Wednesday, October 28, 2009

அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய இருசக்கர வாகனம் (மோட்டார் சைக்கிள்) களவாடப்பட்டுவிட்டது. அல்லது என்னுடைய கவனயீனம் அந்த களவுக்கு துணைபுரிந்துவிட்டது. 6மாதங்கள் திட்டமிட்டு வாங்கிய அதனை 2 வாரங்களே பயன்படுத்தினேன். இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமிருக்கின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இருந்தாலும் நண்பர்கள், உறவினர்கள் என்று என்னில் அக்கறைகொண்ட பலர் தொலைபேசியூடாக அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தமது துயரத்தைபகிர்ந்துகொண்டனர். துயரம் தெரிவித்த பலர் சொன்ன விடயம்மச்சான் உனக்கு லக் இல்லடா என்பதாகும்.

இந்த அதிர்ஷ்டம் (லக்) என்றால் என்ன? இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் முட்டாள்களுக்கான நியாயப்படுத்தல்களின் கருவிகள் என்பது என்னுடைய எண்ணம். ஒரு மனிதனுடைய முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவனது முயற்சியின் அளவை பொறுத்தது அந்த பலனின் அளவும். இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் ஒரு மனிதனின் எண்ணங்களையும், நடத்தையையும் பொருத்தே அமைகின்றன என்கிறார் ஹேர்ட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். ஒரு மனிதன் தன்னை அதிர்ஷ்டசாலியென்றோ, துரதிர்ஷ்டசாலியென்றோ அடையாளப்படுத்திக் கொண்டு அவனுடைய வாழ்க்கையின் வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும் அவனே காரணமாக அமைந்துவிடுகின்றான் என்பது அவரது முடிவாக இருக்கின்றது.

இது தொடர்பில் சிறந்த உளவியலாளரான அவர் செய்துள்ள ஆராய்ச்சி குறித்த அவரது அறிக்கையின் தமிழ்வடிவத்தை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

10 வருடங்களுக்கு முன்னர் அதிர்ஷ்டம் குறித்த ஆராய்ச்சி ஒன்றை செய்திருந்தேன். இந்த உலகில் சிலர் மாத்திரம் சரியான நேரத்தில், சரியான விடயங்களை செய்கிறார்கள். சிலருக்கு அதனை செய்ய முடிவதில்லை. இதனை இந்த உலகம் அதிர்ஷ்டம் என்றும் துரதிர்ஷ்டம் என்றும் வரையறுக்கின்றது. இது பற்றி அறிந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதன்பயன்தான் இந்த ஆராய்ச்சி. அதற்காக, தொடர்ச்சியாக அதிர்ஷ்டங்களையும் அல்லது தொடர்ச்சியாக துரதிர்ஷ்டங்களையும் அனுபவித்து வருபவர்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் என நான் தேசிய பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தேன்.

எதிர்பார்க்க முடியாத அளவில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் இருபாலாரிடமிருந்தும் எனக்கு கிடைக்கப் பெற்றன. அவர்களுடன் நிறைய விடயங்களை கலந்துரையாடிய நான், அவர்களுடைய வாழ்க்கை முறைமை குறித்தும் கண்காணித்தேன். அவர்களை சில பரிசோதனைகளுக்கும் உட்படுத்தினேன். இந்த பரிசோதனைகளின் முடிவுகளில் இருந்து நான் அறிந்து கொண்ட விடயம் என்னவெனில், “இவர்களுடைய நடத்தைகளும், எண்ணங்களுமே இவர்களுடைய வாழ்க்கையின் நன்மையான செயல்களுக்கும், தீங்கான செயல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளன.” என்பதாகும்.

அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அதேவேளை துரதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை நழுவவிட்டார்கள்.

அவர்களது இயலுமையின் அளவிலா இந்த அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் தங்கியிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள ஒரு சிறிய பரிசோதனையை நடத்தினேன். இரு சாராருக்கும் நான் ஒரு செய்திபத்திரிகையை கொடுத்தேன். அதனைநன்றாகப் பார்த்து அதில் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கையை தெரிவிக்குமாறு கூறினேன். அந்த பத்திரிகையின் நடுப்பகுதியில் “இதனை பரீட்சையாளரிடம் காண்பிப்பவருக்கு 50 அமெரிக்கடொலர்கள் வழங்கப்படும்” என்ற ஒரு சிறிய குறிப்பொன்றை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்தேன்.

இந்த குறிப்பு பத்திரிகையின் நடுப்பகுதியில் இரண்டு அங்குல அளவான எழுத்துக்களில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அனைவரும் எளிதாக வாசிக்கக் கூடியதாகவும் அந்த குறிப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்களால் அதனை அவதானிக்க முடியவில்லை. அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் அதனை அவதானித்திருந்தனர்.

அது மாத்திரமின்றி துரதிர்ஷ்டசாலிகள் எப்போதும் ஒரு பதட்டத்துடன் காணப்பட்டனர். இந்த பலவீனமே அவர்களது இயலுமையின் அளவை குறைத்து விடயங்களை தீர்மானிக்கக் கூடிய காரணியாக இருந்தது. இதன் விளைவாக அவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். ஒரு குறிப்பிட்ட விடயத்தை மாத்திரமே நினைவில் வைத்துக் கொண்டு புதிய விடயங்களை கவனிக்கத் தவறிவிட்டனர்.
சுருங்கச் சொல்வதானால், அவர்கள் விழாக்களுக்கோ, நண்பர்கள் ஒன்று கூடும் விருந்துகளுக்கோ செல்லும் போது தனக்கான சிறந்த துணையை தேடுவதில் கவனஞ் செலுத்துவதால் நல்ல பல நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடுகின்றனர்.

அல்லது, வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை தேடுபவர்கள்- குறித்த வேலைவாய்ப்பை மனதில் இருத்தி தேடும்போது அதனிலும் சிறந்த வேலைவாய்ப்புக்களை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் பதட்டமின்றி, சுதந்திரமானவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் புதிய விடயங்களை அவதானிப்பவர்களாகவும், சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இருந்தனர். அதிர்ஷ்டசாலிகள் எனக் கூறிக்கொண்டவர்கள் நான்கு விடயங்களை பின்பற்றுவதன் மூலம் வெற்றிகளை அடைகின்றனர் என்பதனை என்னுடைய ஆராய்ச்சிகளிலிருந்து அறிந்து கொண்டேன்.
  • சந்தர்ப்பங்களை அவதானிப்பதிலும், உருவாக்கிக் கொள்வதிலும் அவர்கள் திறனுடையவர்களாக இருந்தார்கள்.
  • அவர்களை தங்களுடைய உள்ளுணர்வை செவிமடுத்து தீர்மானங்களை எடுப்பவர்களாக இருந்தார்கள்.
  • சாதகமான எதிர்பார்ப்புக்கள் ஊடாக சுயமாக எதிர்வுகூறல்களை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
  • கெட்ட விடயங்களை, நல்ல விடயங்களாக மாற்றிக் கொள்ளும் தகைமைகளை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
என்னுடைய ஆராய்ச்சி முடிவு எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. இந்த நான்கு எண்ணங்களும் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவுமா? என்பதே அந்த ஆச்சரியம். எனவே, நான் ஒரு குழுவை நியமித்து, அவர்களை இந்த எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்ட அதிர்ஷ்டசாலிகள் என்ற மனப்பாங்குடன் செயலாற்றுமாறு கூறினேன்.

ஆச்சரியத்தக்க பெறுபேறுகள்! இந்த பயிற்சிகள் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை அடையாளங் காணுவதற்கும், உள்ளுணர்வை செவிமடுப்பதற்கும், சாதாகமான எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கும், பாதகமான விளைவுகளை தவிர்த்துக் கொள்வதற்கும் துணை புரிந்தன. ஒரு மாதத்தின் பின்னர் என்னிடம் வந்த அந்த குழுவினர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த குழுவில் 80வீதமானவர்கள், தாம் இப்போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்வதாகவும் கூறினார்கள். மிக முக்கியமாக கூறவேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலியாக மாறியிருந்தார்கள்.

எனவே, உங்களுடைய எண்ணங்களும், நடத்தையுமே அதிர்ஷ்டத்திற்கும், துரதிர்ஷ்டத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கின்றது. அன்றில், அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் உங்களை தொடர்வதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.

அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவதற்கு பேராசிரியர். வைஸ்மென் கூறும் நான்கு விடயங்கள்.
  • உங்கள் உள்ளுணர்வுக்கு செவிமடுங்கள் - அது எப்போதும் சரியானதாகவே இருக்கும்.
  • உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மாற்றி புதிய விடயங்களுக்கு இடமளியுங்கள்.
  • இன்றைய நாளில் நடந்த நல்லவிடயங்களை நினைவுபடுத்துவதற்கு சில நிமிடங்களை செலவழியுங்கள்.
  • எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னர் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்ற எண்ணத்தை உங்களில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் பிரச்சினைகளின்றி வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் பிரச்சினைகளோடு வாழப் பழகிக் கொண்டவர்கள். அதனால் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

Friday, October 23, 2009

405

மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது,

பனி
நிறைத்த பச்சைநிற
பசிபோக்கும் தாவரங்களின்
தலையொடித்து உயிர் வாழ,
405க்காய்
உழைப்பு சேர்க்கும்,
சிறகுகளற்ற
மலைக்குருவி நான்...
என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும்
ஒரு நாளின் இரு பொழுதில்,
சில நேரம் ஒரு பொழுதில்,
சில நேரம் வெறும் வயிறாய்,

ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே,
ஏதோ தேயிலை தரும் சாயத்தை
உயிர் கடத்த உழுகின்றோம்…

உலகெல்லாம்
பல பேராய் பொழுதிறங்கி
பேச்சளக்க கொஞ்சம்,
களைப்பிறக்க
நாம் பறிந்த கொழுந்துகள்
உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக,
பல சுவையேற்றப்பட்டு,

இன்னும் நாங்கள்
சீனியற்ற வெறுஞ்சாயத்தை
சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

என்
அப்பன்,
அவன் அப்பன்,
அவனுக்கும் அப்பன்,
இன்னும்….

என் பிள்ளை,
அவன் பிள்ளை,
அவனுக்கும் பிள்ளை
இன்னும்…..

முடிந்ததும்,
தொடர்வதும்….

அந்த சில சதுர அடி அறையில்,
அடைபட்டு
நா அடக்கப்பட்டு…..
உழைத்து
நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே,
எட்டாய் வளைந்து....

ஊதியம் உயர்த்திக் கேட்கும்,
பின் 405இல்
ஏதோ ஒரு கை அடக்கும்…
ஊர்க்காரன் தொழிற்சங்கத்தில்
சந்தா செலுத்தும்….
களவாய் விற்கின்ற
கள் உண்டு களிக்கும்…
பின் மண்ணோடு மண்ணாகி போகும்.

இதுதான் தொடரும்….

கவ்வாத்து கத்தி
கதிரறுக்கும்,
கொழுந்து செடிகளிலே களையறுக்கும்,
மலை செதுக்கும்
என்றறிவார் உலகத்தார்…

உழைப்பு உறிஞ்சு
உயிர்
வாழும்
பணந்தின்னி அட்டைகளை
பிணமாக்கும் நாள் வருமோ!
அன்றில்
பயம் வருமோ!
மலையகத்தின்
மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் நிலைக்க நாள் வருமோ!

பொழுதெழுந்து
கொழுந்தெடுக்க போறேன்…
பொழுதெழுமா நம் வாழ்வில்…
405இல் நானும்….

(இலண்டனில் இருந்து வெளிவரவிருந்த தீபாவளி மலர் ஒன்றிற்காக கடந்த மாதம் எழுதிய கவிதை. பலநாட்கள் கழிந்த நிலையில், இன்று மீண்டும் வாசித்த போது பிடித்திருந்தது. )

Tuesday, October 20, 2009

ஓக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்

1966 ஒக்ரோபர் 21 எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும். சாதியத்தையும்- தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அவ் எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் போராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்தது. ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுத்து சமத்துவத்தையும் சமூக அந்தஸ்தையும் நிலை நாட்டியது.இவ் ஒக்ரோபர் 21எழுச்சி இடம் பெற்று நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இன்றைய இளம் தலைமுறையினர் அன்றைய போராட்டங்களின் முக்கியத்துவமோ அவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருந்த சாதிய-தீண்டாமைக் கொடுமைகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் கூட சாதியக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெவ்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கும் போது அவற்றின் அன்றைய தீவிரத்தையும் சமூகத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.


கடந்த நூற்றாண்டின் முற்கூற்றிலிருந்து வடபுலத்திலே சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் வெளி வெளியான குரல்களாகி வளர ஆரம்பித்தன. ஐம்பதுகள் வரை அவற்றின் வளர்ச்சிகள் கோரிக்கைகளாக, மனுக்களாக, இரந்துரைகளாகவே இருந்து வந்தன. ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் ஓரளவிற்கு அழுத்தக் குரல்களாகி, எல்லைகளுக்கு உட்பட்ட சாத்வீகப் போராட்ட வடிவங்களையும் பெற்றது. அவையும் பாராளுமன்ற எதிர்பார்ப்புக்களாகவும் சீர்திருத்தக் கோரிக்கைகளாகவும் இருந்து வந்தன. சைவ கிறிஸ்தவ வேளாள ஆதிக்க சக்திகளிடமும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடமும் மன்றாடிக் கேட்கும் நிலையே காணப்பட்டது. அப் பாராளுமன்றத் தலைமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கிப் போட வேண்டிய பிச்சை போன்று எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்திற்கு மனுக்கள் அனுப்பி அற்ப சொற்ப சலுகைகளுக்காகக் காத்து நிற்கும் நிலையே நீடித்து வந்தது. சாதி அடிப்படையிலான அமைப்புகளும் குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பால் போராட்டப் பாதையில் செல்ல முடியாத நிலைக்குள்ளேயே சுழன்று வந்தன. சாத்வீகமான சமாதான வழிகளுக்கு அப்பால் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றப் பதவி அன்றைய செனட்டர் பதவி போன்ற சில பதவிகள் பட்டங்கள் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் உள்ள ஓரிரு படித்தவர்களுக்குக் கிடைத்தால் உரிமைகளை வென்றெடுத்து விடலாம் என்ற போலியான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. இதனால் 1960களின் நடுக்கூறு வரை தாழ்த்தப்பட்ட மக்களது சாதிய அடிமைத்தன வாழ்வில் பெரும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. சில சீர்திருத்தச் செயற்பாடுகள் இடம் பெற்ற அதேவேளை சாதிய முரண்பாடானது உள்ளார்ந்த வளர்ச்சி பெற்று வந்தது. அவ்வப்போது அதன் வெளிப்பாடுகள் வெவ்வேறு முனைகளில் அடையாளங் காட்டி நின்றன.
இச் சூழலிலேயே பழைய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து பிரிந்து பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையில் செல்வதற்கு தீர்மானித்த தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சி தோற்றம் பெற்றது. 1964ல் மாக்சிச லெனினிசப் பொதுவுடைக் கட்சியாகிக் கொண்ட வேளையில் புரட்சிகரப் போராட்டப் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகள், இளம் தலைமுறையினர் அணிதிரண்டனர். தெற்கிலும் மலையகத்திலும் பெருமளவு புரட்சிகர சக்திகள் திரண்டமை போன்றே வடக்கு கிழக்கிலும் புரட்சிகர உணர்வுடன் வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரண்டனர். அன்றைய தேசிய சர்வதேசிய நிலைமைகள் வர்க்கப் போராட்ட சக்திகளுக்கும் புரட்சிகர எழுச்சிகளுக்கும் சாதகமானவையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாகிய தமிழ்த் தேசியத்தை சைவ-வேளாள மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகள் தமது பாராளுமன்றப் பதவிகளுக்கான பாதையில் முன்னெடுத்தன. அதேவேளை சாதிய முரண்பாடும் ஒடுக்குமுறையும் உள்ளுர கனன்று கொண்டிருந்தது. ஒரு சிறிய உரசல் ஏற்பட்டாலும் அதுவே தீப்பிழம்பாகக் கூடிய கொதி நிலையில் அது காணப்பட்டது.இத்தகைய சாதிய சமூக முரண்பாட்டு அம்சத்தின் யதார்த்த நிலைமையை உரியவாறு அடையாளம் கண்டே புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானித்தது. 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ம் திகதி அன்று சாதிய-தீண்டாமையை எதிர்த்து சுன்னாகத்திலிருந்து ஒரு ஊர்வலத்தை ஆரம்பித்து யாழ் முற்றவெளியில் பொதுக் கூட்டத்தை நடாத்தவும் முடிவு செய்தது.

இவ் எழுச்சியில் பங்கு கொள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுவுடைமைக் கட்சியின் சகல அணியினரும் அவர்களுடன் ஆதரவான மக்கள் இளைஞர்களும் குழுமினர். ஆனால் பொலீஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தது. அதற்கு சாதிய ஆதிக்கம் கொண்டவர்களதும் பிற்போக்கு தமிழ் அரசியல் சக்திகளினதும் தூண்டுதல் இருந்தது. ஆனால் பொலீஸ் தடையையும் மீறி 'சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும்" என்னும் செம்பதாகையின் கீழ் சாதிய- தீண்டாமைக்கு எதிரா புரட்சிகர முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து புறப்பட்டு பிரதான வீதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைக் கடந்து செல்ல அணிவகுத்துச் சென்றது. வீதியின் குறுக்கே பொலீஸ் படை தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிந்தது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம், டாக்டர் சு.வே. சீனிவாசகம் வீ.ஏ. கந்தசாமி இ.கா. சூடாமணி கே. டானியல், டி.டி. பெரேரா எஸ்.ரி.என். நாகரட்ணம் போன்றோர் தலைமை தாங்கிச் சென்றனர்.

ஊர்வலத்தின் மீது பொலீஸ் படை மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டது. தோழர்களின் தலைகள் தோள்களில் இருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தன. மேற்சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கே.ஏ. சுப்பிரமணியம், வீ.ஏ. கந்தசாமி, இ.கா. சூடாமணி ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டு பொலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஊர்வலத்தில் திரண்டவர்கள் பொலிஸ் தாக்குதலுக்குப் பின்பும் கலந்து செல்லவில்லை. பொலிசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் யாழ் நகரின் கூட்டத்திற்கு ஊர்வலமாகச் செல்வதையே வற்புறுத்தி நின்றனர். மீண்டும் மோதல் வெடிப்பதைத் தவிர்க்க, முழங்கங்கள் இன்றி யாழ் நகருக்கு நடந்து செல்வதற்கு பொலீஸ் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அவ்வாறு எட்டு மைல்கள் நடந்து சென்ற ஊர்வலத்தினர் யாழ் நகரில் மிகப் பெரும் கூட்டத்தை நடாத்தினர். கூட்டத்திற்கு தோழர் டாக்டர் சு.வே. சீனிவாசகம் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன், கே. டானியல், சி.கா. செந்திவேல் ஆகியோர் உரையாற்றினர். "அடித்தால் அடியை வாங்கிக் கொண்டிருந்த அடிமைத்தன நிலையை மாற்றி அடித்தால் திருப்பி அடிக்கும் புரட்சிகர நிலைப்பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகரப் போராட்ட நிலைப்பாடாக முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு எமது கட்சி வழிகாட்டி தலைமை வழங்கும்" என்ற அறை கூவலை கட்சியின் சார்பாக விடுத்தார். அன்று சுன்னாகத்தில் சாதியத்திற்கு எதிராகத் திரண்டெழுந்த மக்களுக்கும் தலைவர்களுக்கும் விழுந்த அடியானது "பிட்டுக்கு மண் சுமந்த சிவபிரான் மீது வீழ்ந்த அடி ஜீவராசிகள் அனைத்திற்கும் வீழ்ந்தது" என்று புராணக் கதையில் கூறப்பட்டது போன்றே தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவர் மீதும் வீழ்ந்த அடியாகியது.

அன்றைய எழுச்சியைத் தொடர்ந்து சாதிய தீண்டாமைக்கு எதிரான வடபுலம் தழுவிய கூட்டங்கள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள் எனப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டன. அவற்றை சாதி ஆதிக்க சக்திகள் பொலீஸ் துணை கொண்டு அடக்க முற்பட்டன. அத்தகைய அடக்குமுறைகள் மேன்மேலும் அவ் இயக்கம் மக்களிடையே பரவக் காரணமாகியது. மக்கள் போராட்டங்களில் இறங்கத் தயாராகி வந்தனர். கட்சி அதற்கான போராட்ட மார்க்கத்தையும் செயல் தந்திரத்தையும் வகுத்து நின்றது.

சங்கானையில் உள்ள தேனீர்க் கடைகளில் சமத்துவம் கோரி போராட்டம் ஆரம்பித்தது. அமைதியாகவும், சமாதனமாகவும் சமத்துவத்துடன் தேனீர் தரும்படி கேட்டபோது மறுப்பும், பலாத்காரமும் பதிலாகக் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து சங்கானையின் நிச்சாமம் கிராமம் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டது. அவர்களது துப்பாக்கிக்கு சின்னர் கார்த்திகேசு என்பவர் இலக்காகி உயிர் நீத்தார். வீடுகள் எரியூட்டப்பட்டன. பலர் காயங்கள் பட்டனர். ஆனால். மக்கள் அடிபணிந்து விடவில்லை. பதிலுக்கு போராடும் திடசங்கற்பத்துடன் எதிர்த்து எழுந்தனர். எதிரிகளின் பிற்போக்கு பலாத்காரத்தை முறியடிக்க தமது கைகளில் ஏந்தக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் எடுத்தார்கள். மக்களைப் பாதுகாத்து உரிமைகளை வென்றெடுக்க போராட்ட முன்னணியில் சங்கானை மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கியப்பட்டு அணிதிரண்டனர். சங்கானைப் போராட்டத்தின் உக்கிரத்தையும் மக்கள் காட்டிய புரட்சிகர உறுதிப்பாட்டையும் தொடர்ந்து வடபுலம் எங்கும் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் முன் செல்ல ஆரம்பித்தன.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தியாகி சின்னர் கார்த்திகேசு அரங்கில் 1967ல் தோற்றம் பெற்றது. பொதுவுடைமை இயக்க ஆதரவாளரும் சமூக அக்கறை மிக்கவருமான எஸ்.ரி.என். நாகரட்ணம் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவர்களாக டாக்டர் சு.வே. சீனிவாசகம் மான் முத்தையா கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். வெ. சின்னையா, சி. கணேசன் இணைச் செயலளார்களாகவும் கே. டானியல், அமைப்பாளாராகவும்தெரிவு செய்யப்பட்டனர். முப்பத்தைந்து பேர்வரை பொதுச் சபையாகவும் தெரிவு பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரு சாதிய அமைப்பாக அன்றி சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து நின்ற பொதுவுடைமைவாதிகள் ஜனநாயக சக்திகள் முற்போக்கு சிந்தனையுடையோர் நல்லெண்ணம் கொண்ட சமூக நலன் விரும்பிகள் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பாகவே செயலாற்றியது. அதேவேளை புரட்சிகர பொதுவுடமைக் கட்சியின் வர்க்கப் போராட்ட நிலை நின்ற அணுகுமுறையில் அமைந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும் அவ்வெகுஜனப் போராட்டங்களை வழி நடாத்திச் சென்றது.

சங்கானைப் போராட்டத்தைத் தொடர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, கரவெட்டி- கன்பொல்லை போன்ற பகுதிகளில் தேனீர்கடைப் போராட்டங்கள் வெடித்தன. அப்போராட்டங்கள் சாதி ஆதிக்கவாதிகளையும் சாதி வெறியர்களையும் அவர்களுக்கு பக்கபலமாக நின்ற ஆளும் வர்க்க அரசு யந்திரமான பொலீசையும் எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் தமது போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுத்தனர். அதே வேளை மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோவில் போன்ற பெரும் கோவில்களிலும் ஏனைய கோவில்களிலும் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் இடம் பெற்றன.

சுமார் ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போராட்டங்கள் சாதிய தீண்டாமையை உடைத்தெறிந்து கொண்டது. தேனீர்க் கடைகள், ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டது. இவற்றை வெற்றிகளாகப் பெற்றுக் கொள்வதற்கு இடம் பெற்றற புரட்சிகரமான வெகுஜனப் போராட்டங்கள் பல்வேறு வகையிலான அனுபவங்கள் பட்டறிவுகளை வழங்கியது. எதிரிகள் யார், நண்பர்கள் யார், என்பதைத் தெளிவாக்கியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உயர்த்தப்பட்டோர் எல்லோரும் எதிரிகள் அல்லர். அவர்கள் மத்தியில் உள்ள சாதி ஆதிக்க சக்திகளும் அவர்களது கையாட்களான சாதி வெறியர்களும் இவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்த அரசு யந்திரமான பொலீஸ் படையும் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளாக இருந்தனர். அதேவேளை அப்போராட்டங்களில் உயர்த்தப்பட்டோர் மத்தியில் உள்ள பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், சமூக நலன் விரும்பிகள் இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து நின்று போராடினர் என்பது மிக முக்கிய விடயமாகும். சாதிவாதமும், தலித்தியமும் முன்னிறுத்தப்படக் கூடிய இன்றைய சூழலில் இவ் விடயம் வர்க்க நிலைப்பாட்டிற்குரிய வரலாற்று அனுபவமாக அமைந்திருந்தது.

சட்டரீதியானதும் சட்டமறுப்பானதும் ஆயுதங்களைக் கையாண்டதுமான அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில் 15 வரையிலானவர்கள் தமது இன்னுயிர்களை இழந்து தியாகிகள் ஆகினர். பலர் பாடுகாயங்கள் பட்டனர். சிறை சித்திரவதைப் பட்டனர். ஆனால் எச்சந்தப்பத்திலும் போராட்டத்தை தளர்த்தவோ கைவிடவோ இல்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இடம் பெற்ற ஒக்ரோபர் 21 எழுச்சியம் அதன் பாதையிலான போராட்டங்களும் பெறுமதிமிக்க அனுபவங்களையும் பட்டறிவுகளையும் தந்தன. பொதுவுடைமைவாதிகளின் வெகுஜனப் போராட்டப் பயிற்சிப் பட்டறைகளாகவும் பிற்கால தலைவர்களின் தொட்டிலாகவும் அன்றைய வெகுஜனப் போராட்டங்கள் அமைந்தன. இன்றைய தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் உச்ச நிலையில் இருந்து வரும் இன்றைய சூழலில் அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் அனுபவங்கள் மிகக் கனதியும் பெறுமதியும் மிக்கவையாகும். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவெனில் தமிழ்த் தேசியவாதத்தை முன் நிறுத்துவோர் அத்தகைய வெகுஜனப் போராட்டங்களில் இருந்த பல்வேறு சாதகமான அம்சங்களைப் படிப்பதற்கு தயார் இல்லாத நிலையில் இருந்து வருவதாகும். அன்று கூட தமிழ்த் தேசியவாதத்தின் பாராளுமன்றத் தலைமைகள் இவ்வெகுஜனப் போராட்டங்களை துளியளவும் ஆதரிக்கவில்லை.

கடந்த காலத்தின் படிப்பினைகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்திற்கு அவசியமானவையாகும். அவ்வாறே நிகழ்காலம் தான் எதிர்காலத்திற்கு அடிப்படையாகின்றது. எனவே தமிழர் வரலாற்றில் நீண்டு நிலைத்து வந்த உயர்த்தப்பட்டோராகவும் தாழ்த்தப்பட்டோராகவும் பிரித்து இரண்டு வகைத் தமிழரை நிலைப்படுத்தி வந்த சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து முறியடித்த வரலாற்று நிகழ்வே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியாகும். அதில் முன்னின்று போராடியவர்கள் தலைமை தாங்கியவர்கள் முன்னோடிகளாக இருந்தவர்களில் பலர் இன்று மறைந்து விட்டனர். அத்தகையோரை இந்த நாற்பத்து மூன்றாவது ஆண்டு நினைவின் போது உயர்ந்த புரட்சிகர கௌரவத்துடன் நினைவு கூர்கின்றோம்.

முரண்பாடுகளின் வகைகளையும் வளர்ச்சிகளையும் யதார்த்த நிலைமைகளின் ஊடாக அடையாளம் கண்டு அவை சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு சரியான கொள்கை வகுத்துக் கொள்வது பிரதானமானதாகும். அத்தகையை நிலைநின்று மக்களை அணிதிரட்டி சரியான தந்திரோபாயங்களின் ஊடாக போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது என்பதனையே அன்றைய போராட்டங்கள் வரலாற்று அனுபவமாக வழங்கிச் சென்றன என்பதை இவ்வேளை நினைவு கூர்ந்து கொள்வது அவசியமானதாகும்.

நன்றி: புதியபூமி

Monday, October 19, 2009

தேவதையிடம் 10 வரங்கள்: காதல் விண்ணப்பம்

பொதுவாகவே, இந்த தேவதை, கடவுள், வரங்கள் போன்ற சமாச்சாரங்களில் துளியளவும் நம்பிக்கை இல்லாதவன் நான். இருந்த போதிலும், சகா லோகநாதன் அனுப்பிய தொடர்பதிவுக்கான சங்கிலியை எவ்விதத்திலும் துண்டாடி விடாது, அவரது அழைப்புக்கான கௌரவமாக இந்த பதிவை இடுகின்றேன். இங்கு நான் வரம் கேட்பதற்காக அணுகும் தேவதை கொஞ்சம் மாறுபட்டவள். சிறு வயதில் பாட்டி சொல்ல கேட்ட தேவதை கதைகள், அதைத் தொடர்ந்து கனவில் வந்து பணக்காரனாக, நடிகனாக, விளையாட்டு வீரனாக, கவிஞனாக என என்னை மாற்றிய தேவதைகள் நிறையவே உண்டு. கையில் ஒரு மந்திரக்கோல், இறக்கைகள், வெள்ளைநிற உடை, சுற்றி பிரகாசம் என்று கற்பனையிலும், திரை காட்சியிலும் கண்ட தேவதைகளின் உருவம் இது.
இவையெல்லாவற்றையும் விட, இந்த வயதில் என்னில் (எம்மில்) வரும் தேவதையிடம் (அதுதான் புரியலையா, காதலி) கேட்கும் வரங்கள் என்று சொன்னால், 10 என்பது கொஞ்சம் அதிகம் தான். என்னைப் பொறுத்தவரையில் இந்த தேவதையும், இன்று வரையில் வெறும் கனவாகவே இருப்பதனால், இன்னும் சிக்கல் தீர்ந்தபாடாயில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில், இறுதியாக என்றோ ஒருநாளில் என் வாழ்நாளில் இடம்பிடிக்கப் போகும் என்னில் பாதி, எனது துணைவி எனக்குத் தேவதைதானே. அதனால், இல்லாத, இனிவராத தேவதையை தேடி வரம் கேட்காமல், என்னில் கலக்கப் போகின்ற தேவதையிடம் நான் கேட்கும் வரங்களாக (ஒரு காதல் விண்ணப்பம். ஹாஹாஹாஹாஹா) இதை எழுதுகின்றேன். சகா லோகநாதன் இதை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

முதலாவது
வரம்

பரஸ்பர புரிந்துணர்வு. நீ என்னைப் புரிந்துகொள்ளவும், நான் உன்னைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். அன்பின் நிலைத்திருக்கும் தன்மைக்கு புரிந்துணர்வே பிரதானமானதாக இருக்கின்றது.

இரண்டாவது வரம்
அன்பு, என்னில் நீயும், உன்னில் நானும் நமக்கான வாழ்விற்கு அஸ்திவாரம்.

மூன்றாவது வரம்
பகிர்தல், நமக்குள் எவ்வித மறைவும் இன்றி, நாம் வெளிப்படையானவர்களாக இருக்க வேண்டும். என்னை நீ அறிந்து கொள்ளவும், உன்னை நான் அறிந்து கொள்ளவும் இது அடிப்படையாக அமையும்.

நான்காவது வரம்
நமக்கான தனிமை, குடும்ப வாழ்வின் இன்றியமையாத பகுதி.

ஐந்தாவது வரம்
அரவணைப்பு, உனக்கான துயரங்களில் நானும், எனக்கான துயரங்களில் நீயும் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளல்.

ஆறாவது வரம்
இணைந்த தலைமைத்துவம், நமது குடும்பத்தில் நாம் தலைவர்கள். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில், ஏக தலைவனாக என்னை மாறவிடாது, நாம் இருக்கும் சமத்துவ சந்தர்ப்பம்.

ஏழாவது வரம்
நட்பு. கணவன், மனைவி என்ற வட்டத்துக்குள் மாத்திரம் நம்மை அடைத்துக் கொள்ளாது, நல்ல நண்பர்களாக எமது வாழ்க்கையை தொடரும் அந்நியோன்னியம்.

எட்டாவது வரம்
பிரிவற்ற உறவு. எந்த சந்தர்ப்பத்திலும் நீ என்னை பிரியாது, நான் உன்னை பிரியாது, வாழ்வின் சிக்கல்களை கலந்து பகிர்ந்து கொள்ளும் உறவு.

ஒன்பதாவது வரம்
ஆளுமை. எனது தவறுகளை திருத்தவும், என்னை ஆற்றுப்படுத்தவும் கூடிய ஆளுமை. நமக்கான உலகில் நாமாக தீர்மானிக்கக் கூடிய விடயங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆணாதிக்கம் என்பது என்னுள் எந்த கணத்திலும் தோன்றிவிடாது நீ என்னில் சமத்துவத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

பத்தாவது வரம்
நாம் இந்த உலகில் மனிதர்களாக மாத்திரம் இருக்க வேண்டும். மதம், ஜாதி, வர்க்கம், குடி என்ற அடையாளங்களுக்குள் எம்மை திணித்துக் கொள்ளாது.
10 வரங்கள் என்றதுமே, அட 10 தானே என ஆரம்பித்து, ஐந்தை எட்டியதுமே கண்ணை கட்டிவிட்டது. இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மூளையை கசக்கிப் பிழிந்து என்னுடைய கனவுகளை பதிவிட்டு விட்டேன். எல்லாம் முடித்த பின்னர் சங்கிலிக்கு தொடர்பு கொடுக்க இன்னும் 5 பேரை அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு வந்துவிட்டது. ஆனாலும், அதில் இருந்து தப்பிப்பதற்கும் ஒரு வழி, அண்மையில் சக பதிவர் ஒருவரின் தொடர்பதிவில் கண்ட வாசகம், இப்போது பயனளிக்கின்றது. அதாவது, இந்த தொடர்பதிவை வாசித்து விட்டு, “அட நானும் தேவதையிடம் வரங்கள் கேட்கணும்” அப்படின்னு நினைக்கின்ற அனைவரும் சங்கிலியில் இணைந்து கொள்ளலாம். அப்படியே நம்மதான் உங்கள அழைச்சது அப்படின்னும் சின்னதா ஒரு குறிப்பு போட்டுடீங்கன்னா ரொம்ப மகிழ்ச்சி.

வந்ததுதான், வந்தீங்க அப்படியே ஒரு வாக்கு போட்டுட்டு போயிருங்கோ!!!!!

LinkWithin

Related Posts with Thumbnails