சரி, உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தை மாற்று மொழியிலிருந்து மீள் உருவாக்கப்பட்ட திரைப்படமாக கருதும் நேரத்தில், விரும்பியோ, விரும்பாமலோ அதன் மூலமான ஹிந்தித் திரைப்படமான (இதே கதைக்கருவை கொண்டதான ஆங்கிலப் படம் ஒன்றும் இருப்பதாக என் ஊடக நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பில் எனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் குறிப்பிடலாம்) வெட்னிஸ்டே திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிய போதிலும், வெட்னிஸ்டே இறுவட்டை தேடி பார்ப்பதற்கு இன்றே சந்தர்ப்பம் கிடைத்தது. ஆக, அதனைப் பார்த்தவுடன் எனக்குள் எழுந்த விடயங்களை இங்கே பதிவிடுகின்றேன்.
உன்னைப் போல் ஒருவன்: கமல்ஹாசன், மோகன்லால், லக்ஷ்மி, என அறிந்த பல முகங்களுடன், புதுமுகங்கள் சிலரும் இணைந்த நடிப்பில், ஷக்ரியின் இயக்கத்தில், ஸ்ருதி ஹாசனின் இசையமைப்பில் வெளியாகியுள்ளது. பொதுவாகவே கமலின் படங்கள் என்றதும் வேறு படங்கள் பார்ப்பதற்கான எதிர்ப்பார்ப்பிலும், மாறுபட்ட வகையான எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருக்கும். அது மாத்திரமல்லாது திரைப்படங்கள் வெளிவந்ததும் அதன் விமர்சனங்கள் விரைவாக வெளிவரத் தொடங்கி விடுவதாலும், திரைப்படங்கள் வெளியாகி நீண்ட இடைவெளி விடாது விரைவில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் பாடசாலைக் காலங்களில் இருந்தே என்னிடம் இருக்கின்றது. அந்த வகையில் உன்னைப் போல் ஒருவன் வெளியான அன்றே அதனை போய் பார்த்துவிட்டேன்.(நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரைப்படம் ஒன்றிற்கு நண்பர்கள் பட்டாளமாக போய் பார்த்துவிட்டு வந்தோம்.) ஆரம்பத்தில் தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் பின்னர் உன்னைப் போல் ஒருவன் என மாற்றப்பட்டது. இந்த திரைப்படத்தின் ஊடாக கமல் சொல்ல வரும் கருத்து, அல்லது இந்த திரைப்படத்தை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற முயற்சியின் ஊடாக கமல் சொல்ல வரும் செய்தி “தீவிரவாதத்தை அழிப்பதற்கு தீவிரவாதமே சிறந்த வழி என்பதாகும்”. கமல் ஒரு சிறந்த திரைக்கலைஞன் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. நானும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். சிறுவயது முதலே ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற பிரமாண்டங்களால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். வாழ்க்கையின் கருத்தியல் பற்றிய தேடலில், எனக்கான இடத்தினை அடையாளங் கண்டு கொண்ட பொழுது, திரையுலகை விடுத்து கமல்ஹாசன் சமூக அளவில் தனக்கான அங்கீகாரத்தை அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தும் விதங்களை உன்னிப்பாக அவதானித்த வகையில் அவரது கருத்துக்களில் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்படுவதை அறிந்துகொண்டேன்.
சண்டியர் என்ற பெயரில் உருவாகி விருமாண்டி என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தில் “கொலைசெய்யும் ஒருவன் சந்தர்ப்பவசத்தாலேயே, கொலையாளியாகின்றான், அவனுக்கு மரண தண்டனை என்பது இறுதி தீர்ப்பல்ல, அவனுக்கு வாழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். ஆனால், உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் சொல்லும் செய்தி அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நீளத்தைக் கொண்ட இந்த திரைப்படத்தில் திரைக்கதை விரைவானதாக இருக்கின்றது. பொதுவாகவே திரைப்படங்களில் காணப்படும் தேவையற்ற செருகல் பாடல்கள், தனியான நகைச்சுவை பகுதி என்று எதுவும் இல்லாது, எவ்வித விரசமான காட்சிகளும் இல்லாததாக கண்களுக்கு அலுப்பற்ற அல்லது அதிக அசைவுகளினால் கண்களை களைப்படையச் செய்யாத எளிமையான, நுண்ணிய ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டியது. இவற்றை தாண்டி பாத்திரத் தேர்வும் நேர்த்தியானதாக உள்ளது.
மோகன்லால் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என்று அருமையான தெரிவு. ஆனால், கமலின் திரைப்படங்கள் என்றாலே அதில் பாத்திரப் படைப்பு என்பது அதிகளவில் கவனஞ் செலுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும். இந்த இடத்தில் தான் இந்தித் திரைப்படத்தினை ஒப்பிட வேண்டிய தேவை எழுகின்றது. கமல் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்ரூதீன் ஷாவை பார்க்கும் எவருக்கும் அவரும் நம்மைப் போல் ஒரு மனிதர் என்ற உணர்வு ஏற்பட்டு விடும். அவ்வளவு நேர்த்தியாக அவரது பாத்திரத்திற்காக அவர் தயார்ப்படுத்தப்பட்டிருந்தார். தசாவதாரத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நடை, உடை, பேச்சு என எல்லாவற்றிலும் அதிக சிரத்தை எடுத்திருந்த கமல், இந்த பாத்திரத்திற்காக (இந்தியாவில் ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும், ரயிலில் பயணஞ் செய்யும் சாதாரண மனிதன், இன்னும்பிற) அவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றே கருதத் தோணுகின்றது. இந்த பாத்திரத்தில் அவர் ஒரு செல்வ செழிப்புடையவரன தோற்றத்தையே தருகின்றார். ஆக அதில் சிறிது அக்கறை செலுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து. கமலின் நடிப்பு தொடர்பில் எவ்விதமான கருத்தையும் கூற முடியாது. அவ்வளவு நேர்த்தி.
திரைப்படத்தின் கதையில் இருந்து விலகிச் செல்லாத இசைக்காக அறிமுக இசையமைப்பாளர் ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தே ஆகவேண்டும். திரைப்படத்தில் தனித்து இடம்பெறாவிட்டாலும் பாடல்களும் செவிக்கு இனிமையானதாகவே இருக்கின்றன. இவற்றிற்கும் அப்பால் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் நெருடலாக இருந்த மற்றுமொரு விடயம் தொலைக்காட்சி ஊடகவியலாளராக வரும் பெண் புகைப்பவராக காட்டப்பட்டிருப்பது. இதில் இருந்து வெளிப்படுத்தவிருக்கும் விடயம் இந்தியாவில் பெண் ஊடகவியலாளர்கள் புகைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதா? இந்த ஊடகவியலாளர் புகைப்பதாக காட்சியை அமைக்காதிருந்தால், எந்தவகையிலாவது படத்திற்கு இடைஞ்சலாக இருந்திருக்குமா? சமூக விழிப்புணர்வு உள்ளவராக தன்னை காட்டிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும், நபரான கமல், அதிலும் திரைக்கதைகளில் தனது கருத்துக்களை சேர்ப்பதற்கு அல்லது திணிப்பதற்கான எவ்வித தடையும் இல்லாத கமல் ஏன் இந்த தவறான விடயத்தை தன்னுடைய திரைப்படத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்? என்ற கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.
எனக்கு ஹிந்தி தெரியாது என்பதனால், படத்தை புரிந்து கொள்வதற்கு ஆங்கில உபதலைப்புக்கள் உதவியாக இருந்தன. இருந்தாலும் வெட்னிஸ்டே திரைப்படத்தில் ஆங்கில உரையாடலின் பங்கு வெகு குறைவானதாகவே இருக்கின்றது. ஜஸ்ட் எ ஸ்டுபிட் கொமன் மேன் என்பதே அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆங்கிலப்பதமாக இருக்கின்றது. ஆனால், உன்னைப் போல் ஒருவனில் கொஞ்சம் அதிகமாகவே ஆங்கிலமொழியிலான உரையாடலின் பயன்பாடு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேடைகளில் சிறப்பாக தமிழில் பேசும் திறன் வாய்ந்த கமல், எதற்காக இந்த வழிமுறையை கையாண்டார் என்பதும் எனது மற்றுமொரு கேள்விக்குறியாக காணப்படுகின்றது.இது கமல்ஹாசன் வாசித்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வேறு எதுவிதமான மாற்றங்களை வேண்டியோ எழுதப்படுவது அல்ல(அப்படியே கமல் வாசித்து ஏதாவது மாற்றங்களை செய்வார் என்றால், எவ்வித ஆட்சேபணையும் கிடையாது).
இது உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் பார்த்த கொமன் மேன் ஒருவனின் உளப் பிரதிபலிப்பின் பதிவு. உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை பார்க்கலாம். சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த பாத்திர தெரிவு என பல காரணங்களுக்காக. முக்கியமாக மூன்று, மூன்றரை மணிநேரம் என காலத்தை கொலை செய்யாது, விரைவாக ஒரு மணித்தியாலம் 50நிமிடங்களில் நிறைவடைகின்றது. இது திரைப்படம் தொடர்பான என்னுடைய கருத்து மாத்திரமே, எதிர்மறையான பின்னூட்டங்களையே அதிகம் வரவேற்கின்றேன்.
நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும் .
ReplyDeletehttp://kklogan.blogspot.com/2009/09/blog-post_21.html
நண்பரே, உங்கள் அழைப்புக்கு நன்றிகள், மாத இறுதி அறிக்கைகள் என்று வேலையிடத்தில் பணி அதிகம் இருப்பதால் உடனடியாக உங்களுக்கு பதிலையும், தொடர்பதிவையும் இடமுடியவில்லை. என்னை முதன் முதலாக தொடர்பதிவுக்கு அழைத்த நபர் நீங்கள் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த வாரஇறுதி நாட்களில் நிச்சயம் பதிவிட்டு விடுகின்றேன்.
ReplyDelete