Tuesday, March 31, 2009

இனி வரும் காலம்கால சுழற்சியின்

பெரு நெருப்பில்

தனிமையின் நிழலாய்

வளர்ந்து செல்லும்

நிசப்தத்தில்

ஆளரவமற்ற வீதி

எதையோ

உணர்த்திச் செல்கிறது

பார்வைக்கு எட்டிய தூரம் வரை

உன் நினைவுகளைத் தவிர

எதுவுமேயில்லை ....


வெயிட்காலப்பொழுதுகளில்

நிழலாய் தொடரும்

உன்னை விலக்கி வைத்துவிட்டு

இருளை விழுங்கி

பயங்கர மௌனத்தையும்

அச்சத்தையும்

பிரசவிக்கும்

கொடுரமான தனிமையில்


பயணிக்கிறேன் ....

எஞ்சியிருக்கும் வாழ்வில் ........

கசிந்துருகி கண்ணீர் மல்கி .....


உன் நினைவுகளை சுமந்தவாறு
உறக்கத்தின் தொடக்கத்தில்
வாழும் நான்
விடியும் நொடியில்..
நீயில்லா மரண வாசலில்
விழிக்கிறேன்...


வழி நெடுகிலும் ...
உன் நினைவுகளை தவிர
எதையுமே அனுமதிப்பதில்லை
என் உணர்வுகள்..

ஆழமாய் நிறைந்து போன
உனக்கான என் நொடிகள்

நீ இல்லாத நான் ..
வேற்று கிரகத்தில்
யாரும் அற்ற தனிமையில் ...Wednesday, March 25, 2009

அமைதியை தேடி...

இரத்தம் தெறிக்கும் தேசம்
மயிர்க்கால்கள் வீங்க
தன்னையும் அறியாது
சிறுநீர் கழிக்கும் சிறுவன்.....
பேருந்து நெரிசலில் ,
தொலைந்து போன
ஒரு மாத வியர்வை ,
விண்மீன்களை போட்டிக்கழைக்கும்
தொடர் மாடி வீடுகள் ,
தொழில்நுட்ப நெரிசலில்
வீதியோர சந்திப்பில்
போலி புன்னகை ,
இத்தனைக்கும் மத்தியில்
கடற்கரை நோக்கி பயணிக்கும் கால்கள்,
அமைதி தேடி...........

(இந்த கவிதையும் "பயில்நிலம்" இதழில் வெளிவந்த ஒன்று தான். குழலி என்ற புனைப்பெயரில் எழுதியிருந்தேன். என்னால் எழுதப்பட்டு எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)

காலப் பிரசவம்


விழுதிறக்கி
வேர்கொண்டு
வீறுடை
வீரியமுடன்
வெளித்தள்ளுகிறது காலம்
சதைப்பின்டங்களை
உப்பலாய்
சிதைந்து
உருக்குலைந்து
அருவமாய்
எச்சில் வடியும் நாக்கோடு
மாமிச பிண்டம் தேடி
காலம் கரைகிறது .
இன்னொன்று...
இன்னுமொன்று....
வேறொன்று....
வேறில் ஒன்று .....
இன்னும் தீர்ந்தபாடில்லை...
பசி ...
("பயில்நிலம் " இதழில் இந்த கவிதையை குழலி என்ற பெயரில் எழுதியிருந்தேன், மீண்டும் வாசிப்பதற்கான ஆர்வத்தை இந்த கவிதை எனக்குள் உருவாக்கியதால் பதிவு செய்யும் எண்ணம் எனக்குள் எழுந்தது.)

Thursday, March 19, 2009

மரணத்தின் ப்ரியம்


ஒரு மரணத்தைப் பற்றி கேள்விப்படுகையில்
தயவு செய்து உங்கள் பணிகளை
தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள்

சொற்களற்ற பிரதேசமொன்றில்
இருப்பது போலான பாவனையில்
மௌனிக்காதீர்கள்

மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து
நாய்கள் குரைப்பதாகவும்
அமைதியற்ற உடலை
சுமந்தலையும் இறந்தவர்களுக்கான
பெரும்காற்று
கிளம்பி சுழன்றடிப்பதாகவும்
சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும்
நின்று நிதானியுங்கள்
பாதைகள் தோறும்
பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள்
எல்லோரின் காலடியிலும்
நசுங்கியபடியிருக்கின்றன.
-க.அம்சப்ரியா-
(நீண்ட நாட்களுக்கு முன்னர் அம்ருதா என்ற இந்தியா சஞ்சிகையொன்றில் நான் வாசித்த கவிதை இது. வாசிப்பதோடு, பலரை வாசிக்க வைக்க வேண்டிய ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை இந்த கவிதை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால் உங்களுடன் இந்த கவிதையை பகிர்ந்து கொள்கின்றேன்.)

இப்படியும் மனிதர்கள்


முதல் பதிவுக்கு பின்னர் ஒரு நீண்ட இடைவெளி கிடைத்தது. அடுத்த பதிவுக்கான விடயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நிறையவே கிடைத்தன. இருந்த போதிலும், பதிவு எழுதவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.வாசிப்பவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை அல்லது விமர்சிப்பதற்கு தூண்டுதலை ஏற்படுத்துமானால் அதுவே போதுமானது. சரி விடயத்துக்கு வரலாம். கடந்த வாரம் தொழில் நிமித்தமாக நான் கிழக்கு மாகாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். சுமார் 5 நாட்கள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டிய கட்டயாமும் எனக்கு ஏற்பட்டது. நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கொழும்புக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை மக்களையும் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரம் ஒன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த சைவ உணவகம் ஒன்றில் எங்கள் இரவு உணவை உட்கொள்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.( நான் ஒரு அசைவப் பிரியன் தான், இருந்தாலும் என்னோடு இருந்த சக ஊழியர் ஒருவர் சுத்த சைவ உண்ணி,அவருக்கு கம்பனி கொடுப்பதற்காக இரவில் மட்டும் நான் சைவம்). வழமை போல் ஒரு நாள் நாங்கள் இரவு உணவுக்காக அந்த உணவகத்திற்கு சென்றிருந்தோம். உணவுக்கான ஓர்டரை கொடுத்து விட்டு, உணவு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே அந்த சம்பவம் இடம்பெற்றது. நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து பார்த்தால், உணவகத்தின் காசாளர் அமர்ந்திருக்கும் இருக்கை நன்றாக தெரியும். ஒரு இரப்பவர் ( பிச்சைக்காரர் என்று அவரை அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) தனது இரவு உணவை பெற்றுக் கொள்வதற்காக தன்னிடம் இருந்த சில்லறைகளை காசாளர் இருந்த மேசையில் போட்டதும், அந்த காசாளர் பழைய காகிதம் ஒன்றை எடுத்து, அதன் மூலமாக அந்த சில்லறைகளை மேசையில் இருந்து அப்புறப்படுத்தியதோடு,அவருக்கு உணவு கிடையாது என்று வெளியே விரட்டவும், உணவகத்தின் ஏனைய ஊழியர்களும் காசாளருக்கு உதவியாக அந்த நபரை அடிக்காத குறையாக வெளியே பிடித்து தள்ளிவிட்டனர்.


இந்த சம்பவம் எனது மனதிலே பெரும் குழப்பம் ஒன்றை தோற்றுவித்தது.உணவகத்தினர் நடந்து கொண்ட விதம் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. காரணம், இரத்தல் தொழிலை நாங்கள் சோம்பேறிகள் செய்யும் ஒரு தொழிலாகவே கருதுகிறோம். கொழும்பை பொறுத்த வரையில் மது அருந்துவதற்கும் வேறு பல அனாவசிய தேவைகளுக்குமே அவர்கள் இரத்தற் தொழிலை செய்கிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் இரத்தற் தொழிலுக்காகவே தமது கைகளை வெட்டிக் கொள்வதாக அண்மையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். ஆனால், அந்த உணவகத்திற்கு வந்த நபர் வயதானவர். மிகவும் சிரமப்பட்டே உணவகத்திற்கு வந்தார்.அவர் இலவசமாக உணவை கோரவில்லை என்பது என்னுடைய மற்றுமொரு வாதமாக இருக்கின்றது. ஆக, இத்தனைக்கும் மத்தியில் அந்த நபருக்கான உணவு மறுக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் என்று எனக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.பணத்தை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது, அப்படியானால் அந்த இரப்பவரும் பணம் கொடுத்துத் தானே தனக்கான உணவே கோரினார். ஆக அதுவும் காரணமாக இருக்க முடியாது. உணவகத்தில் உணவு இருக்கவில்லை என்ற காரணத்தையும் கூற முடியாது. என்னைப் பொறுத்த வரையில் அவர் இரப்பவர் என்ற காரணம் மட்டுமே அதற்கான காரணமாக இருக்க முடியும்.இவர்கள் இரப்பவர்களை ஆதரிக்காமல் இருப்பது சில சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இவ்வாறான முதியவர்களை எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களுடன் ஒப்பிட்டு அனுசரிக்க வேண்டிய தேவையையாவது அவர்கள் உணர்ந்திருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாகின்றன. எனது நண்பர்கள் பலருடனும், இது தொடர்பில் நான் கலந்துரையாடினேன். அவர்கள் என்னுடைய முடிவுடன் இணங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த பதிவு பலரும் வாசிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் ஒரு பகிர்வின் தேவை குறித்து இந்த பதிவை எழுதியுள்ளேன். வாசிப்பதும், விமர்சிப்பதும் இனி உங்கள் விரல்களில்.......

Wednesday, March 11, 2009

நானும் வலைப்பின்னலில் ............

உலகமே வெகுவாக சுருங்கிவிட்டது. மின்னஞ்சல்- மின்னரட்டை என பல அவதாரங்கள் எடுத்த தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம், புளொக்கினூடாக புதியதோர் பரிணாமத்தை எட்டியிருக்கின்றது எனலாம். எதுவுமே ஒரு மையப்புள்ளியில் தொடங்குகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளும் எவரும், அது ஒரு மையப்புள்ளியில் முடிவை எட்டும் என்பதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.அண்மையில் நான் வாசித்த ஒரு சஞ்சிகை ஒன்றில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நான்காவது உலகப் போர் பற்றிய ஒரு எதிர்வுகூறலாக அதனை வரைவுபடுத்திவிடலாம். ஒரு பிரசித்திப் பெற்ற விஞ்ஞானியான அல்பிரட் ஐன்ஸ்டீனின் கருத்துதான் அது. அதில் " மூன்றாம் உலகப் போரில் மனிதன் எவ்வகையான ஆயுதங்களை பயன்படுத்தப் போகின்றான் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயம் எனும் அவர், நான்காவது உலகப் போரில் மனிதன் பயன்படுத்தப் போகும் ஆயுதம் வெறும் கல்லும், தடியும் மட்டுமே என அவர் கூறுகின்றார்.அதாவது:"I know not with what weapons World War 3 will be fought, but World War 4 will be fought with sticks and stones"
ஆக, இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு கட்டத்தில் தரித்த நிலையை அடையும். எதுவாகினும், இந்த வளர்ச்சி புதிய நட்பு வட்டத்தை உருவாக்கி தருவதுடன், நிகழ்வுகளை துரித கதியில் உலக அரங்கில் பதிவு செய்வதற்க உறுதுணையாகின்றது. மூன்றாம் உலக நாடுகள் இந்த புதிய வளங்களை நுகர்வதற்கு, வல்லாதிக்க நாடுகளைவிட காலங்கடந்தே கிடைக்கின்றது. அதிலும் சில நவீன வசதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் இந்த பழையதாகிவிட்ட வலைப்பின்னலில் கொஞ்சம் தாமதமாகவே எனக்கான பதிவை ஆரம்பிக்க காலம் கிடைத்திருக்கின்றது. எனது அனுபவங்களையும், எனக்கான ஆதங்கங்கள், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதற்கும், அதற்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராகியிருக்கிறேன். புதிதாக வாசிக்க விரும்பும், புதிதாக பல விடயங்களை அறியத் துடிக்கும், ஒரு சாதாரண தமிழனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புளொக் எனும் தொழில்நுட்ப சலவையில் பயனுள்ள பல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்.......

LinkWithin

Related Posts with Thumbnails