Wednesday, April 22, 2009

உலக புவி தினம்: கொழும்பை அதிர வைத்த காலநிலை

கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிப்பவர்கள்; நேற்றிரவு நிச்சயமாக, நிம்மதியாக உறங்கியிருக்கமாட்டார்கள். தொடர்ச்சியான இடியும், மின்னலும் எவரையும் உறங்கவிட்டிருக்காது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களாக இலங்கையில் மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதைப் போன்றே புவியியல் சார் பிரச்சினைகளும் அவதானிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட புவிநடுக்கங்கள். பருவம் மாறிய காலநிலை. ஏனைய பருவங்களைப் போலல்லாது கோடைக்காலத்தில் அதிகமாக உணரப்பட்ட உஷ்ண நிலை. கடந்த வருடத்தில் புசல்லாவை பகுதியில் பெய்த அமிலமழை. என காலநிலை அச்சுறுத்தல் இலங்கையிலும் அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கடந்த சில தினங்களாக புதிதாக பதிவு எதுவும் எழுதாத நிலையிலும், இன்று புவி தினம் என்பதால் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நேற்று உறங்கச் சென்றேன். ஆக புவி தினமும் கொழும்பை அதிர வைத்த நேற்றைய காலநிலையும் ஏதோ வகையில் நமக்கான செய்தியை சொல்லிச் செல்வதாக உணர்ந்தேன். "தண்ணீருக்கு காத்திருப்பவனுக்கு தேநீர் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகிறான்." கடந்த சில தினங்களாக யுத்த செய்திகளின் பரபரப்பு செய்திகள் ஒருபுறமிருக்க, இலங்கையில் காலநிலை மாற்றம் குறித்து ஏதாவது செய்தி கிடைக்குமா என்று ஊடகங்களை தேடிப்பார்த்தும் ஏமாற்றம் தான். அண்மையில் மின்னஞ்சல் மூலம் வந்த மடல் ஒன்று ஜூலை மாதத்தில் வரவிருக்கும் சுனாமி தொடர்பான செய்தியை தாங்கிவந்தது. அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வதிலும் பார்க்க, தொழிற்புரட்சிக்குப் பின்னரான காலநிலை சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அவதானிக்க வேண்டியவொன்றாகவும் எதிர்கால சந்ததியினருக்கு சவால் விடுக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது என்பதை நாம் எவரும் மறுப்பதற்கில்லை. கடந்த 20 வருடங்களில் யுத்தத்தினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையிலும், இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என ஐக்கிய நாடுகளின் உயிரிழப்புக்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் மூலம் மனிதன் இயற்கையிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும்.எனவே, உலக புவி தினமான இன்று சில நிமிடங்கள் அல்லது சில விநாடிகளாவது செலவு செய்து புவியைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்த பதிவு உதவி செய்யும் என நம்பகிறேன். நாம் வாழும் புவியைப் பற்றி சிந்திப்பதற்கும், அதன் மீதான அக்கறைக்கும் சிறப்பு நாள் ஒன்று தேவையா என்பதே சிந்திக்கக் கூடிய விடயம் தான். எனினும், இந்த உலகமயமாதலில் தந்தையர் தினம், அன்னையர் தினம், சகோதரர் தினம், நண்பர் தினம், காதலர் தினம் என எல்லாமே விளம்பரப் பொருளாகிவிட்ட காலத்தில், மனித வாழ்க்கையும் இயந்திரமயமாகிவிட்ட நிலையில் புவித்தாயின் நலன் குறித்து சிந்திப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்த நாள் பயன்படுகின்றது என்றால் புவித் தினத்தை கொண்டாடுவதில் தப்பில்லைத் தானே.

ஓசோன் துவாரம், பச்சை வீட்டு வாயு என்று பல விதங்களில் நாங்கள் இயற்கையுடனான முரண்பாட்டை வளர்த்துச் செல்கிறோம். இதன் விளைவுகளும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பனிமலைகள் உருகுதல், நீர்மட்டங்கள் உயருதல், சிறிய தீவுகள் நீரில் மூழ்கி போதல் என்றெல்லாம் பல அச்சுறுத்தல்கள் நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன.

எனவே கட்டாயமாக ஒவ்வொரு மனிதனும், வீட்டை, தனது வாகனங்களை, தனது உடைமைகளை விட புவியை நேசிக்க வேண்டும். இந்த நாளில் இதுவே என்னுடைய தாழ்வான கோரிக்கையாகவும் இருக்கின்றது.

புவி தினம் தொடர்பில் ஒரு சின்ன கதை : அட நீங்களும் கதை எழுதுவீங்களா! என நிறைய பேர் யோசிக்கிறாங்க.. அப்படியெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதை. தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மாணவன் ஒருவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது மிகவும் சோகமாகவும், பலத்த சிந்தனைகளுடனும் வீட்டிற்குள் நுழைகின்றான். அவனது நிலையைக் கண்ட தாயார், அவனிடம் சோகத்துக்கான காரணத்தை வினவுகிறார். அதற்கு பதலளிக்கும் மகன், 'இந்த உலகத்தில் எதுவுமே சரியாக இல்லை அம்மா, எங்களால் எதுவுமே செய்ய முடியாது" எனக் கூறுகின்றான். அத்துடன், தரையில் அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தலையில் வைத்தாறு அவன் இதனையே திரும்ப திரும்ப கூறியவாறு இருக்கின்றான். பின்னர் திடீரென தனது தாயை பார்த்து, "இன்று எங்கள் விஞ்ஞான ஆசிரியர் உலக புவி தினம் தொடர்பில் பாடம் எடுத்தார். உலக புவி தினத்தில் அனைவரும் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பிலும், புவியை பாதுகாப்பது தொடர்பிலும் ஏதாவது மனவுறுதி எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நிறைய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் எங்கள் சூழல் அசுத்தமடைகின்றதாம். இதன் காரணமாக தாவரங்களும், மிருகங்களும் அழிகின்றனவாம். எனவே இதனை காப்பாற்றுவதற்கு ஏதாவது வழிகளை சிந்திக்குமாறு ஆசிரியர் கூறினார். நானும் பாடசாலையிலிருந்து வீடு வரை யோசித்துக் கொண்டே வந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை. என்னால் செய்யக் கூடியது ஒன்றுமே இல்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னால் நான் வாழும் சூழலின் காற்றையும், நீரையும், தாவரங்களையும், மிருகங்களையும் காப்பாற்ற முடியாது. என்னால் இந்த சூழலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது" எனக் கூறிக் கொண்டு அழுகிறான். இதனைப் பார்க்கும் தாய் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு "இந்த விடயம் உன்னில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, அப்படித்தானே? என மகனிடம் வினவுகிறார். ஆமாம் என்பது போல் மகன் தலையை மட்டும் அசைக்கிறான். "எனது தந்தை சொன்ன கதையொன்றை நான் உனக்கு சொல்கிறேன்" என தாய் ஒரு கதையை சொல்கிறார். " ஒருநாள் காலை நேரம், ஒருவன் கடற்கரையோரமாக நடந்து செல்கிறான். அப்போது கரையோரமாக நிறைய ஸ்டார்மீன்கள் ஒதுங்கி கிடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இறந்துவிட்டன. சில மீன்கள் மீண்டும் கடலுக்குள் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த அந்த மனிதன், அந்த மீன்கள் பாவம் என நினைத்துக் கொண்டு செல்கிறான். அப்போது சிறுவன் ஒருவன் ஸ்டார் மீன்களை வேக, வேகமாக கடலுக்கு எடுத்துப் போட்டுக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். அவன் மிகவும் களைப்படைந்தவனாக தன்னால் இயன்ற அளவு வேகமாக மீன்களை கடலுக்குள் தூக்கி போட்டவாறு இருக்கின்றான். அந்த சிறுவனின் அருகில் செல்லும் மனிதன், ஆயிரக்கணக்கான மீன்கள் கடற்கரையில் ஒதுங்கியிருக்கின்றன. உன்னால் அனைத்து மீன்களையும் கடலில் தூக்கிப் போட முடியாது. ஆனாலும், மீன்களை தூக்கி கடலில் போடுவதை தொடர்ந்தவாறே அந்த சிறுவன், நான் இந்த மீனை காப்பாற்றுவேன், இந்த மீனை காப்பாற்றுவேன எனக் கையில் எடுக்கும் ஒவ்வொரு மீனையும் காட்டிக் கூறியவாறு கடலில் போடுகின்றான். இதனைக் கேட்டு சற்று சிந்தித்த அந்த மனிதனும், மீன்களை கடலில் சேர்க்கத் தொடங்குகின்றான்." இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த மகன் "அவர்களால் காப்பாற்றப்பட்ட மீன்கள் அனைத்துக்கும், அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், அப்படித்தானே அம்மா?" என வினவுகின்றான். தாயும் ஆமாம் என்பது போல தலையை அசைக்கின்றார். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் சிறுவன் 'அப்படியானால் என்னால் எல்லாவற்றையும் முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக றான் செய்யும் மாற்றங்களுடாக பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்". என உறுதியாக தனது தாயிடம் கூறுகின்றான்.

ஆக, எங்களாலும் ஓசோன் துவாரத்தை அடைக்கவோ, பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை தடுக்கவோ முடியாவிட்டாலும், நாங்கள் செய்யக்கூடிய சிறிய காரியங்கள் ஊடாக அதன் மாற்றத்துக்கான பங்களிப்பை வழங்க முடியும். எனவே, உலக புவித்தினமான இன்று ஒவ்வொருவரும் புவியை காப்பதற்கு எங்களால் செய்யக் கூடிய சிறிய விடயம் ஒன்றை கொள்கைகளாக உறுதி பூணுவோம்.

"நான் இனிமேல் பொலித்தீன் பைகளை உபயோகிக்க மாட்டேன்." இது தான் என்னுடைய கொள்கை பிரகடனம். உங்களுடைய கொள்கை பிரகடனம் என்னவாக இருக்கப் போகிறது?

புவித்தினம் ஒரு சுருக்கமான பார்வை : அதிகரித்துச் சென்ற இயற்கை அழிவுகள் காரணமாக, சுற்றாடல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நாளில் வருடாந்தம் பாரிய அளவில் விழிப்புணர்வு ஊர்வலங்களையும், கல்வி திட்டங்களையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது. இருந்தாலும், வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு தினங்களில் உலக புவித் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் மார்ச் 21 ஆம் திகதி உலக புவித் தினமாக கொண்டாடப்படுகின்றது.

Friday, April 17, 2009

இன்று

இயந்திர எண்ணங்களால்
நிறைந்த
யதார்த்தம் ,
காற்றலைகள் வேவுகருவிகளாக
தொடரும் மௌனம் ,
அண்டவெளியை முத்தமிடும்
விஞ்ஞானம்,

நாகரிக ஆழத்தின்
நச்சுப் பொறியில் உயிர்கள்,

கல்வி விருந்து
பணப் பரிமாற்றம்,

சமாதானப் பந்தியில்
ஆயுத அறிமுகம்,

கலவி இன்றி
ஜனிக்கும் உயிர்கள்,

இயற்கை வயலில்
வியாதிக் களைகள்,

ஊடக வலையில்
உணர்ச்சி செலவு,

அது,
'நேற்று' பிரசவித்த
'இன்று' குழந்தை...

இந்த கவிதை நீண்ட நாட்களுக்கு முன் 'பயில் நிலம்' என்ற சஞ்சிகைக்காக என்னால் எழுதப்பட்ட கவிதை. நான் முதன் முதலாக எழுதிய கவிதை என்றும் சொல்லலாம். அதற்கு முன் சும்மா பல காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். நண்பர்களுக்கு காதல் கடிதங்கள் என்ற பேரில் பல கவிதை முயற்சிகளும் இருக்கின்றன. எனினும், அட நீயும் நல்ல கவிதை எழுதுறியே என்று பலரை சொல்ல வைத்த கவிதை இதுதான்!

Wednesday, April 15, 2009

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனின் வார்த்தையை காப்பாற்றிய பராக் ஒபாமா....

உலக பொருளாதார நெருக்கடி, சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், வடகொரியாவின் அணுத்திட்டங்கள், பாகிஸ்தானில் தீவிரவாதம் (நம்ம இலங்கை பிரச்சினையும் தான்) என சிதறிக் கிடந்த உலகத்தின் கவனம் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி வந்தது தெரியுமா? உலகின் பார்வை மட்டும் அல்ல இன்னுமொர் ஜீவனும் நேற்று வெள்ளைமாளிகையை சுற்றி வந்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள் என்று எல்லாவாற்றிலும் அந்த நான்கு கால் ஜீவனுக்குத்தான் முதலிடம். அது யார் என்று யோசிக்கின்றீர்களா? அது வேறு யாருமில்லை. 'போ" என்ற நாய்க்குட்டித்தான் அத்தனை ஊடகங்களையும் கட்டிப்போட்ட செய்தி.அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி முதற் பெண்மணி போல, 'போ" இப்போது அமெரிக்காவின் முதல் நாய் (என்ன கொடுமை சார்?) 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது மகள்களுக்கு அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம் தான் இந்த 'போ". (நிறைய அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை விட தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் அதிகம். அந்த வகையில் ஒபாமா தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.)
அது என்னடா? தலைப்பில் ஹெரி ட்ருமன் பற்றி ஏதோ சொல்லியிருக்கின்றீர்களே! இதுவரை அது தொடர்பில் எதையும் காணவில்லையே என்று நீங்கள் தேடுவது புரிகின்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனிடம் உங்களுடைய சிறந்த நண்பன் யார் என்று ஊடகமொன்றால் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'வொஷிங்டன் நகரிலே உங்களுக்கு சிறந்த நண்பர் வேண்டும் என்றால் ஒரு நாயை வாங்கி வளர்க்கவும்" என்று பதலளித்தாராம். ஆக ஒபாமாவுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார். அத்துடன் ஹெரி ட்ருமனின் வார்த்தையையும் காப்பாற்றி விட்டார்.

இன்னொரு விடயம் தெரியுமா? நம்ம 'போ" வை நாளாந்தம் சுழற்சி முறையில் வோக்கிங் (அதுதாங்க, நாய்க்குட்டியை இயற்கை அழைப்புக்காக காலையிலும், மாலையிலும் நடக்க கூட்டிப் போறது.) கூட்டிப் போகவுள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார். அது என்ன சுழற்சி முறைன்னு கேட்கிறீங்களா? ஜோன் பியுக்கனனிடம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர்) கேட்ட நல்ல தெளிவா, விளக்கமா சொல்லுவார்.

நம்ம 'போ" வெள்ளை மாளிகையிலதான் தங்கப் போகிறார். அப்போ, அவர் எங்கே நித்திரை கொள்வார்? (நான் கேட்ட கேள்வி இல்லீங்க. அமெரிக்க ஊடகங்கள் கேட்ட கேள்வி) அதற்கு, தன்னுடைய படுக்கை அறையில் இல்லை என்றும் ஒபாமா ஊடகங்களுக்கு பதலளித்திருக்கிறார்.


'போ" பற்றி பின்குறிப்பு: 'போ" டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து, வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதம் வளர்க்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் செனட்டர் எட்வர்ட் கென்னடி வீட்டில் ஒரு மாதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாய்களை பயிற்றுவிக்கும் இடத்தில் ஒரு மாதம் இருந்துள்ளது. தற்போது வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. செனட்டர் எட்வர்ட் கென்னடி பராக் ஓபாமாவுக்கு இந்த நாய்க்குட்டியை பரிசளித்துள்ளார். 'போ"வுக்கு தற்போது வயது 6 மாதங்கள். கறுப்பு வெள்ளை நிறத்திலான இந்த நாய்க்குட்டி போர்த்துக்கேய நீர்நாய் வகையைச் சார்ந்தது.

Tuesday, April 14, 2009

பராக் ஒபாமாவும், கியூபாவும்.

தனது பதவியேற்பின் போதே குவாண்டனாமோ சிறைக்கூடம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையும், ஒபாமாவின் பதவியேற்பு தொடர்பில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவின் பாராட்டுக்களும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.


எனினும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனால், ஆபிரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும், கீழைத்தேய நாடுகளுடன் சிறந்த உறவையும் கடைப்பிடிப்பதிலும் பராக் ஒபாமாவின் பங்கு அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பர்த்திருந்தாலும், அவரது அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற முதலாளித்துவ, மேலாண்மை பதவி நிலை என்ற அடையாளம் அதற்கெல்லாம் சாதகமாக இருக்குமா என்பது சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்தது. இருக்கின்றது.

அதனையெல்லாம் மாற்றும் விதமாக, அமெரிக்காவின் கால்பகுதியில் இருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடான கியூபாவுடன் 5 தசாப்தங்களாக நிலவி வந்த முரண்பாட்டை இல்லாது செய்யும் வகையில் கடந்த மாதம் பராக் ஒபாமா கைச்சாத்திட்ட செலவீன மசோதா பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் நிலவிவந்த தடைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக நேற்றைய தினம் வெள்ளை மாளிகை பேச்சாளர் அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் மூலம் கியூபாவில் வசிக்கும் தனது உறவினர்களை காலவரையறையின்றி சென்று சந்திப்பதற்கு அமெரிக்க வாழ் கியூபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கியூபாவில் வசிப்பவர்களுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் கியூபாவைச் சேர்ந்தவர்கள் பணம் அனுப்புவதும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் புஷ் நிர்வாகத்தில் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரமே அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்களுக்கு, கியூபா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பராக் ஒபாமாவினால் கைச்சாத்திடப்பட்ட செலவீன மசோதாவின் ஊடாகவே இந்த பொருளாதார தடைநீக்கம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ரொபர்ட் கிப்ஸ் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கரீபியன் தீவுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க வல்லரசு இதே தொனியில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஏற்படுத்திய பேரழிவுகள் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.

1959 ஆம் ஆண்டு புரட்சிகரப் போராளி சேகுவேராவுடன் இணைந்து பிடெல் காஸ்ட்ரோ கியூபாவை பாடிஸ்டா(அமெரிக்காவின் உளவுத்துறையின் கையாளாக செயற்பட்டு வந்தவன்) என்ற கொடுங்கோலனிடம் இருந்து விடுவித்து ஜனநாயக நீரோட்டத்தில் அந்நாட்டை இணைத்தார். அன்றே கியூபா மீது சகல வழிகளிலும் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடிக்கு பின்னர் பேச்சில் வசீகரத்தன்மை கொண்டவராகவும், சிறந்த பேச்சாளராகவும் வர்ணிக்கப்படும் பராக் ஒபாமா, கியூபாவுடனான எவ்வாறான உறவுகளை பேணப் போகின்றார் என்பதை அவரது நடவடிக்கைகளில் இருந்தே அறிந்து கொள்ள முடியும் என பிடெல் காஸ்ட்ரோ தனது பாராட்டுக்களின் போது தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா இந்த பொருளாதார தடை நீக்கத்தை அறிவித்திருக்கின்றது. இந்த தடை நீக்கத்தின் ஊடாக அமெரிக்காவின் நிறுவனங்கள் கியூபாவில் செயற்படுவதற்கான வழிகள் ஏற்படும். ஆக மீண்டும் ஒரு ஆதிக்க சக்தியாக அல்லது காலனியாக்கல் சிந்தனையோடு அமெரிக்கா கியூபாவில் காலடி வைப்பதற்கு எண்ணுமாயிருந்தால், மீண்டும் ஒரு பாரிய தோல்வியையே அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும். பிடெல் காஸ்ட்ரோ என்ற புரட்சியாளன் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகினாலும், கியூப புரட்சியில் பிடெல் காஸ்ட்ரோவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட ராவுல் காஸ்ட்ரோவே தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். அத்துடன், வெனிசுவேலா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான வெளிப்படையான கொள்கைகளை அறிவித்து வரும் நிலையிலேயே பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்றார்.

கியூபாவுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பராக் ஒபாமா, ஜனநாயக ரீதியான தேர்தல்கள் கியூபாவில் நடத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே கியூபா மீதான முழுமையான பொருளாதார தடைகளும் நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.இதேவேளை, எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட் டொபேக்கோவுக்கான பராக் ஒபாமாவின் விஜயத்தின் போது கியூபாவுடனான உறவுகள் தொடர்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனத் தெரிய வருகின்றது. எவ்வாறாயினும், பராக் ஒபாமா ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளைப் போன்றே முதலாளித்துவ மேலாண்மை போக்குடன் செயற்படப் போகின்றாரா? அல்லது மக்களின் உண்மையான நலன்களை கருத்திற் கொண்டு செயற்படப் போகின்றாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Monday, April 13, 2009

SOMETIMES IN APRIL : படிப்பினை தரும் திரைப்படம்

ஒரு நீண்ட விடுமுறை, கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் நீண்ட ஒரு விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றும். ஆனால் விடுமுறை கிடைத்தவுடன் சில சந்தர்ப்பங்களில் ஒய்வாக இருப்பதில் களைத்துப் போய்விடுகின்றோம். இருந்தாலும் இந்த விடுமுறை மழையின் காரணமாக விளையாட செல்வதற்கோ, நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கோ அதிக சந்தர்ப்பங்களை தரவில்லை. மழை காரணமாக மாலை நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இணையத்தை பயன்படுத்துவதற்கும் உசிதமற்ற சூழ்நிலை இருந்த போதிலும், வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில், மழையையும் பொருட்படுத்தாது ஒரு திரைப்படம் ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னோடு பணிபுரியும் ஒரு நண்பர் அந்த திரைப்படத்துக்கான டிவிடி இறுவட்டை எனக்கு தந்தார். நிர்ப்பந்தம் காரணமாகவே அதை வாங்கி வந்த நான், ஒரு பொழுதுபோக்குக்காகவே அதனை பார்க்கவும் அமர்ந்தேன். ஆனால் அந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்து 5 நிமிடங்களிலேயே அந்த திரைப்படத்தினை பார்க்க வேண்டியதன் உண்மையான அவசியத்தை அறிந்து கொண்டேன்.
உங்களில் ஒரு சிலரேனும் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்றாலும், அநேகமானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் இந்த பதிவை எழுதுகிறேன். அத்துடன் கடந்த காலங்களில் எனது பதிவில் வெறுமனே காதல் கவிதைகளை மட்டுமே எழுதி வருவதாக அதிகமானோர் விமர்சனம் தெரிவித்திருப்பதாலும், இவ்வாறான மாறுபட்ட பதிவை எழுதும் எண்ணம் எனக்குள் தோன்றியது. அதனிலும் மேலாக இந்த திரைப்படம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு இதை பலருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது.

எங்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையோடு ஒப்பிடும் போது இந்த திரைப்படம் நமக்கு சொல்லும் சங்கதிகள் நிறையவே இருக்கின்றன. இனப்படுகொலை (GENOCIDE) தொடர்பில் வரலாற்று பக்கங்களில் அதிகமாகவே படித்துள்ள எங்களுக்கு, அந்த பதத்தை கேள்வியுறும் போது உடனடியாகவே ஹிட்லரின் அடாவடித்தனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பதாக 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான படுகொலைச் சம்பவமாக ருவாண்டாவில் 100 நாட்களில் சுமார் 8 இலட்சம் பேரின் உயிர்கள் பிரிவினைவாதத்தால் பறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வர்த்தக நோக்கங்களுக்காகவும், ஒஸ்கர் விருதுக்காகவும் நிறையவே திரைப்படங்கள் ஹொலிவூட்டில் வெளிவந்திருக்கின்றன.

Ghosts of Rwanda (2004), 100 Days (2001), The Diary of Immaculee (2006), Rwanda: Living Forgiveness (2005), 60 Minutes - Hiding From Death (2006), Hotel Rwanda (2005) என்ற திரைப்படங்களே அவ்வாறு எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும். இந்த திரைப்படங்கள் பற்றிய தேடல் எனக்கு Sometimes in April (2005) என்ற திரைப்படத்தை பார்த்ததன் பின்னரே உருவானது. இந்த திரைப்படத்தில் சம்பவம் எவ்வளவு யதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஏனைய திரைப்படங்களை பார்த்தால் மாத்திரமே ஒப்பிட முடியும். எனினும், திரைப்படத்தை பார்த்ததன் பின்னர் இணையத்தளத்தில் அதிகம் தேடி அறிந்த வகையில் படுகொலை சம்பவத்தை 90 வீதம் வரையில் இந்த திரைப்படம் பதிவு செய்திருக்கின்றது எனலாம்.

Sometimes in April (2005) என்ற இந்த திரைப்படம் ராவுல் பெக் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் Debra Winger, Oris Erhuero, Idris Elba, Eriq Ebouaney ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் இடம்பெற்ற பாரிய அளவிலான இனப்படுகொலை தொடர்பாகவும், அதன் பிரதிபலிப்பாக ருவாண்டா எதிர்நோக்கி வரும் விளைவுகள் குறித்தும் இந்த திரைப்படம் ஆராய்கின்றது. டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு இனப்பிரிவினருக்கு இடையிலான இந்த படுகொலை சம்பவத்தை ஊ(ஹ)ட்டு பிரிவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான சம்பவ நகர்வுகளோடு படமாக்கியிருக்கிறார்கள். இந்த சகோதரர்களில் ஒருவர் டூட்ஸி பிரிவுக்கு எதிரான பிரசாரங்களை வானொலி மூலம் பரப்புபவராகவும், டூட்ஸி பிரிவைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்து இந்த படுகொலைகளின் போது தனது மனைவியையும், குழந்தைகளையும் இழந்தவராக மற்றையவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். வானொலியில் டூட்ஸி பிரிவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வந்த குற்றத்திற்காக 2004 ஆம் ஆண்டு தான்சானியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதாக ஆரம்பிக்கும் திரைப்படம், இரு சகோதரர்களுக்கும் இடையிலான கடந்த கால சம்பவங்களை நினைவு கூரல் எனும் அடையாளம் ஊடாக 1994 ஆம் ஆண்டு படுகொலைகளை திரைப்படுத்துகின்றது. இவர்களில் ஒருவர் தனது தவறை உணர்ந்து வருந்துபவராகவும், மற்றையவர் தனது மனைவியனதும், குழந்தைகளினதும் மரணத்துக்கு காரணமான சகோதரரின் தவறை மன்னிப்பவராகவும் வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவத்தை எதிர்நோக்கி தப்பி வாழ்பவர்கள் எவ்வாறு வருந்துகிறார்கள்? மற்றும் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டு இன்றும் உயிர் வாழ்பவர்கள் தமது தவறிற்காக எவ்வாறு வருந்துகிறார்கள்? என்ற கோணங்களில் FLASH BACK எனும் பழையதை நினைவு கூரல் உத்தி மூலம் இந்த திரைப்படம் நகர்ந்து செல்கின்றது. இந்த படுகொலை சம்பவத்தில் மறைமுக ஆதிக்க சக்திகளாக இருக்கக்கூடிய சில மேற்கத்தைய நாடுகளின் வேடத்தையும் மிகவும் தைரியமாக ராவுல் பெக் வெளிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளிநாட்டு பிரஜைகளை (ருவாண்டாவைச் சேராதவர்கள்) தங்கள் வாகனங்களில் பாதுகாப்புக்காக ஏற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஊ(ஹ)ட்டு பிரிவினைவாத ஆயுததாரிகளால் டூட்ஸி இனத்தார் படுகொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளையும், வெளிநாட்டு அரச பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சம்பவம் தொடர்பில் தன்னிலை விளக்கங்களை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதனையும் அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த பில் கிளின்டனின் சம்பவ அறிக்கைகளையும் திரைப்படத்தில் தக்க இடத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உதாரணமாக ஊ(ஹ)ட்டு பிரிவினைவாத ஆயுத குழுவின் தலைவருடன் தொலைபேசியில் உரையாடும் அமெரிக்க இராஜாங்க பிரதிநிதி ஒருவர் படுகொலைகளை நிறுத்துமாறு எச்சரிக்கும் சந்தர்ப்பத்தில், அந்த ஆயுத குழு தலைவர் ‘எங்கள் நாட்டில் எண்ணெய் இல்லை, எங்கள் நாட்டில் மூலவளங்களும் இல்லை, உங்களுக்குத் தேவையான எதுவும் எங்கள் நாட்டில் இல்லை’ என பதிலளிப்பதாக அமைக்கப்பட்டுள்ள காட்சியின் ஊடாக, அமெரிக்கா ஏன் இந்த சம்பவத்தில் தன்னுடைய ஆதிக்க தன்மையை பயன்படுத்தவில்லை என்பதை இலகுவாக விளக்கிவிடுகிறார் இயக்குநர். இன்று வரை இந்த படுகொலை ஏன்? எதற்காக? யாருடைய சுயநலத்துக்காக முன்னெடுக்கப்பட்டது? என்ற காரணங்கள் உண்மையாக ஆராயப்படவில்லை. (ஆராயப்படுவதன் மூலம் தனது பங்கும் இதில் வெளிப்படுவதை எந்த ஒரு மேற்கத்தைய நாடும் விரும்பவில்லை எனவும் கூறலாம்). திரைப்படங்களுக்கே உரிய சில வர்த்தக விடயங்களும் இந்த திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளன. பிரதான கதாபாத்திரமாக கூறப்படும் நபர் (அதாவது எங்களுடைய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகராக வருவாரே, சும்மா பஞ்ச் டயலொக்கெல்லாம் பேசிக்கிட்டு, அந்த ஆசாமி மாதிரி தான்) மாத்திரம் ஊ(ஹ)ட்டு பிரிவு ஆயுததாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிச் செல்லும் சில காட்சிகளைக் கூறலாம். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான ஒரு மேலோட்டமான பாதிப்பை அந்த திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 பேருக்கு ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததான செய்தியுடன் திரைப்படம் நிறைவடைகின்றது. இந்த சம்பவத்தில் 20 பேர் மாத்திரமா ஈடுபட்டார்கள்? இவ்வாறான தண்டனைகள் மூலம் இனி வரும் காலத்தில் அல்லது தற்காலத்தில் ஏற்படும் இனப்படுகொலைகள் தொடர்பான அச்சத்தை நீக்கிவிடலாமா? என்ற பல கேள்விகள் மனதில் இயல்பாகவே தோன்றிவிடுகின்றது. இந்த திரைப்படம் சம்பவம் பற்றிய படிப்பினையாக மாத்திரம் அல்லாது, இனி வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்பதாகவே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிறுத்துகின்றது.
வரலாற்று பின்சுருக்கம்: இந்த சம்பவம் தொடர்பான உண்மையான பின்னணியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன மற்றும் பொருளாதார தகைமைகளின் அடிப்படையிலேயே டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. டூட்ஸிகள் ருவாண்டாவின் சிறுபான்மையினராவர். அவர்களது தொழில் மந்தை மேய்ப்பது. பெரும்பான்மையினரான ஊ(ஹ)ட்டுக்கள் விவசாயத் தொழிலை மேற்கொள்பவர்கள். 1885 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் மாநாட்டில் ருவாண்டாவும், புரூண்டியும் ஜேர்மனியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை 1919 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்தது. இதனையடுத்து பெல்ஜியத்தின் நிர்வாக ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட ருவாண்டாவில், பொருளாதார தகைமை அடிப்படையிலான பெல்ஜிய நிர்வாகிகளின் வகுப்பாக்கம் டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு பிரிவினருக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்கத் தொடங்கியது. 1959 ஆம் ஆண்டு ஊ(ஹ)ட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சமூக புரட்சி அந்நாட்டில் ஊ(ஹ)ட்டுக்களின் அதிகாரத்தை பலப்படுத்தியது. இதனையடுத்து டூட்ஸிக்கள் 20 ஆயிரம் பேர் ஊ(ஹ)ட்டுக்களால் கொலை செய்யப்பட்டதோடு சுமார் 2 இலட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் போது Rwandan Patriotic Front அமைப்பு டூட்ஸிக்களால் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி டூட்ஸிக்கள் மீண்டும் ருவாண்டாவுக்குள் ஊடுருவ ஆரம்பித்தனர். எனினும், 1990க்கும் 1993க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் டூட்ஸிக்களுக்கு எதிரான கருத்துக்களை ஊ(ஹ)ட்டுக்கள் மத்தியில் பரப்புவதற்கு Radio Télévision Libre des Mille Collines (RTLM) எனப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை பெரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி போராளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் அருஸா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ருவாண்டாவின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜூவனல் ஹபாயரிமானாவின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் மீறலாக 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி 8 இலட்சம் பேரின் உயிரைப் பலிகொண்ட படுகொலைச் சம்பவம் ஆரம்பித்தது. இதன் போது டூட்ஸிக்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஊ(ஹ)ட்டுக்களும், டூட்ஸி பெண்ணை மணந்தவர்களும் கொலை செய்யப்பட்டனர்.
சீனா, ஜப்பான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து விவசாய நடவடிக்கைக்கென இறக்குமதி செய்யப்பட்ட அரிவாள்கள், அல்லது பெரிய கத்தி போன்ற வடிவிலான கருவிகளே இந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பதும் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். ஏப்ரல் மாதத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றதன் காரணமாகவே இந்த திரைப்படத்திற்கு Sometimes in April என பெயரிடப்பட்டுள்ளது.

Friday, April 10, 2009

நானில்லாத நீ...


எத்தனை முறை
என் நினைவேட்டின்
கடைசி வரியில்
உன்னை மறைத்து வைத்தாலும்,
உன் நிஜங்கள் செவி நனைக்க
தென்றல் பட்ட மலராய் ..
கலைந்து போகின்றேன்.


உன் சிணுங்கல்கள் என்னை சிதைத்ததுப் போலவே
உன் மௌனமும்,
என்னை முகாரி இராகங்களுக்கு
அடிமையாக்கியது.


என்
நிஜங்களையும் கனவுகளையும்,
உன்
நினைவுகளுக்கே அளித்தேன்..
ஆனால்,
நீ எனக்காய் தந்தது
உன் மறுப்பை மட்டும் தான்,


என்றாவது ஒரு நாள்...
என் இதயத்தின்
வெகு ஆழத்தில்
நீ அமிழ்ந்து போவாய்..
அன்று,
நான் இல்லாத உனக்காய்,
அனுதாபப்படும்
இவ்வுலகம்..

எங்கிருந்து...


மடை திறந்த வெள்ளம் போல்
மீறி வந்து மேனி சிலிர்க்குது ...
எங்கிருந்து வந்ததோ ?
என் மனப் பூங்காவில்
சில்லிட்டு ரீங்காரமிடுகிறது
உன் நினைவு.....

பார்த்து கொண்டே வாழ துடிக்குது மனம்...
நீ இமை திறந்து,
இதழ் விரிக்க ...
நொறுங்கி போகிறேன் நான்..

என் இதய துறையில்....
வேர் விட்டு,
மலர்கிறது....
கண நொடியில்
உன் முகம்,
அப்பப்பா ......

LinkWithin

Related Posts with Thumbnails