Tuesday, April 6, 2010

நினைவுகள் இயக்கும் காதல்


தனிமை துரத்தும் நொடிகளில்
எழுதத் தொடங்கி
எழுதி முடிக்காத ஒரு கடிதம்
உன் பிடிவாத மறுப்பால்
வாசிக்கப்படாமல்
இதய அறையின் இருட்டறையில்…

நினைவுகளாய் நெருங்கி
வெறுப்புக்களாய் விலகிச் செல்லும் புள்ளி
விஸ்வரூபமெடுக்கின்றது
ஆழ்மனதில் அலையடிக்கும் கணப்பொழுதில்….

இரண்டாம் தாயாய்
என் வாழ்வில் உனை இணைக்கும்
காதல் போரில்
ஆயுதங்களின் கடிவாளங்களாய் இறுகிக் கிடக்கும்
உன் மனதை
தாக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறுகின்றது
என் நினைவு…..

சூறாவளியாய் சுழன்றடித்து
பிரக்ஞையற்றதாக்கிய
உன் கண் இமைக்கும் நொடிக்குள்
பார்வை சொன்ன செய்தி
பிரதியெடுத்து பதிவானது என் எண்ணக் கோப்பில்…..

உன்
இமை மடிந்த கணங்களும்,
இதழ் விரிந்த நொடிகளும்
இறக்க விடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றது
உன் மீதான
என் காதலை……


பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தினந்தோறும் நாட்குறிப்பேட்டில் எழுதும் பழக்கம். ஆகஸ்ட் மாத பொழுதொன்றில் எழுதியிருக்கின்றேன். வாசித்துப் பார்த்தேன். பிடித்தது. பகிர்ந்து கொள்கின்றேன்.

Monday, April 5, 2010

ஜனநாயகம் வளரட்டும்

பார் ஆளும் மன்ற உறுப்பினராய் தான் பிறக்க பாக்கியங்கள் பல செய்த பின் கண்டிருந்த சலுகைகள் எல்லாம் மறந்திடத்தான் ஆகிடுமோ!

எதிர்க்கட்சி, ஏனை எக்கட்சி என்றாலும் ஊர் கூடி வாக்கிட்டு வாழ்த்துச் சொல்லி மாலையிட்டு ஏற்றிவிட்ட புகழ் வாழ்க்கைதான் குறைந்திடுமோ!பார் ஆளும் மன்றம் தான் என்ன? பகைவன் வீடா? இல்லை பாம்பு வாழும் காடா? பல மக்கள் வாக்குப் போட்டு வழியனுப்பி வைத்த தீரர்கள் கூடும் திடல் அல்லவா!

எத்தனை தான் பேசினாலும், ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமெடுத்து கார் செல்ல
குளிர்காய்ந்திருந்த வேட்பாளர் எந்நாளும் அப்படியே திளைத்திருப்பாரோ!

ஒருநாள் தேர்தல் வரும், தீரர்கள் களம் புகுவர், கையெடுத்து கும்பிடுவார், கால் தொட்டு வணங்குவர், ‘ஐயா’, ‘அம்மணி’ மக்கள் தெய்வங்களாகுவர்!

அந்த ஒரு பொழுது போதாதா! பின் பல காலம் அடுத்த தேர்தல் வரும் வரை அவர்கள் தெய்வங்களாய், நீவீர் இல்லாத ஒன்றாய், காணாமல் போவீர்!

ஒன்றாகி, பலவாகி, பல்லுருவமாகி, அமைச்சாகி, அரசாகி, அகிலம் போற்றும் அநாதியாகி, பின் மீண்டும் தேர்தல் நாளில் மக்களாகி!

நம் தலைவன், நம் தலைவி- யார் மேல் பழியுரைப்போம்? சொன்னவன் யார், நாவை தறி! காட்டியவன் யார் கையை வெட்டு!

ஒரு
புள்ளடியில் அரசு சமைக்கும் அதிகாரம் நம்மிடம். யார் என்ன செய்வார்? அடி, உதை, கொல், புதை, யார் கேட்பார்? நாமல்லோ மன்னர்காள்!

நான்கு வருடம், மூடித் திறந்தால் முடிந்து விடும். வாக்குகள் மாறிவிழும், தோற்றவன் வெல்வான், வென்றவன் தோற்பன், நம் கையில் நாளை!நம்மிடம் செல்லாது நயவஞ்சகம், நான்கு வருடம் காத்திருந்து குப்புற விழச் செய்வோம். இன்றா வென்றாய், இனி நான்கு வருடம் மட்டுந்தான் உன்கையில்!

குறைந்த சம்பளமா, உண்ண உணவில்லையா? மகனைக் காணவில்லையா? மகள் எங்கே போனாள்? பொறுத்திரு நான்கு வருடம், காலம் வரும் மாற்றிவிடலாம்!

காலம் வரும், புரட்சி வரும் என்றெல்லாம் எழுதினாயா? எழுதியதை கிழித்துப் போடு, யாரிடமும் சொல்லாதே, அன்றேல் பின் கைது வரும்!

இதை பார்க்காதே! வாசிக்காதே! வாய் திறந்து பேசாதே! யாரிடமும் சொல்லாதே! ஜனநாயகம் வளரட்டும்!

LinkWithin

Related Posts with Thumbnails