவாளரின் கைவரிசை வியக்க வைக்கின்றது. பாடல்களைப் பற்றி சொல்வதானால் எல்லாப் பாடல்களிலும் கொஞ்சம் மேற்கத்தைய வாசனை கலந்திருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் சில மேற்கத்தைய பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. பாடல் காட்சிகளைப் பொறுத்தவரையில் “ஏ” சான்றிதழ் கொடுக்கலாம். பம்பரக் கண்ணாலே பாடலுக்கு “ஏ பிளஸ்” சான்றிதழ் தான் கொடுக்க வேண்டும்(இலங்கையில் வயதுவந்தவர்களுக்கான படங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பாடல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படாதது???????). பாடல் வரிகள் பற்றி சொல்லவேத் தேவையில்லை, விவேகாவின் மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல் மஞ்சள் பத்திரிகைகளில் வெளிவருவதற்கான முழுத் தகுதியையும் கொண்டிருக்கின்றன. தமிழ் திரைப்பட உலகில் சிறந்த பல திரைப்படங்கள் உருவாகி வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பாடல் காட்சிகளும், பாடல் வரிகளும் எந்த நோக்கத்தைக் கொண்டு வெளியிடப்படுகின்றன என்பது அடுத்த கேள்வி. வர்த்தகமயமாக்குவதே அதன் காரணம் என்றால், விசத்தையும் இவர்கள் வர்த்தக காரணங்களுக்காக அமுதமாக விளம்பரப்படுத்துவார்களா என்ற கேள்வியும் கூடவே.

படத்தொகுப்பும் அவசரமாக செய்யப்பட்டதாகவே உள்ளது. சில காட்சிகள், பாடல்கள் முடிவடைந்து அடுத்த காட்சிகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் விஸ_வல் ஜேர்க் எனப்படும் தொழில்நுட்ப தவறை காணக் கூடியதாகவுள்ளது. படம் வெளிவருவதற்கு நீண்டகாலம் எடுத்த போதிலும் இவ்வாறான தொழில்நுட்ப தவறுகள் தேவைதானா?

இயக்குநரிடம் சில கேள்விகள்- ஸ்ரேயாவை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்த காரணம்? வடிவேலுவின் காட்சிகள் படத்துக்கு அவசியமா? ஓளிப்பதிவாளருக்கு கைநடுக்கம் உள்ளதா? பாடல் வரிகளின் அர்த்தம் உங்களுக்கு புரிந்ததா? நுpறைய ஆங்கிலப் படம் பார்ப்பவரா நீங்கள்? (இதெல்லாம் இயக்குநர் வாசிப்பாரோ?, இல்லையோ? தெரியாது. ஆனால், நமக்குள்ள தோன்றிய கேள்விகள். அவ்வளவுதான். உங்களுக்கு படம் பார்த்தப்போ ஏதும் கேள்வி கேக்கணும்னு தோனியிருந்தா, பின்னூட்டத்துல சேர்த்துவிடுங்கள். ஒரு நூறு கேள்வியாவது இருந்தால், சுசிகணேசனுக்கு சொந்த செலவில் ஒரு தபால் போடலாம்னு எண்ணம்.)

மொத்தத்தில் நல்ல கரு, நல்ல நடிகர்- ஒரு நல்ல திரைப்படத்துக்கான சகல தொழில்நுட்ப குழு என்ற அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் சுமாரான, ஒரு தடவை பார்ப்பதற்கான திரைப்படம் கந்தசாமி.
க…க….க….கந்தசாமி- கொக் கொக் கொக் கொஞ்சம் பார்க்கலாம் சாமி….

குறிப்பு: படத்தை ஒருமுறையாவது திரையரங்கில் பாருங்கள். கலைப்புலி தாணுவின் பல கோடிகள் படத்தில் (படத்தில் காட்டப்பட்ட பல கோடிகளைப் போன்ற).

Wednesday, August 19, 2009

உலக மனிதாபிமான தினம்: வருந்திப் பாரஞ் சுமப்பவர்கள்

சர்வதேச ரீதியாக இயங்கி வரும் நிவாரணப் பணியாளர்கள் அல்லது தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை(ஆகஸ்ட் 19) உலக மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. முதலாவது உலக மனிதாபிமான தினம் என்ற ரீதியில் இன்றைய தினம் சிறப்பு பெறுகின்றது. சர்வதேச ரீதியில் நிவாரணப் பணியாளர்களின் செயற்பாடுகளை அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கான இடத்தை சமூகத்தில் பெற்றுக் கொடுப்பதே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டதற்கான .நாவின் பிரதான நோக்கமாக உள்ளது.
ஈராக்கின், பாக்தாத்தில் அமைந்துள்ள .நாவின் அலுவலகம் மீது 2003ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 22 பேர் கொல்லப்பட்ட 6ஆவது வருட நிறைவு நாளையே உலக மனிதாபிமான தினமாக .நா பிரகடனப்படுத்தியுள்ளது.

நிவாரணப் பணியாளர்கள் பலவிதமான சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசேடமாக உலகில் உள்நாட்டு யுத்தங்கள், எல்லைப் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களே, இவர்களது பணியிடங்களாக காணப்படுவது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவற்றின் மத்தியில் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் மனிதாபிமான நடவடிக்கைகள் நிச்சயமாக கௌரவிக்கப்பட வேண்டிய ஒன்றே.

நடைமுறையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள், வன்முறைகள் என நிவாரணப் பணியாளர்களின் பணி மிகவும் அத்தியாவசியமானதாகியுள்ளதோடு, மிகவும் அபாயகரமான நிலையிலேயே அவர்களது பணிகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறான அபாயகரமான சூழ்நிலையில் செயற்பட்டு நிவாரணப் பணியாளர்கள் 122 பேர் கடந்த வருடத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த .நாவின் அமைதிகாக்கும் துருப்பினரின் எண்ணிக்கையை விட, இந்த எண்ணிக்கை அதிகமானது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். கடந்த 10 வருடங்களில் மாத்திரம் சுமார் 700 நிவாரணப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர்.

எனவே, உலக மனிதாபிமான தினமான இன்று, நிவாரணப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு தமது உயிரையே அர்ப்பணித்த அனைத்து நிவாரணப் பணியாளர்களையும் நினைவுகூருவதற்கான நாளாக காணப்படுகின்றது.
உலகின் மோதல் நிலவும் பல பகுதிகளில் மக்களின் உதவிகளுக்காகச் செல்லும் நிவாரணப் பணியாளர்கள் ஆயுதக்குழுக்களால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்படுவது அல்லது கொல்லப்படுவது என்பன மிகவும் வருந்தத்தக்க விடயங்களாகும்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், பலஸ்தீனம், இஸ்ரேல், சூடான், சோமாலியா, கொங்கோ மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நிவாரணப் பணியாளர்களின் இன்றைய பணிகள் இன்றியமையாத ஒன்றாகியுள்ளன. இந்த அனைத்து நாடுகளிலும் நிவாரணப் பணியாளர்களுக்கான உயிர் அச்சுறுத்தலும் மறுக்க முடியாத ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அவர்களது அர்ப்பணிப்புடனான சேவை போற்றப்பட வேண்டியதே.

மனிதாபிமான நிவாரணப் பணி என்பதன் உண்மையான அர்த்தம், உலகெங்கிலும் இருக்கக் கூடிய அனைவருக்கும் அறியப்படுத்தப்படல் வேண்டும். உண்மையான மனிதாபிமான நிவாரணப் பணியென்பது மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு நிர்க்கத்தியாகியுள்ளவர்களுக்கு மாத்திரமல்லாது, வன்முறைகள், மோதல்களற்ற வளமான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் அத்தியாவசியமான ஒன்று என்பதையும் மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

“You gain strength, courage, and confidence by every experience by which you really stop to look fear in the face. You are able to say to yourself, 'I lived through this horror. I can take the next thing that comes along.” -ELEANOR ரூஸ்வெல்ட்-Monday, August 17, 2009

ஞாபகங்களை சேமித்தல்

சுழன்று அடிக்கும் ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டேஓடிக் கொண்டிருக்கின்றேன். கடற்கரை மணலில் புதைந்து விளைந்த
வரிசையாக தொடரும் பாதச் சுவடுகள்
கலைத்த அலைகளின் வேகத்தில் பாதந் தொட்டு
உச்சி சிலிர்த்த விநாடிகள்….
அப்படியே உணர்வுகளை பேசவிட்டு
வெட்கங்களை விலக்கி ஒன்றாக்கி
உயிர் கலந்த கணம்…
ஒன்றையும் மறக்காது
முடிச்சுக்களை கடந்து செல்லும்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்.
முதல் பார்வையிலேயே
உயிர் வேர்க்க
சிலிர்த்தெழுந்த மயிர்க்கால்களின் ஆவேசம்…..
உன் விரல்பட்ட பொழுதன்றில்
புயல் கடந்த மனமகிழ்வு…
உன் இமை மடிந்த மாத்திரையில்
உடல் பருகிய களவு..
ஓரிரவில் எனை சிறைவைத்த
விரல் கம்பிகளின் நுனி கீறிய வடுக்கள்….
எதையும் தொலைக்காது பத்திரமாய்
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஒடிக் கொண்டிருக்கின்றேன்.பிறந்தநாளொன்றின் முதல் வாழ்த்தில்
இதழ்களை பேசிக் கொள்ளச் செய்த
பரிசுணவை…
திகட்டாமல் புசித்துக் கொண்ட….
மழைகாலத்து நிலவின் நிழலில்
சராசரி குறைந்த உடல்வெப்பம்
இணையாக்க
உடல் போர்வை போர்த்திவிட்டு என்
உடல் வெப்பம் காத்த…. அத்தனையையும் சிதறாது சேமிப்பதாய்.
ஞாபகங்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றேன்…

தொடர்ந்து எனது பதிவுகளில் கவிதைகளையே எழுதிவருவதாக நண்பர்கள் சிலர் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். காரணம், கவிதைகளில் காணப்படும் ஒருதலை உணர்வு. நெருங்கிய நண்பர்கள் சிலர் பயந்துபோய், "மச்சான், ஏதும் பிரச்சினையா? கவலைப்படாத மச்சான்," என்றெல்லாம் ஆறுதல் மின்னஞ்சல்களும், குறுந்தகவல்களும் நிறைந்துவிட்டன. இத்தனைக்கும் மேலே வெளிநாட்டில் இருக்கும் ஒரு நண்பன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்குமான சந்தர்ப்பத்தை இந்த கவிதைகள் ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த கவிதைகள் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்துதான் இருக்கின்றன. "ஞாபகங்களை சேமித்தல்" என்ற இந்த கவிதை 4 மாதங்களுக்கு முன்னர் எழுதியது என்று நினைக்கின்றேன். நூறு சதவீதம் இந்த கவிதை கற்பனை மாத்திரமே (என் நண்பர்கள் கவனிக்க). மீண்டும், அடுத்த பதிவில் சந்திக்கலாம். வாசித்து பிடித்திருந்தால், ஒரு வாக்கு உங்கள் கணக்கில் மறக்காமல்...


Friday, August 14, 2009

காதலிச்சு...

ஓன் பேர
பச்ச குத்தி பட்ட காயம்
ஆற முன்ன….
ஓன் கல்யாண பத்திரிக்க
கொண்டு வந்து நீட்டுறியே….

என் கைய புடிச்சிகிட்டு
கடலோரம் நடக்கயில…..
நீ தந்த வாக்கெல்லாம்
காத்தாகி போயிடுச்சே…..

ஒன்னால நா பட்ட காயமெல்லாம் ஆறிரும்…
ஆனா….ஒன் மொகத்த
என் மனசு எப்படி மறக்கும்…..

தலைவார போகயில….
கண்ணாடியில ஒன் மொகந்தானே தெரியுது…

கண்ண மூடி அசரயில
ஏன் புள்ள கனவுல நீ வந்து தொலைச்ச….
என்ன விட்டு இப்போ நீ போயி தொலைஞ்ச….

பாசந்தான் பெரிசுன்னு நீ பிரிஞ்சு போன….
நா வெச்ச பாசத்த நீ
நெனச்சு பாக்கலியே….

நீ பாக்க
ஒன் முன்னாடி
நா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு
நீ சொன்ன கடசி வார்த்த……

அப்ப தானே நா முழுசா செத்துப் போனேன்…
போதும் புள்ள

நீ வெதச்ச நெனப்பெல்லாம்
என மனசோரம்
அழியாம நெறஞ்சிருக்க….

ஒனக்கொண்ணும் ஆகம..
நீ சொகமா இருக்கணும்
ஒன் கைபுடிக்கும் மகராசன்
ஒன் உசிராக இருக்கணும்….

எனக்கொன்னும் கொறவில்ல…
நாயிருப்பேன் கல்லாட்டம்…
நீயில்லாத நா கல்லு தானே….

ஓன் நெனப்போட நா இருப்பேன்.
என் உசிரு என்ன விட்டு போனாத்தான்…
ஒன் நெனப்பும் மறஞ்சி போகும்….

ஒரு வித்தியாசமான முயற்சி. கடந்த பதிவில் நான் மரித்தவன்னு ஒரு கவிதை எழுத முயற்சி செய்திருந்தேன். நிறைய நண்பர்கள் மின்னஞ்சலில் செல்லமாக கோபப்பட்டு கொண்டார்கள். இப்படியெல்லாம் எழுத வேண்டாம் என சில நண்பர்களின் மிரட்டலான வேண்டுகோள் வேறு( உனக்கென்ன வரிக்கு, வரி சொற்களை தனித்தனியாக போட்டால் கவிதை எழுதுறது என்று நினைப்போ... திரு ஃ திட்டியிருந்தார்). ஆனால் நான் மரணம் பற்றி எழுதியதில் தான் நிறைய பேர் கடிந்து கொண்டார்கள். சரி இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக.கிராமத்து நடையில் ஒரு கவிதை முயற்சி ( திரு ஃ நீங்கள் கட்டாயம் இதையும் வாசித்து உங்கள் உண்மையான கருத்தை சொல்லணும்). அப்பத்தானே நானும் கவிதை எழுதிப் பழக முடியும். கடந்த கவிதை வாசித்து பாராட்டியவர்கள், இதைப் போய் கவிதைன்னு எழுதியிருக்கியேனு, திட்டிட்டு போனவர்கள் எல்லாருக்கும் நன்றிகள். இதையும் வாசித்துவிட்டு அப்படியே கீழே ஆளுக்கு ஒரு வாக்கு போட்டுட்டு போயிடுங்க..

Tuesday, August 11, 2009

நான் மரித்தவன்....

நீண்ட மௌனம்….
திடீரென பீறிட்டு எழும்
அழுகுரல்கள்….
சிறு வயது முதல்
நான் கேட்டுப் பழகிய குரல்கள்….
எழ முயற்சிக்கிறேன்.

அவர்கள் ஏன் அழுகிறார்கள்….
என் கண்கள் பார்வையற்றதாகி….
எல்லாமே இருளாக இருக்கின்றது….

என்னால் அசையமுடியவில்லை
நன்றாகப் பழகிப் போனவர்களின் குரல்கள்
வெகு அருகில்
பின் விலகிப் போகின்றன.
நேரம்…காலம்…..
எதுவுமே தெரியவில்லை….
எல்லாமே இருளாக இருக்கின்றது…

கண்கள் மூடித்தானே இருக்கின்றன….
உறங்க முயற்சிக்கின்றேன்…
முடியவில்லை…..

கைகள், கால்கள், உடல் எதுவுமே
அசைவதாயில்லை…

திடீரென அழுகுரல்களின் ஒலி அதிகரிக்கின்றது
அப்படியே அழுந்தி
மெதுவாக குறைகின்றது….
உடலில் சின்னதாய் அசைவு…..

சிறிது நேரத்திற்கு அமைதி…..
என் உடலின் அசைவு நிற்கின்றது…
மீண்டும் அதே அழுகுரல்கள்…

மிக நெருக்கமாய் கேட்கின்றன….
சிறிது சிறிதாய் குறைகின்றன….
உடல் தகிப்பதை போல்
ஒரு உணர்வு…..

ஒரே புழுக்கமாய் இருக்கின்றது…..
என் உடல் எரிகின்றது…
எல்லாம் இப்போது எனக்கும் புரிகின்றது…
நான் மரித்துவிட்டேன்….

அண்மையில் சிக்மன் புரொய்ட் எழுதிய கட்டுரை ஒன்றினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "ஒவ்வொரு மனிதனும் ஆழ்மனதில் மரணத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றான்" என அவர் குறிப்பிடுகின்றார். அனைவருமே மரணத்தை வெறுக்கின்றார்கள்(நான் உட்பட).வாழ்வதிலே அனைவருக்கும் அத்தனை விருப்பு. அதற்காகத்தானே இத்தனை போராட்டமும். ஒரு வித்தியாசமான முயற்சியாக இறந்தவனாக இருந்து இதனை எழுதியிருக்கின்றேன்.

Thursday, August 6, 2009

பித்து


அதோ அங்கே ஒரு உருவம்….
வெள்ளையுடை,
சிறகுகள்
கையில் மந்திரக்கோல்….
அந்தரத்தில் பறந்தபடி….
ஒரு சிறுமி…..
பள்ளியில் படித்த தேவதையைப் போல்….

நெருங்கிச் செல்கிறேன்.
மிக நெருங்கி….
வெள்ளையுடை இல்லை…
கையில் கோல் இல்லை…..
சிறகுகளை காணவில்லை….

கந்தல் உடை…
அகோரமாக….
கையில் இரத்தம் வடியும் குழந்தை
சிவந்த கண்கள்….
சிறகுகளுக்கு இருந்த இடத்தில்…. சிலுவையொன்று…

மெல்ல மெல்ல அசைகிறது
என்னை நோக்கி
அந்த சிறுமியின் உருவம்…..
ஒடத் தொடங்குகிறேன்…
ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்….
மிகநெருக்கமாய்
அந்த உருவம்….

மிக மிக நெருக்கமாய்…..
மண்டையோடுகளையும்….
அழுகுரல்களையும்…ஒநாய்களின் ஒலங்களையும் தாண்டி…
என் ஓட்டம் நிற்கவில்லை…..
ஆனால் மிக நெருக்கமாய் அந்த உருவம்…..

இப்போது இன்னும் விகாரமாய்…..
கையில் இருந்த குழந்தையை காணவில்லை…..
சிலுவையும் மறைந்துவிட்டது.

சிறகுகள்…மந்திரக்கோல்…வெள்ளையுடை….
என்னைத் தாண்டி அந்த உருவம் பறந்து செல்கின்றது..

களைத்து அமர்கிறேன்.
தோல்களில் சுமை…கையில் இரத்த வாடை…
என் கால்களை இறுக்கிப் பிடித்தவாறு அந்த குழந்தை…..
என்னைப் பார்த்து சிரிக்கின்றது…

எழ முயற்சிக்கிறேன்…
கால்கள் சுயநினைவற்று…..
கண்கள் இருள்கின்றன…..

தூரத்தில் ஒரு பாட்டி, ஒரு காகம், ஒரு நரி……
எங்கோ, இவர்களைப் பார்த்த ஞாபகம்…..

பக்கத்திலே ஒரு மான் பாய்ந்தோடுகின்றது…..
வில்லோடு ஒரு உருவம்……

தூக்குக் கயிறு, யூதாஸ்….
குரங்குகள், தொப்பி வியாபாரி, முட்டை மனிதன்…

எல்லாமே என்னைச் சுற்றி…..
நெருங்கி மிக நெருங்கி…..

நான் பறக்கிறேன்.
எனக்கும் சிறகுகள்
கையில் குழந்தை இல்லை…..
வெள்ளையுடை…..
கையில் கோல்…..

அம்மம்மா கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்…
எதுவுமே கேட்கவில்லை…
எந்த மொழியும் எனக்கு புரியவில்லை..

அம்மாவின் கர்ப்பையில்…..
நீர்க்குடத்தில்.
அமைதியாய்…..

LinkWithin

Related Posts with Thumbnails