Wednesday, March 31, 2010

அங்காடித் தெரு – முதலாளிகள் ராஜாக்களாய்….தொழிலாளிகள் அடிமைகளாய்….

இந்தியாவின், சென்னை நகரில் எப்போதும் சனநெரிசலாக காணப்படும் ரங்கநாதன் தெருவை அங்காடித் தெருவாக மாற்றி இயக்கியிருக்கின்றார் வெயில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன். இந்தியாவுக்கு ஒரே ஒரு முறை விஜயம் செய்திருந்த போதிலும், அந்த ரங்கநாதன் தெருவுக்கும் மறக்காமல் போயிருந்தேன். ஒரு 30 நிமிடங்கள் அந்த தெருவில் நடந்து கொண்டிருந்தால், ஆயிரக்கணக்கான முகங்களைப் பார்ப்போம். ஆனால் அடுத்தநாள் அதே தெருவில் பயணித்தாலும் இவர்கள் எவரையும் நினைவில் வைத்திருக்க முடியாது. அவ்வளவு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதி அது.

வசந்தபாலனின் முந்தைய படமான வெயிலும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை போராட்டத்தை கருவாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படமும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலையை சித்திரிக்கும் படமாக இருக்கின்றது. எனினும், யதார்த்தமான ஒரு விடயம் கதைப்பொருளாக கொள்ளப்பட்டிருக்கின்றது. இது இந்தியாவுக்கு மாத்திரமான கதைக்கருவல்ல என்பதே முக்கியமாகின்றது. இலங்கையிலும், இவ்வாறு தொழிலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரகர்களால் தலைநகருக்கு அழைத்து வரப்படும் இளைஞர், யுவதிகளின் வாழ்க்கை நிலையும் இந்த திரைப்படத்தின் ஊடாக எனக்கு காட்சியளித்தது. இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்தும், தென் பகுதிகளில் இருந்தும் இவர்கள் தலைநகர் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றார்கள். முதலாளிகளால் தமது இஷ்டம் போல் துன்புறுத்தப்படும் இந்த தொழிலாளிகள் தொடர்பில் பல செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தாலும் தமது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, சகோதரர்களின் கல்விக்காக பல கனவுகளுடன் லைநகர் வரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாத்திரமே காணப்படுகின்றது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம்........நன்கு படித்து பொறியியலாளராக வரவேண்டும் என்ற கனவுடன் உள்ள நாயகன் தந்தையின் திடீர் மறைவால் சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தொழிலாளியாக வருகின்றார். தொழிலாளர்கள் தெரிவின் போது தெரிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை(தாய், தந்தை இல்லாதவர்கள், சகோதரிகள் உள்ளவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்களை தெரிந்தெடுக்குமாறு கூறுதல்), தொழிலாளர்களை அழைத்துவந்து விட்டதன் பின்னர் முதலாளியிடம் தரகுப் பணம் கேட்பது, கண்டிப்பான அண்ணாச்சி, சின்னக் காதல், உணவுத் தட்டுக்கள் போதாமையால் மற்றவர்கள் சாப்பிடும் வரை காத்திருத்தல், இரவு தங்குமிடம் என்று கதையின் நாயகர்களை சுற்றி நகரும் கதையின் நடுநடுவில், சென்னைக்கு வருபவர்களுக்கு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக காட்டப்படுகின்றது (வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர் பொதுமலசலகூடத்தை சுத்தம் செய்து அதன் பராமரிப்பாளராக மாறிவிடுவது, ஆடைகள் கொண்டு வந்து அதனை சலவை செய்து புதிய பொதிகளில் அடைத்து நடைபாதையில் விற்பனை செய்வது).

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலையை வெளிக்கொணர்வதற்கு இயக்குனர் முயற்சித்துள்ளார். பல சந்தர்ப்பங்களில் வேலையை விட்டு விலகி விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் தோன்றினாலும், வீட்டில் இருக்கும் சகோதரிகளின் கல்விக்காக உழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவராக நாயகனை காட்டியிருக்கின்றார்கள். கதாநாயகனின் நடிப்பு படத்திற்கு பொருந்தியிருக்கின்றது. கனி என்ற பாத்திரத்தில் அஞ்சலியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். மசாலா படங்கள் என்ற வரிசையில் அணிவகுத்து நிற்கும் தமிழ் படங்களின் நீண்ட வரிசையில் தமிழ் நாயகிகளுக்கு நடிப்பதற்கான சந்தர்ப்பம் கவர்ச்சிக்கும், பாடலுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. இருப்பினும், இவ்வாறான படங்கள் நடிகைகளுக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளமையை நிரூபித்துள்ளது. அறிமுகக் காட்சியிலிருந்து, கடைசியாக தோன்றும் காட்சி வரை அஞ்சலியின் நடிப்பு யதார்த்தமாக இருக்கின்றது. ஒரு காட்சியில்மாரபுடிச்சு கசக்கினா,சும்மா இருந்தே, உட்டுட்டாஎன்று அழுகை கலந்த குரலில் கூறிவிட்டு மீண்டும் சேலை விற்பனையில் இறங்கிவிடும் அஞ்சலி, சந்தர்ப்பத்தை நிறைவாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவற்றுக்கும் அப்பால் துணைநடிகர்களாக வரும் அனைவரும் தமது பங்களிப்பை சிறப்பாகவே வழங்கியிருக்கின்றார்கள். திரைப்படத்தின் தொழில்நுட்ப உதவியும் படம் யதார்த்தமானதாக வெளிவருவதற்கு உதவியிருக்கின்றது. வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் பொறுப்புடன் செயற்பட்டிருக்கின்றார். படம் முழுக்க கையாளப்பட்டிருக்கும் பேச்சுவழக்கும் படத்திற்கு மேலதிக பலம் சேர்க்கின்றது. பின்னணி இசை கேட்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், ஸ்பானிய, லத்தீன் இசை தழுவல்களைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லைபாடல் அனைவரது மனதையும் வருடிவிடுகின்றது.

யதார்த்தமான படங்கள் என்பது சோகமான முடிவைக் கொண்டது என்பதையே காட்டுவதற்கு இயக்குனர்கள் ஏன் முயற்சிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. அதே பாணிதான் இந்தப் படத்திலும் கையாளப்பட்டிருக்கின்றது.
மனதை உருக்கும் கதை. அங்காடித் தெரு- மனிதர்களின் உணர்வுகள் பணத்தால் அடைக்கப்பட்ட தெரு. இந்தப் படம் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஒரு தகவலை சொல்ல முயற்சித்திருக்கின்றது. அல்லது இயக்குனர் அறியாமலேயே அந்த செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறான சன நெருக்கடி நிறைந்த நகரங்களில், கிராமப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலைவாங்கப்படுவது மாத்திரமல்லாது, அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகாரிகளின் பைகளை நிரப்பி, சமூகத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்டு வருகின்றன.

அங்காடித் தெரு- அமைதியாக நடந்து பாருங்கள். அங்கே மனிதர்களும் வாழ்கின்றார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails