Wednesday, May 27, 2009

எதுவுமே மாறவில்லை...

எங்கோ
வீசிக் களைத்த காற்றின் எச்சம்
மீண்டெழுந்து
உடல் தழுவிச் செல்லும்,
காஸாவின் மேற்குக் கரையில் கேட்ட அதே கூக்குரல்
வன்னியில் எதிரொலிக்கின்றது..
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தாய்,
சோமாலியாவில் அனாதையான குழந்தைகள்….
ருவாண்டாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் சிதைவுகள்,
ஆப்கானிஸ்தானில் புதைக்கப்படுகின்றன…
ஈரானின் ஏவுகணை பரிசோதனை
கண்டிக்கும்
யுத்த வியாபாரி அமெரிக்கா,
ஆயுள் வளர்க்க மருந்து தேடும் விஞ்ஞானம்,
அழிவுக்காய் ஆயத தயாரிப்பில்...
கழிவகற்றும் தொழிலாளிக்கு
விரல் படாத தூரத்தில்
எட்டிநின்று கூலி...

வல்லரசு போட்டி,
பலிக்கடாக்களாய் பல நாடுகள்...
உள்நாட்டு யுத்தங்கள்
உலக நாடுகளில் தேர்தல் பிரசாரம்.....

செவ்வாயில் வாழ ஆராய்ச்சி
பூமியில் உயிர் தின்னும்
பிண வெறியர்களின் பட்டியல்
நீண்டு செல்லும் சாக்காடு….

கல்லறைகளாக வாழ்விடங்கள்,
தடுப்பு முகாம்கள்,
அகதிகள், பட்டினி, வறுமை, ஆதிக்கம், அழுகை,

இத்தனைக்கும் மத்தியில்
திரையரங்கில்
நிரம்பி வழியும் மக்கள்…..

ஜனநாயகம்
சோஷலிசம்
குடியரசு என இன்னும் பிற
எல்லாமே புத்தகங்களில்....

எதுவுமே மாறவில்லை
அடையாளங்களையும், முகவரிகளையும் தவிர….

-*-

Tuesday, May 26, 2009

IPL பேசப்படாத பக்கங்கள்...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் அறிவிப்பு- கொண்டாட்டங்கள், இந்திய தேர்தல்கள், உலக பொருளாதார நெருக்கடி, வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணை பரிசோதனைகள், பன்றிக் காய்ச்சல் என்று வளர்ந்து கொண்டே செல்லும் சர்வதேச நிகழ்வுகளுக்கு மத்தியில் உலகின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மணித்தியாலங்களை கட்டிப் போட்டிருந்தது IPL பருவம் 2. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து ஒலி ஊடகங்களிலும் IPL பருவம் 2 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒளி ஊடகங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுச் சேவையான செனல் ஐ மாத்திரமே போட்டிகளை ஒளிபரப்பியிருந்தது. எனினும், முதல் இரண்டு நாட்களுக்கு பின்னரே செனல் ஐயில் போட்டிகள் ஒளிபரப்பாகின. 50 நாட்களை கடந்து நடைபெற்ற போட்டிகளில் ஆரம்ப நாட்களில் எவ்விதமான விளம்பர இடைவேளையும் இன்றி ஒளிபரப்பாகிய போட்டிகள் இறுதி நாட்களில் அதிகப்படியான விளம்பரங்களால், போட்டிகளின் போது ஓட்டங்கள், பந்துவீச்சுப் பெறுதிகள் என்பன போடப்படும் சந்தர்ப்பங்களில் விளம்பரங்கள் வந்து குறுக்கிட்டமை சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், எல்லா ஊடகங்களும் IPL பருவம் 2 போட்டிகள் தொடர்பான விபரங்களை தெரிவித்து வந்த போதிலும், போட்டிகள் தவிர சிறப்பு கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றே கூறவேண்டும்.

• தென்ஆபிரிக்க மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்.
• பொலிவூட்டுக்கான தென் ஆபிரிக்க அழகி தெரிவு.

உலக பொருளாதாரம் எதிர்கால ஸ்திரத் தன்மை தொடர்பில் பாரிய கேள்விக்குறியாக நிலவும் சந்தர்ப்பத்தில், IPL பருவம் 2 போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடுதல் நிகழ்வின் போது, இந்திய பொருளாதார சுட்டிகள் உயர்வை காட்டியிருந்தன. IPL பருவம் 2 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றால் பொருளாதார சுட்டிகளில் மேலும் உயர்வினை எதிர்பார்க்கலாம் என பல நிறுவனங்களும் ஆசையோடு இருந்தன. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் காலம் என்ற காரணத்தைக் காட்டி போட்டிகளின் போது பாதுகாப்பு வழங்குவது சிரமம் என இந்திய பொலிஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போட்டிகள் தென் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் IPL பருவம் 2 போட்டிகளை தென் ஆபிரிக்காவில் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமைக்கு நிச்சயமாக லலித் மோடி பாராட்டப்பட வேண்டியவரே. அதனையும் மீறி அவர் செய்த மற்றுமொரு விடயமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை லலித் மோடிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுதான் 8 மில்லியன் ரான்ட் பணத்தை தென்ஆபிரிக்காவின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு கட்டங்களில் வழங்குவதற்கு IPL இணங்கியிருந்தமை. போட்டிகள் நடத்தப்படுவதற்கு தென் ஆபிரிக்க அரசினால் இது ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எது, எப்படியிருந்தாலும் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கின்றது என்ற வகையில் திருப்தியடைந்து கொள்ள முடிகின்றது.

'Help Educate And Teach' (HEAT) என்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 8 மில்லியன் ரான்ட், தென் ஆபிரிக்காவில் உள்ள பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரான்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அப்பாடசாலைகளின் புலமைப்பரிசில் நிதிய கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணத்தை எந்த வகையில் புலமைப்பரிசில்களுக்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது அப்பாடசாலையின் நிர்வாகக் குழுவையே சார்ந்துள்ளது.

அடுத்து போட்டிகளையும் காண வருபவர்களில் ஒரு போட்டிக்கு தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரான்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்கள் பெயரில், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் பாடசாலை கட்டணமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.
விளையாட்டு நிறுவனம் ஒன்று நாடொன்றின் கல்வித்துறைக்காக இவ்வளவு பெரிய நிதியை வழங்கியுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

தென் ஆபிரிக்காவின் கல்வி முறை குறித்த ஒரு சுருக்கமான பார்வையும், இவ்வளவு பெரிய நிதி கல்வித்துறைக்காக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.

தென்ஆபிரிக்காவில் கல்வி.

தென் ஆபிரிக்காவில் 12.3 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் 38600 ஆசிரியர்களின் கீழ் 26292 பாடசாலைகளில் கற்கின்றனர். அவற்றில் 1098 பாடசாலைகள் பதிவு செய்யப்பட்ட சுதந்திரமான தனியார் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. கல்விக்கான தேசிய திணைக்களமே தென்ஆபிரிக்காவின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கண்காணித்து வருகின்றது. அது தவிர்த்து தென்ஆபிரிக்காவின் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்து கல்வித் திணைக்களங்களும் இருக்கின்றன. தென்ஆபிரிக்க கல்வித் திட்டம் பொது, வேறு மற்றும் உயர் ஆகிய மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றது. உலகிலேயே கல்விக்காக அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் தென்ஆபிரிக்கா காணப்படுகின்றது.

மிஸ். பொலிவூட் IPL

34வயதான மொடல் நடிகையான டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவூட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். மிஸ்.பொலிவூட் பட்டத்திற்காக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டவர்களில் 48 அழகிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்களிப்புக்களின் அடிப்படையிலேயே டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவுட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். இந்த வாக்கெடுப்பு IPL T20 இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்டது. 24 வயதான ஜினா க்ளவ்ட் இரண்டாவது இடத்தையும், டுனாய் னோர்ட்ஜே மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
மிஸ். பொலிவுட்டாக தெரிவுசெய்யப்பட்ட டூன் கொசட்ஸ் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார். இந்த பட்டத்திற்கான பரிசாக, இலவச இந்திய சுற்றுப் பயணம் ஒன்றுக்கு டூன் கொசட்ஸ் தயாராகி வருகின்றார். இதில் வெற்றி பெறுபவர் பொலிவூட்டில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உதிரிகள்:
• அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 16320 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன், 697 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன.
• வேகப்பந்துவீச்சாளர்கள் 388 விக்கெட்டுக்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 226 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
• டெக்கான் சார்ஜர்ஸ் அணி அதிக எண்ணிக்கையிலான(99) ஆறு ஒட்டங்களை பெற்றது.
• அதிக ஆறு ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்களாக முதலிடத்தை ராஜஸ்தான் ரோயல்ஸின் ஷேன் வோர்னும், பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் பிரவீன் குமாரும் தலா 14 ஆறு ஓட்டங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
• ஓட்டமற்ற பந்துகளை வீசியவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங் 169 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் இருக்கின்றார். சென்னை சுப்பர் கிங்ஸின் முத்தையா முரளிதரன் 144 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றார்.
• அணியொன்றினால் வீசப்பட்ட செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களின் எண்ணிக்கை வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19 செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் உள்ளது.
• அதிக அகலப்பந்துகளை வீசிய அணிகளின் வரிசையில் 68 அகலப் பந்துகளுடன் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
• அதிக முறை ஓடும் போது ஆட்டமிழப்பு செய்யப்பட்ட அணி வீரர்களின் வரிசையில் 22 ஆட்டமிழப்புக்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது.
• 20க்கு20 போட்டிகளின் நிர்ணயமிக்க கடைசி 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 13 விக்கெட்டுக்களுடன், மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார்.
• 12 போட்டிகளில் 572 ஓட்டங்களைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மெத்யூ ஹெய்டன் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
• 16 போட்டிகளில் 23 விக்கெட்டுக்களை வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
• பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் இளம் வீரரான மனிஷ் பான்டே ஆட்டமிழக்காத 114 ஓட்டங்களுடன், அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
• அதிக பிடிகளை எடுத்த வீரர்கள் வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸின் எபி. டிவிலியர்ஸ், 15 போட்டிகளில் 13 பிடிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
• போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மஸ்ரபி மோர்டாசா முதலிடத்தில் உள்ளார்.
• அதிக 50 ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் மும்மை இந்தியன்ஸின் ஜே.பி. டும்னி மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸின் மெத்யு ஹெய்டன் ஆகியோர் 5 தடவைகள் 50 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
• அதிக முறை ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஹேர்சல் கிப்ஸ், 4 போட்டிகளில் ஓட்டம் எதனையும் பெறாது முதலிடத்தில் உள்ளார்.

Monday, May 25, 2009

வார்த்தைகள் உன் வசமாய்!


உன்னைப் பேசி பேசியே
மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்…

ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,

எதையோ எழுதத் துடிக்கும்
பேனா
தாள் தொடும் போது
மிக நெருக்கமாய் உன் முகம்….

மைத்துளி முடியும் போது
முழுதுமாய் நீ
நிறைந்திருக்கிறாய்…

மழலையாய்…
இமை விரிந்த போது
அம்மாவே உலகம் என்றிருந்தது….
எதனையும் அறியாமல்,
நீ வந்து சுமந்து செல்கிறாய்…
என் மணித் துளிகளை….

தொட்டு விடும் தூரத்தில்
நீயிருந்த போதிலும்……
அனுமதியற்று …காத்திருப்பில்….
இரப்பவனாய் நான்…..
இரங்காமல் நீ…..

நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை…..

மூர்ச்சையற்றுப் போன வார்த்தைகளுக்கு
காற்றுக்கு வழி விட்டு…..
பேனா கொடுத்த போது….

மீண்டும்
எழுதத் தொடங்குகின்றது….
மயங்கி கிடந்த என்னை
மலர வைத்தது உன்னை கடந்து சென்ற காற்றல்லவா!


(கவிதை என்ற வடிவில் எதையாவது எழுதியே தீருவது என்று நினைத்து நான் என்றும் எழுதத் தொடங்கியது இல்லை. பல சந்தர்ப்பங்களில் பேருந்தில் செல்லும் போதும், தனியாக நடந்து செல்லும் போதும் நினைவுகளில் அவள் வந்து அமர்ந்து கொள்ள, என்னையும் அறியாமல் வார்த்தைகளை கோர்ப்பது உண்டு. ஆனால், பல சந்தர்ப்பங்களில் அவை மனதில் உதித்து அப்படியே மறைந்து போய்விடும். தாள் எடுத்து பதிந்து விடும் அளவுக்கு வழி கிடைத்ததில்லை. இன்று வழமைக்கு மாறாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்த பொழுதில் நீ அனுப்பிய குறுந்தகவல்கள், அளித்த நினைவுகளின் பதிவாய், கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் அனுப்பும் பகுதியில் கலைந்துவிடாது சேர்த்து வந்த வார்த்தைகள். அதனை தாளில் எழுதி வாசித்துப் பார்த்த போது உணர்வுகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. உங்களுக்காகவும் அதனை பதிவிடுகின்றேன். பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்களித்து விட்டுப் போகலாம்.)

Wednesday, May 20, 2009

சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்...

கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம் இது. தனது மரணத்திற்கு பின்னரே இந்த கடிதம் கியூப மக்கள் மத்தியில் வாசிக்கப்பட வேண்டும் என்பதே சேயின் விருப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், சேயும், பிடெலும் பிரிந்துவிட்டார்கள் எனவும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் பல்வேறுபட்ட வதந்திகளை அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான ஏகாதிபத்திய நாடுகள் உலவவிட்டதன் காரணமாக, சே கொங்கோவில் இருந்த சந்தர்ப்பத்தில், கியூப மக்கள் மத்தியில் பிடெல் இந்த கடிதத்தை வாசித்தார்.


பிடெல்,

இந்த நேரத்தில் எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது. புறப்படத் தயாரான போது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது.பிறகு எல்லாம் புரிந்தது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.

இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகின்றேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புக்களிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகின்றேன்.கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.

புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கின்ற அர்ப்பணிப்போடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியாரா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரடம்சிகரத் தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.

அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கின்றேன். கரீபிய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சந்தர்ப்பத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமும் இன்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகின்றேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.

மகிழ்ச்சியோடும், வருத்தங்களோடும் தான் நான் இதனை செய்கின்றேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தைக் கட்டி எழுப்புவார்கள் என்கின்ற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கின்றேன்.தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகின்றது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கின்றேன். மக்களின் புரட்சிக்கரத் தன்மைகளைப் பெற்று செல்கின்றேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகின்ற உணர்வை ஏந்திச் செல்கின்றேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆழமான காயங்களைச் சரிசெய்கின்றது.

கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறொரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாகய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கின்றேன். அப்படியே நடந்து கொள்வேன்.என்னுடைய மனைவிக்கும், குழந்தைக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சிதான். வாழ்வதற்கு தேவையானவற்றையும் கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கின்றது.

உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கின்றேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.எனது முழுமையான புரட்சிகர உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத்தழுவிக் கொள்கின்றேன்.

சே.

Tuesday, May 19, 2009

எதிர்காலம்


யார் கொன்றதோ?
யார் கொலை செய்யப்பட்டதோ?
தினம் வேட்டை
பழி வாங்கும் வெறி
இனி யுத்தம்
பாரிய தாக்குதல்
எல்லாம் முடிவுக்கு வரும்.......
இளமை தொலைந்த
அங்கவீன சமூகம்
குருதி வடிந்த
கருகிய கந்தக வயல்வெளிகள்
நான்! நீ!
என்ற பாகுபாடு,
ஆயுதங்கள்
அணிவகுத்து நிற்கும் ,
உணர்வற்ற உடல்கள்
மண்டைஒடுகள்
ஒதுங்கி மரியாதை செய்யும்,
ஒற்றைக்கால்
ஒற்றைக்கையுடன்
புதியதாய் பிறந்த
இரண்டு குழந்தைகள்
வாழும்
குற்றுயிராய்....
(இந்த கவிதை புதிதாக எழுதப்பட்ட ஒன்று அல்ல.மூன்று வருடங்களுக்கு முன்னர் "பயில்நிலம்" சஞ்சிகைக்காக எழுதிய கவிதை. ஏதோ ஒரு வகையில் நடைமுறையின் சந்தர்ப்பங்களுடன் இந்த கவிதை பொருந்தியிருக்கின்றது. அதனால் இங்கு இந்த கவிதையை மீள்பதிப்பு செய்கின்றேன்.கவிதை வாசித்து உங்களுக்கும் பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்கு போடலாம்)

LinkWithin

Related Posts with Thumbnails