Tuesday, October 12, 2010

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது
அடிமையில்லை. அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுகமாதே!
-பாரதி (புதிய ரஷ்யா)-
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை அடைந்து சோவியத் குடியரசு உருவாகிய வருடம் 1917 ஆகும். இந்த ஆண்டில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற புரட்சியே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1917ஆம் ஆண்டு பெப்பரவரி 23ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற புரட்சியின் போது பல தசாப்தங்களாக கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த ஜார் மன்னராட்சி முறைமை முடிவுக்கு வந்தது. எனினும், அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி ஜார் மன்னர் ஆட்சியில் இருந்து வேறுபடாத, அதேபோன்றதோர் ஆட்சிமுறையையே பின்பற்றியது.

இரண்டாவது புரட்சி, ஆயுதம் ஏந்திய புரட்சியாகும். ஒக்டோபர் 24,25ஆம் திகதிகளில் நடைபெற்ற புரட்சியாகும். ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போல்ஷ்விக்குகளின் செஞ்சேனை மேற்கொண்ட புரட்சி இது. இந்த புரட்சியே ரஷ்யாவின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறவுமுறைகளை மாற்றியமைத்த புரட்சியாகும். இந்த புரட்சி ஒக்டோபர் புரட்சி அல்லது போல்ஷ்விக் புரட்சி என்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

பின்னணி
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ரஷ்யா ஜார் மன்னர் பரம்பரையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் மிகவும் மோசமான பொருளாதார, சமூக சூழலை ரஷ்ய மக்கள் அனுபவித்து வந்தனர். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இந்த மன்னர்களுக்கு எதிரான போராட்டங்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இவற்றில் 1825ஆம் ஆண்டு நிக்கலஸ் மன்னருக்கு எதிராக நடைபெற்ற போராட்டமும், 1905ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டமும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியன. எனினும், இவை இரண்டுமே தோல்வியில் நிறைவுற்றன. இந்த போராட்டங்கள் சட்டப்பூர்வமான அரசாட்சியை உருவாக்குவது தொடர்பிலேயே முன்னெடுக்கப்பட்டன. முதலாவது உலகப் போரின் (1914-1918) போதான ரஷ்ய அரசின் நடவடிக்கைகளில் காணப்பட்ட மோசமான திட்டமிடல்களும், ஊழல்களும் மீண்டும் மக்கள் புரட்சிக்கான தேவையை உருவாக்கியது.

பெப்ரவரி புரட்சி
ஜார் மன்னராட்சி முறைமையை முடிவுக்கு கொண்டு வரும் புரட்சியாக 1917 பெப்ரவரி புரட்சி காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக காணப்பட்டமையால், முதலாவது உலக யுத்தத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தமையும் ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட காரணமாக அமைந்திருந்தது. ரஷ்யாவில் மனித வளங்கள் நிறைந்திருந்த போதிலும், போருக்காக அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 15மில்லியன் மக்களுக்கு ஆயுத மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்குவதற்கான வளங்கள் இல்லாதிருந்தது. வெகு சில தொழிற்சாலைகளே ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன. அத்துடன், மக்கள் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டமையால் உள்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் போரிற்கு சென்றவர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கான வசதிகளும் இல்லாது போனது. இதனால் முதலாவது உலகப் போரில் ஈடுபட்டிருந்த நாடுகளிலேயே அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடாக ரஷ்யா மாறியது. இதன் மறுபுறத்தில் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் நகரங்களில் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலைமைகளை பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் சபையான டூமா, இரண்டாம் நிக்கலஸ் தலைமையிலான ஜார் அரசாங்கத்தின் திட்டமற்ற யுத்த பங்கு குறித்து அதிருப்தியை வெளியிட்டது. ஆனால் அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் அனைத்து சிறிய கட்சிகளும் இணைந்து யுத்தத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட வறுமை, பட்டினி என்பன அரசாங்கத்திற்கு எதிரான உடனடியான புதிய ஜனநாயகத்துடனான புரட்சியின் தேவையை வலியுறுத்தி நின்றன. இதன் விளைவாக 1915ஆம் ஆண்டு லிபரல் கட்சிகள் அனைத்தும் இணைந்து பெரும்பான்மை பலத்துடன் கட்சியொன்றை அமைத்தன. 1916ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்த புதிய கட்சி யுத்தத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடருமானால் நாட்டின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுவிடும் என்று இரண்டாம் நிக்கலஸ் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதனையும் இரண்டாம் நிக்கலஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்டில் தொடர்ந்த வறுமை மற்றும் பட்டினியின் காரணமாக அடிப்படை உணவு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாண் கோரி 1917ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 23பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த போராட்டங்களில் சுமார் 90,000 பொதுமக்கள் கலந்துகொண்டனர். மக்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெப்பரவரி 24ஆம் திகதி பெட்ரோகிராட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் “யுத்தத்தில் இருந்து வாபஸ் வாங்கு”, “எதேச்சாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வா” என்ற கோரிக்கைகளை முழங்கியவாறு வீதிகளை வலம் வந்தனர். பெப்ரவரி 25ஆம் திகதி போராட்டம் தலைநகரம் முழுவதிலும் பரவியது. இந்த இரண்டு நாட்களும் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பல பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றன. பொலிஸ் நிலையங்கள் சிலவற்றை கைப்பற்றிய மக்கள் ஆயுதங்களை கைப்பற்றி, பொலிஸ் நிலையங்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

பெப்ரவரி 26ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். இதன்போது தொழிலாளர்களும், இராணுவத்தினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். எனினும், தளராத தொழிலாளர்கள் மீண்டும், மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாம் நிக்கலஸ் மன்னன் டூமாவை கலைத்தான். இதனை அடுத்து டூமா உறுப்பினர்கள் இரகசியமாக கூடி தனியானதோர் குழுவை அமைத்தனர். இதேவேளை, தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. பெப்ரவரி 27ஆம் திகதி இடைவிடாத போராட்டத்தில் 150,000 தொழிலாளர்களின் உதவியுடன் தலைநகரம் தொழிலாளர்கள் வசமானது. இந்த போராட்டத்தின் போது சுமார் 1,500 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நிக்கலஸ் மன்னனின் ஆட்சி உடனடியாக கலைக்கப்பட்டது. பெப்ரவரி 28ஆம் திகதி நிக்கலஸ் மன்னனின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத் தமது அதிகாரங்களை நிறுவி ரஷ்யா முழுவதும் பரவச் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், அது அந்த சந்தர்ப்பங்களை தவறவிட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் அங்கம் வகித்த பலர் தொழிலாளர் தரப்பினர்களாக இருந்தமையினால், முதலாம் உலக யுத்தத்தில் தமது நாட்டின் பங்கை அவர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அரசாங்கத்தில் தடுமாற்றமான நிலை உருவெடுத்தது. இந்த நிலையில் நாடு தாண்டி வாழ்ந்து வந்த போல்ஷ்விக்குகளின் தலைவர் விளாடிமர் இலியச் லெனின் ஏப்ரல் 16ஆம் திகதி தாய்நாட்டிற்கு திரும்பி, அப்போதைய அரசாங்கத்திடம் அவர் சில கோரிக்கைகளை முன்வைத்தார். நிலபிரபுக்களிடம் இருந்து நிலங்கள் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்றுறை கட்டியமைக்கப்பட வேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளே அவை. பெட்ரோகிராட் சோவியத்தில் போல்ஷ்விக்குகள் சிறுபான்மையினராகவும், மென்ஷ்விக்குகளே பெரும்பான்மையானவர்களாகவும் இருந்தனர். அதனால், ரஷ்யாவின் அதிகாரம் மிக்க அரசாங்கமாக உருவெடுத்த பெட்ரோகிராட் சோவியத், யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் ஒரு பதற்றநிலை காணப்பட்டது. இது புதிய அரசாங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்நிலையை தோற்றுவித்தது.

எனினும், மார்ச் 6ஆம் திகதி பெட்ரோகிராட் சோவியத் வெளியிட்ட அறிவிப்பில் இறுதி வெற்றி வரை முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடரும் என குறிப்பிடப்பட்டது. ரஷ்யாவின் பெரும்பான்மையான மக்கள் இந்த யுத்தத்தில் விருப்பம் இன்றி இருந்தமையின் விளைவாக மீண்டும் ஒரு முரண்பாடு நாட்டுக்குள் உருவெடுத்தது. அரசியல் நிர்வாக மாற்றமே ரஷ்ய மக்களின் உடனடி தேவையாக கருதப்பட்டது.

ரஷ்யாவை வந்தடைந்த லெனின் போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் போது உரையாற்றிய அவர், யுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போல்ஷ்விக்குகள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், பெரும்பான்மை பலம் தொழிலாளர்களின் உதவியுடன் சிறப்பான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் அதிகாரத்தை மக்கள் மயப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டார். போல்ஷ்விக்குகளின் போராட்டம் “சமாதானம், நிலம், உணவு” என்பதை குறிக்கோளாக கொண்ட கொள்கையாக மாற்றம் பெற்றது.

இந்த போராட்டங்களின் மத்தியில் ஜூன் 3ஆம் திகதி சோவியத்தில் அமைக்கப்பட்ட அகில ரஷ்ய காங்கிரஸிலும் போல்ஷ்விக்குகள் சிறுபான்மை பலத்தையே பெற்றனர். மென்ஷ்விக்குகளே பெரும்பான்மை பலமுடையவர்களாக இருந்தனர். ஒரு பக்கத்தில் அபிவிருத்தி மற்றும் சமூக முரண்பாடுகள் நாடெங்கிலும் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் பல மூடப்பட்டதுடன், வறுமையும், பட்டினியும் நாடெங்கும் பரவியது. அரசாங்கம் உடனடியாக மக்கள் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டங்களில் குதித்தனர்.

இந்த நிலையில் யுத்த களத்திற்கு சென்ற வீரர்கள், யுத்தத்தை கைவிட்டு நாட்டுக்கு திரும்பினர். ஜுன் மாதம் 18ஆம் திகதி போல்ஷ்விக்குகளின் தலைமையில் சுமார் 500,000மக்கள் பெட்ரோகிராட் வீதியில் இறங்கி தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சற்றுநிதானித்துக் கொண்ட அரசாங்கம், தொழிலாளர்கள் கூடுவதற்கு தடை விதித்தது. லெனினை கைது செய்யுமாறு பணித்தது. போல்ஷ்விக் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார் அரசாங்கத்தினைப் போன்றதொரு எதேச்சாதிகார முறையை புதிய அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியது. எதிர்கால நலன்கருதி ஸ்டாலின் மற்றும் போல்ஷ்விக் தலைவர்களின் வேண்டுகோளின் பேரில் லெனின் பத்திரமாக இரகசிய இடமொன்றில் தங்கவைக்கப்பட்டார். ஆகஸ்ட் 8ஆம் திகதி பாதுகாப்புக்காக மாறுவேடத்தில் பின்லாந்தை சென்றடைந்தார் லெனின். இந்த சந்தர்ப்பத்தில் போல்ஷ்விக்குகளை சரியான முறையில் வழிநடத்தி விரைவான போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும் பணியில் மிகவும் சிரத்தையாக ஈடுபட்டிருந்தவர் ஸ்டாலின். தொழிலாளர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரிப்பதற்கு இந்த காலம் மிகுந்த பயனுடையதாக இருந்தது. அது மாத்திரமல்லாது, லெனினுக்கு அடுத்து சோவியத் அரசை நிர்வாகிக்கக் கூடிய ஆளுமைப் பண்பு நிறைந்தவர் ஸ்டாலின் என்பது வெளிப்படையான காலப்பகுதி அது. லெனினின் ஆலோசனையுடன் இறுதி யுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்.

ஒக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவை வந்தடைந்தார் லெனின். பெட்ரோகிராட்டிலே, லெனின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்ட செஞ்சேனை, தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. அரசாங்க அலுவலகங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள், ரயில்வே நிலையம், அரசாங்க வங்கிகள் என்று அனைத்துமே செஞ்சேனை வசமானது. ஸ்டாலினின் மிகத் துல்லியமான திட்டமிடல்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்காலிக அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தப்பியோடி ஜார் மன்னர்களின் ஆடம்பர இல்லமாக இருந்த குளிர்கால அரண்மனையில் ஒளிந்துகொண்டனர். ஒக்டோபர் 25ஆம் திகதி ரஷ்யாவின் ஆட்சி அதிகாரம் புரட்சிக் குழுவின் கையில் வந்துவிட்டதை, போல்ஷ்விக்குகளின் மத்திய குழு இயங்கிவந்த ஸ்மோல்னி மாளிகையில் வைத்து லெனின் அறிவித்தார். ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு குளிர்கால அரண்மனையை சுற்றிவளைத்த செஞ்சேனை அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரையும் கைது செய்தது. ஓக்டோபர் 26ஆம் திகதி சுதந்திர சோவியத்தில் பொதுமக்கள் மத்தியில் புரட்சியின் வெற்றியை அறிவிக்க வந்த லெனின் இரண்டு ஆணைகளை மக்கள் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தார். முதலாம் உலக யுத்தத்தில் இருந்து ரஷ்யா விலகிக் கொள்வது மற்றும் நிலம் மீதான தனியுடமை நீக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்பது. புரட்சியின் வெற்றி ஆடம்பரங்கள், பட்டாசுகள், கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி சோவியத் அரசு மலர்ந்தது. இதன் பின்னர் தற்காலிக அரசாங்கத்தின் தலைவராக இருந்த க்ரன்ஸ்கி தப்பிச் சென்ற படைகளை சேர்த்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற செய்த முயற்சியும் லெனினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. செஞ்சேனைகள் அணிவகுக்க சோவியத் அரசு ஒரு நீண்டகால சோஷலிச அரசியல் அனுபவத்தை ரஷ்ய மக்களுக்கு வழங்கியது. உலக நாடுகள் பலவற்றின் விடுதலை உணர்வுக்கான படிப்பினையாகவும் இது விளங்குகின்றது.

உலகெங்கும் அடக்கி, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான சுயநிர்ணயத்திற்கு சரியான வரைவிலக்கணத்தை கொடுத்து நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் லெனின் ஆவார். சோவியத் அரசு இன்று சிதறுண்டுள்ளதாகவும், அது கம்யூனிசத்தின் தோல்வியாகவும் எதிரிகள் மார்தட்டி பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இன்று தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அடக்கி, ஒடுக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக இருந்து வரும் இலங்கை உட்பட பல நாடுகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்பதனை ஒதுக்கி வைத்துவிட்டு நிரந்தரமான முடிவினை எட்டமுடியாது என்பதனையும், பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் இணைதல் என்ற சுயநிர்ணயத்தின் நடைமுறைக்கு சோவியத் அரசு காலம் மறையாத உதாரணமாக இருப்பதையும் அவர்களால் ஒருபோதும் மறுக்க முடியாது.
'அராஜகம் பிறந்தநாள் தொடக்கம் சுரண்டலுக்கெதிரான எல்லாவிதமான வார்த்தை விளக்கங்களையும் தந்ததைத் தவிர வேறெதனையும் சாதிக்கவில்லை. அதனோடு அவர்கள் ஏன் முதலாளித்துவச் சுரண்டல் நடைபெறுகின்றது? ஏன் முதலாளித்துவச் சமூகமுறை உருவாகுகின்றது? ஏன் முதலாளித்துவம், சோஷலிசமாக அபிவிருத்தியடைய வேண்டும்? என்பதன் கட்டாய விதிகளையும், தொழிலாள வர்க்கப் போராட்டமே சோஷலிச சமூகத்தை படைக்க வல்லது என்பதையும் விளக்கிக் கூறுவதில்லை. அவர்களின் மனோநிலையானது புத்திஜீவிகளினதும் உதிரிதொழிலாளிகளினதும் மனோநிலையேதவிர, தொழிலாள வர்க்க மனோநிலையல்ல.'
-லெனின்-

Wednesday, August 4, 2010

எங்கள் பூமி..... எங்கள் இயற்கை.....

செவ்விந்தியத் தலைவர் சீயட்ல் (Si’ahl ), தம்முடைய பாராம்பரிய நிலம் தொடர்பில் எழுதிய கடிதம்.செவ்விந்தியர்களின் பாரம்பரிய உறைவிடத்தை அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியின் போது இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.இந்த கடிதம் 1855ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைத்த அந்த அரிய கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் சிறுமுயற்சி இது. திட்டமிட்ட குடியேற்றம், பலவந்தமான குடியேற்றம் என அன்றாட செய்திகளில் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் இந்த கடிதம் நமக்கும் ஒரு செய்தியை சொல்லத்தான் செய்கின்றது.
"உங்களால் வானத்தையும், நிலத்தின் அனலையும் வாங்கவோ அல்லது விற்கவோ எவ்வாறு முடியும்? உங்கள் சிந்தனை எமக்கு விசித்திரமாக இருக்கின்றது. நாங்கள் சுத்தமான காற்றையும், பிரகாசமான நீரையும் கொண்டிராவிட்டால் உங்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் என் மக்களுக்காக பூஜிக்கப்பட்டது. பிரகாசிக்கும் ஒவ்வொரு பைன் மரங்களும், கரையின் மணல் துகள்கள் ஒவ்வொன்றும், கரும்பலகைகளில் காணப்படும் ஒவ்வொரு துளி பனியும், ஒவ்வொரு பூச்சிகளும், நினைவுகளில் புனிதமாகவும், என் மக்களின் அனுபவங்களாகவும் இருக்கின்றன. இந்த மரங்களின் வளர்ச்சிக்கு காரணமான தாவரப் பால்கள் சிவப்பு மனிதர்களின் நினைவுகளை சுமந்து செல்கின்றன.

நட்சத்திரங்களுடன் சேர்ந்துகொள்ளும் பயணத்தில் வெள்ளை மனிதனின் இறப்பு, அவனுடைய பிறந்த நாட்டை மறந்துவிடச் செய்கின்றது. எங்கள் மரணம் இந்த பூமியை மறந்துவிடச் செய்யாது. ஏனெனில், அது சிவப்பு மனிதர்களின் தாயாக இருக்கின்றது. நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். இந்த பூமி எங்களில் ஒரு அங்கம். வாசனை மிகுந்த மலர்கள் என் சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் எங்கள் சகோதரர்கள். உயர்ந்த சிகரங்கள், புல்வெளியின் துளிகள், போனி குதிரையின் உடல் வெப்பம், அனைத்து மனிதர்கள் என்று நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

எங்கள் நிலப்பகுதியை வாங்குவதற்கு வொஷிங்டனின் பெரிய தலைவர்(ஜனாதிபதி) விருப்பம் தெரிவித்து நமக்கு செய்தி அனுப்பியுள்ளார். நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எங்களுக்காக வேறு இடமொன்றை ஒதுக்கி தருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அவர் எங்கள் தந்தை. நாங்கள் அவரது குழந்தைகள். எனவே, எங்கள் நிலத்தை வாங்குவதற்கான உங்களுடைய யோசனை குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம். ஆனால் அது இலகுவானது அல்ல. இந்த நிலம் எங்களுக்காக பூஜிக்கப்பட்டது.

ஓடைகளிலும், ஆற்றிலும் ஒடும் பிரகாசமான நீர், சாதாரணமான நீர் அல்ல. அது எங்கள் மூதாதையர்களின் இரத்தம். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், அது பூஜிக்கப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அது பூஜிக்கப்பட்டது, ஏரியின் தெளிவான நீரின் ஒவ்வொரு கோரமான பிரதிபலிப்பும் என் மக்களின் வாழ்க்கை நினைவுகளையும், நிகழ்வுகளையும் கூறுகின்றது என்பதனையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கூற வேண்டும். நீரின் சலசலப்பில் வெளிப்படும் சத்தம் என் தந்தையினது, தந்தையின் குரல்.

ஆறுகள் எங்கள் சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தை ஆற்றுகின்றன. எங்கள் படகுகளை சுமந்து சென்று, எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டமளிக்கிறது. எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், ஆறுகள் எங்களதும், உங்களுடையதும் சகோதரர்கள், உங்கள் சொந்த சகோதரர்கள் மீது பாசத்தை பொழிவது போல், ஆற்றையும் பராமரிக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்வதுடன், உங்கள் பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

வெள்ளை மனிதர்கள் எங்கள் முறைகளை புரிந்துகொள்ளமாட்டார்கள் என எங்களுக்கு தெரியும். நிலத்தின் ஒருபகுதி, அடுத்த பகுதியைப் போன்ற ஒன்று மாத்திரமே அவர்களுக்கு, இரவில் வந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு செல்லும் விருந்தினர்கள் அவர்கள். பூமி அவர்களது சகோதரர் இல்லை. ஆனால் அவர்களது பகைவன். அதை அறிந்தவுடன் அவர்கள் வேறிடம் செல்கின்றார்கள். அவர்கள் தமது தந்தையின் கல்லறைகளையும், பிள்ளைகளின் பிறப்புரிமைகளையும் மறந்து செல்கின்றார்கள். அவர்கள், தமது தாய், பூமி, சகோதரர், வானம் என்பவற்றை கொள்வனவு செய்யக் கூடிய, சூறையாடக் கூடிய, ஆடுகள் அல்லது பிரகாசமான முத்துக்களை போல விற்கக்கூடிய பொருட்களாக கருதுகின்றனர். அவர்களுடைய பசி இந்த பூமியை வேகமாக அழித்து வெறும் பாலைநிலத்தை மாத்திரமே எஞ்சச் செய்யும்.

எனக்குத் தெரியவில்லை. எங்கள் முறைகள், உங்கள் முறைகளைவிட வித்தியாசமானது. உங்களுடைய நகரங்களின் பார்வை எங்கள் சிவப்பு மனிதர்களின் கண்களுக்கு வேதனையைத் தருகின்றது. அதற்கு காரணம் சிவப்பு மனிதர்கள் காட்டுமிராண்டிகள் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

வெள்ளை மனிதர்களின் நகரங்களில் அமைதியான இடமே கிடையாது. வசந்த காலத்தில் இலைகள் அசைந்தாடும் ஒலியையும், பூச்சிகள் சேர்ந்து எழுப்பும் ஒலியையும் செவிமடுப்பதற்கு இடமொன்றும் இல்லை. நான் காட்டுமிராண்டியாய் இருப்பதனால் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். உரத்த சத்தம் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். குருவியின் தனித்த அழும் ஒலி அல்லது இரவில் குளங்களின் அருகில் தவளைகள் கலந்துரையாடும் ஒலியை கேட்காத மனிதன் வாழ்ந்து என்ன பயன்? நான் சிவப்பு மனிதன். என்னால் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை. குளத்தின் மீதாய் வீசும் காற்றின் மெல்லிய ஒலி, அதன் சுகந்தம், மழையினால் கழுவப்பட்ட அல்லது பைன் மரங்களினால் ஏற்பட்ட சுகந்தம் என்பவற்றையே இந்தியர்கள் விரும்புகின்றனர்.

சிவப்பு மனிதர்களுக்கு காற்றே விலைமதிப்பற்றது. அனைத்தும் சுவாசிக்கின்றன. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என அனைவரும் சுவாசித்தை பகிர்கின்றனர். வெள்ளை மனிதர்களும் அதே சுவாசத்தையே பகிர்கின்றனர். வெள்ளை மனிதர்கள் தாம் சுவாசிக்கும் காற்று குறித்து கவனிப்பதில்லை. பல காலங்களாக மனிதன் இறப்பது போல், துர்நாற்றங்களுக்கு உணர்வற்றவனாக இருக்கின்றான். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், காற்று நமக்கு விலைமதிக்க முடியாதது, எங்கள் பாட்டானார் முதலில் சுவாசித்ததும், இறுதி சுவாசத்தை விட்டதும் இந்த காற்றில்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், அதனை பூஜிக்கத்தக்கதாகவும், வெள்ளை மனிதர்கள் சென்று புல்வெளிகளின் மலர்களால் சுவையேற்றப்பட்ட காற்றை சுவைக்கும் இடமாகவும், வைத்திருக்க வேண்டும்.

எனவே, நீங்கள் நிலத்தை வாங்குவது தொடர்பில் அனுப்பியுள்ள திட்டம் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம். அதனை ஏற்றுக் கொள்ள தீர்மானித்தால், நான் ஒரு நிபந்தனையிடுவேன். இந்த நிலத்தின் மிருகங்களை வெள்ளை மனிதர்கள் தமது சகோதரர்களாக நடத்த வேண்டும்.

நான் ஒரு காட்டுமிராண்டி. எனக்கு வேறெந்த முறையும் புரியவில்லை. வெள்ளையர்களினால் கைவிடப்பட்டு புகைவண்டியில், மோதி அழிந்து, அழுகிப்போன ஆயிரக்கணக்கான காளைகளை நான் புல்வெளிகளில் கண்டுள்ளேன். நாங்கள் வாழ்வதற்காக மாத்திரம் கொலை செய்யும் காளைகளை விட, புகைவிடும் இயந்திர குதிரை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு காட்டுமிராண்டி.

மிருகங்கள்இல்லாத பூமியில் மனிதன் எதற்கு? மிருகங்கள் எல்லாம் அழிந்துவிட்டால், மனிதன் ஆன்மாவின் தனிமையில் இறந்து போவான். மிருகங்களுக்கு என்னவெல்லாம் நடக்கின்றதோ, அது விரைவில் மனிதனுக்கும் நடக்கும். எல்லாமே பின்னிப்பிணைந்தவை.

உங்கள் குழந்தைகளின் காலடியில் உள்ள நிலம், எங்கள் பாட்டானார்களின் சாம்பல் என உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும். எனவே, அவர்கள் இந்த நிலத்தை மதிப்பார்கள். எங்களைப் போன்ற வாழுயிர்களினால் பூமி செல்வச்செழிப்புடன் இருப்பதாக உங்கள் பிள்ளைக்கு கூறுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் கற்பித்ததை, உங்கள் பிள்ளைகளுக்கும் கற்பியுங்கள். வாழ்க்கை எனும் வலையை பின்னுபவன் மனிதனல்ல. அதில் ஓரிழை மாத்திரமே அவன். அந்த வலைக்கு அவன் என்ன செய்தாலும், அது அவனுக்கே செய்தமைக்கு ஒப்பாகும்.

வெள்ளை மனிதர்களின் கடவுள், அவர்களுடன் நடந்து, நண்பருக்கு நண்பராக இருந்தாலும், அவர்கள் பொதுவான விதியிலிருந்து விலகமுடியாது. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கலாம். பார்க்கலாம். ஒரு விடயம் எமக்குத் தெரியும். ஒருநாள் வெள்ளை மனிதன், எங்கள் கடவுளும், அவர்களது கடவுளும் ஒன்றென்பதை கண்டறிவான். தற்போது எங்கள் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு விரும்புவது போல, அவரையும் உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கு நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் உங்களால் முடியாது. அவர் மனிதர்களின் கடவுள். சிவப்பு மனிதன், வெள்ளை மனிதன் அனைவருமே அவரைப் பொறுத்தவரையில் சமமானவர்கள். அவருக்கு இந்த பூமி விலைமதிப்பற்றது. இந்த பூமிக்கு ஊறுவிளைவிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள், அதன் ஆக்குநர் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு ஒப்பானதாகும். பழங்குடியினர்களை தொடர்ந்து வெள்ளையர்களும் இல்லாது போகலாம். உங்கள் மெத்தையை மாசுபடுத்தினால், அந்த இரவு உங்கள் கழிவுகளிலேயே நீங்கள் காலஞ்செலுத்த நேரிடும்.

ஆனால், உங்களை இந்த பூமிக்கு கொண்டு வந்து, விசேட காரணங்களுக்காக இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள கடவுளின் பலத்துடன், நீங்கள் மேற்கொள்ளும் அழிவு நடவடிக்கையால், நீங்கள் மேலும் பிராகசமாக ஜொலிப்பீர்கள். இந்த விதி எங்களுக்கு மர்மம். காளைகள் எல்லாம் எப்போது படுகொலை செய்யப்பட்டது, காட்டு குதிரைகள் எப்போது அடக்கப்பட்டது, காடுகளின் இரகசிய மூலைகள் எப்போது பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் வாசத்தால் நிறைந்தது, மலை முகடுகளின் பார்வை சம்பாஷிக்கும் வயர்களால் எப்போது தொடுக்கப்பட்டது என்பவற்றை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கே காடுகள்? அழிந்துவிட்டன. எங்கே கழுகு? அழிந்துவிட்டது."


Friday, July 30, 2010

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள் நினைவு, போராட்டத்திலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்கி ஏற்றுக் கொண்ட “மாற்றங்களை வேண்டி” என்ற சொற்றொடர் இந்த நாவலில் இருந்து பெறப்பட்டதுதான். பல வருடங்களின் மற்றுமொரு நண்பருடன் இந்த நாவல் பற்றி கலந்துரையாடியதில் மீண்டும் அந்த நாவலை வாசித்து விட வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. இரண்டாவது முறையாக தீண்டாத வசந்தத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து புதிய பல உண்மைகளும், எண்ணங்களும் என்னுள் உருவாக ஆரம்பித்தன. கடல் கடந்த ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டதாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்று மாத்திரமே நினைத்திருந்த நாவல், நமது நாட்டிலும் ஆங்காங்கு காணப்படும் மறைமுகமான சாதிப் பிரச்சினைகளை எனக்கு நினைவுபடுத்தியது. ஒரு புத்தகம் என்பதை மீண்டும், மீண்டும் வாசிக்கும் போது ஒவ்வொரு முறையும் புதிய விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன். தீண்டாத வசந்தம், ஜி. கல்யாணராவினால் தெலுங்கில் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு. தமிழில் ஏ.ஜி. எத்திராஜூலு மொழிபெயர்த்துள்ளார்.

ரூத் என்பவர் தமது கணவர் ரூபெனின் மூதாதையர்களின் வாழ்க்கை நிலையையும், மேல்சாதி சமூகத்தினரால் தீண்டாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டமையினால் அவர்கள் பட்ட இன்னல்களையும் தீண்டாத வசந்தம் என்ற நாவல் வெளிப்படுத்துகின்றது. நிலாத்திண்ணை கிராமத்தில் பிச்சை, லிங்காலு பிள்ளையான எல்லண்ணா, அத்தை பூதேவியின் வளர்ப்பில் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, உறுமி நாகண்ணாவை சந்தித்து, கூத்தின் மேலும் அக்கறை கொண்டவனாகி, சுபத்திராவை மணந்து, நாகண்ணா இறக்க, தாழ்த்தப்பட்ட மக்களின் சோகங்களையும், அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயங்களையும் ஊர் ஊராகச் சென்று பாடல்களாக கட்டி, பறைச்சாமியராக, அவரது பிள்ளை சிவய்யா, சசிரேகாவை மணந்து நிலாத்திண்ணை சார்ந்த கிராமங்களில் பட்டினி, பஞ்சம், காலரா போன்றன அதிகரித்த நிலையில், பெற்றோர்களை இழந்து அவர்களை குழிகளில் போட்டு புதைத்துவிட்டு, ஊர் பெயர்ந்து, மதம் மாறி சீமோனாகி, ரூபென் என்ற பிள்ளை பெற்று, தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி, உயிரிழக்க, மருத்துவமனை போதகராக இருக்கும் ரூபென், அறிந்தவர்கள் ஊடாக தமது மூல பிறப்பிடமான நிலாத்திண்ணை சென்று தமது மூதாதையர்களின் வாழ்க்கைச் சோகங்களை கற்று, ரூத்தை மணந்து, ரூபெனின் பிள்ளைகள் இம்மானுவெல், ரோசி, அவர்களில் இம்மானுவெல் நக்சலைட் ஆகி, அவரின் பிள்ளையான ஜெசி, ரோசியின் பிள்ளை ரூபி மேல் காதல் கொண்டு, அவளை மணந்து, இருவரும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புகின்றார்கள். இதுதான் நிலாத்திண்ணையில் ஆரம்பிக்கும் தீண்டாத வசந்தம் நாவலின் சுருக்கமான கதை. இந்த நாவலில் இன்னும் பல முக்கியமான பாத்திரங்கள் வந்து நம்மை ஆக்கிரமித்துச் செல்கின்றன.

என்று ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் தமது அடையாளத்தையும், தமது அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களையும் சந்தித்தார்கள் என்பதனை ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக ஜி. கல்யாணராவ் எமக்கு கொண்டு வருகின்றார். காலத்திற்கு, காலம் வேறுபடும் சமூக வழக்கங்களின் மத்தியிலும் பறையர் என்றும், சக்கிலியர் என்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு தமது உரிமைகளை இழந்து வாழ்ந்திருந்தனர் என அவர் கூறுகின்றார். வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்திற்கு முன்பதாகவே பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பார்ப்பன சமூகத்தின் வேடத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

அக்கால மக்களின் நம்பிக்கைகள், கூத்துக்கள் ஊடாக கருத்துக்கள் பரப்பப்பட்ட விதங்கள் என ஐந்து தலைமுறைகளை கடந்த பயணித்து வரும் அனுபவம் நமக்கு கிடைத்து விடுகின்றது. தலைமுறை, தலைமுறையாக தொடரும் தீண்டாமை கலாசாரம், அதற்கு எதிரான மக்களின் போராட்டம் என்ற உருக்கமான கதை மாத்திரமல்ல. அதனையும் மீறி, அவற்றை வெற்றி கொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்த நாவல் எமக்கு உணர்த்துகின்றது.

இந்த நாவலின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரம், அரசியல், சமூக கட்டமைப்புக்கள் பற்றியும் ஆசிரியர் கூறத் தவறவில்லை. இவற்றுக்கும் மேலாக, மோகன்தாஸ் காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன சேவா சங்க ஊழியர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு ஆசிரியர் தயக்கங் காட்டவில்லை. அரிசனம் என்ற சொல் பயன்பாடு தொடர்பில் விவாதத்தை எழுப்பும் ஆசிரியர் ராமானுசம் என்ற பாத்திரத்தின் வாயிலாக “எப்படியும் பார்ப்பனீய சமூகம் பறைரையும், சக்கிலியரையும் தீண்டத் தகாதவர்களாக்கியது. அரிசனச் சொல்லால் அவர்களை அனாதைகளாகவும் ஆக்குகின்றார் காந்திஜீ” என்ற கருத்தை முன்வைக்கின்றார் ஆசிரியர்.

சுதந்திரத்திற்கு பின்னரும் கூட, இந்த மக்கள் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படாத நிலையை சுட்டிக்காட்டி நக்சலைட்டுக்களின் சமூக பங்கு குறித்து குறிப்பிடுகின்றார். பொதுவாகவே எல்லா நாவல்களும் குறிப்பிட்ட பிரச்சினையில் ஆரம்பித்து அந்த பிரச்சினையின் முடிவில் நாவலின் கதாநாயகன் அல்லது கதாநாயகியினால் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு இன்பம் உண்டாவதாக நிறைவடையும். இங்கு அவ்வாறில்லை. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத ஒரு பிரச்சினை. பறையர்களும், சக்கிலியர்களும் எவ்வாறு உருவானார்கள் என வேதங்கள் கூறும் காமதேனு கதையில் ஆரம்பித்து, பார்ப்பனீய சமூகத்தினால் உருவாக்கப்பட்ட புராணங்களும், வேதங்களும் எவ்வாறு தம்மை ஒதுக்கிவிட்டு தமது வசதிக்கு ஏற்றவாறு வரலாற்றை அமைத்துக் கொண்டன என்ற உண்மையையும் பல சந்தர்ப்பங்களில் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கின்றார் ஆசிரியர். நிறைவடையாத ஒரு பிரச்சினையை எமது முன்னால் நிறுத்துகின்றார். அதற்கான தீர்வுகளை தேடவேண்டிய கட்டாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றார்.

பசி, பட்டினி, பஞ்சம், தொற்றுநோய்கள் ஏற்பட்ட காலங்களில் கிறித்துவ மதமாற்றம் அதன் மூலம், தீண்டாதவர்கள் இலக்கு வைக்கப்பட்டு உதவி செய்யப்பட்ட விதம், பின்னர் மேல்சாதியினரும் மதம் மாறி, அங்கும் தீண்டாதப்படாதவர்கள் என்ற விளிப்பெயரில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒதுக்கப்பட்ட விதம் என்று தீண்டாத வசந்தம் நாவல் நகர்ந்து செல்கின்றது. நாவலைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்திலேயே நான் கூறியது போல், ஒவ்வொரு முறை வாசிக்கும் போது புதிது, புதிதாக நமக்குச் செய்திகளை தந்துக் கொண்டிருக்கும். மாவோயிஸ்டுக்கள், தெலுங்கானா போராட்டம் என இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தற்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைப் போராட்டம் புதிய வடிவத்தினைப் பெற்றுள்ளது. மாவோயிஸ்டுக்கள், தெலுங்கானா போராட்டம் என்பன பற்றிய முழுமையான பின்னணிகள் பற்றி அறிய ஆவலாய் இருப்பதுடன், இவற்றிற்குப் பின்னணியில் இந்த தீண்டாமை என்பதும் அடிப்படையாக உள்ளமையை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நூலின் பின்னிணைப்பாக இருக்கும் நேர்காணலின் ஓரிடத்தில், “தீண்டாத வசந்தம் வாழ்க்கையின் குறிப்புக்கள் மட்டுமே. அந்தக் குறிப்புகள் இன்னும் இருக்கின்றன. மூன்று பாகங்கள் எழுத நினைத்தேன். இது இரண்டாம் பாகந்தான். முதல் பாகமும், மூன்றாம் பாகமும் எழுத வேண்டியுள்ளது. என் முன்னோர் விட்டுச் சென்ற எவ்வளவோ வாழ்வின் பின்னால் இருக்கின்றன. அதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டி இருக்கின்றது. இந்தப் பூமியில் வாழும் மனிதர் உள்ளங்களிலே நல்ல எதிர்காலம் குறித்த நம்பிக்யை வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதுதான் சிறந்த படைப்பின் பொறுப்பாகும். இன்றையத் தேவையும் அதுதான். இந்த மண்ணிலே பதிய சமுதாயத்தைக் கனவு காணும் போர் வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கனவுகள் அனைத்தும் ஒரு புரட்சித் தொகுப்பு. காதல், போராட்டம், தியாகம் அத்தொகுப்பு முழுதும் விரவியுள்ளன. அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இதிலே எனக்கு திட நம்பிக்கையுண்டு. என் எழுத்தும், வாழ்க்கையும் வருங்காலத் திட்டமும் அங்கேதான் இருக்கும். தீண்டாத வசந்தத்தில் ரூத்தின் நினைவு போராட்டத்திலே ஓய்வு கொள்கின்றது. என் எழுத்தும் அப்படியே எனது ஒய்வும் போராட்டத்தில் தான். மூச்சு நின்றாலும், எழுதுகோல் நின்றாலும் அங்கேயே! என் எதிர்காலத் திட்டம் என் கைகளில் இல்லை. மக்கள் கைகளில் தான் இக்கின்றது. அவர்களின் போராட்டப் பாதையிலேயே இருக்கின்றது.” எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும்
தீண்டாததே!

பிறந்த சாதி தீண்டாதது,
செய்ய
விரும்பிய போராட்டமும் தடை
செய்யப்பட்டது
.

அது
நேற்றாக இருக்கலாம்
இன்றாகவும்
இருக்கலாம்
எந்தக்
காலமாகவாவது இருக்கலாம்.

இந்த
வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும்
தீண்டாததே!

நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் “தீண்டாத வசந்தம்” நாவல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த பதிவை வாசித்துவிட்டு (கொழும்பில் உள்ளவர்களுக்கு என்னிடம் உள்ள பிரதியை இரவலாக தர தயார். திருப்பி தந்துவிடுவீர்கள் என்ற உத்தரவாதம் அளித்தால்) ஒரு பத்து பேராவது இந்த நாவலை வாசிப்பர்களாயின், அவர்கள் ஊடாக அது நூறாகி, நூறு ஆயிரங்களாக மாறும்.

LinkWithin

Related Posts with Thumbnails