Tuesday, February 16, 2010

பாராளுமன்றத் தேர்தல் திறந்துவிட்டுள்ள சந்தர்ப்பங்கள்....


பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆளுங் கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளன. புதிய வேட்பாளர்கள் பலர் களமிறங்கவுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டலாம் என்ற நிலையும் தோன்றியுள்ளது. இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் சற்று குழப்பமானதாகவே இருக்கின்றது. இந்த நிலையில் எஞ்சியிருக்கக் கூடிய சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடும் இதுவரை உறுதிசெய்யப்படாததாகவே இருக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய பாடத்தை கற்பித்து தந்துள்ளது. நீண்ட காலமாக இலங்கை சந்தித்த பல தேர்தல்களில் முடிவினை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கிய சிறுபான்மை வாக்குகளின் செல்வாக்கு செயலற்றுப் போன சந்தர்ப்பத்தை காணக் கூடியதாகவிருந்தது. சிறுபான்மையினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்காமையில் இருந்து அவர்களுக்கு தேர்தலில் அல்லது தேர்தல் முறைமையில் இருக்கக் கூடிய நம்பிக்கையீனமே வெளிப்பட்டு இருக்கின்றது. அது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் தற்போதைய தேவை தேர்தல் அல்ல என்பதையும் அது வெளிப்படுத்தியிருக்கின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வதியும் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் வெளியான முடிவுகளை பார்க்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் மாவட்டங்களின் (யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை) முடிவுகளை பார்க்கும் போது பதிவுசெய்யப்பட்ட 1,983,946 வாக்காளர்களில் (யாழ் - 721,359, வன்னி-266,975, மட்டக்களப்பு-333,644, திகாமடுல்லை-420,835, திருகோணமலை-241,133) 983,077 வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனர். சுமார் 10 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 97.93சதவீத வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளாகும். இதன் மூலம் வாக்களித்தவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முடிவினை பெற எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 60.73சதவீத வாக்குகளும், வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதிக்கு 33.86சதவீத வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு எதுவென்பது வெளிப்படையாக தெரிகின்றது. இந்த 10 இலட்சம் வாக்காளர்களில் புலம் பெயர்ந்தவர்கள், மோதலில் உயிரிழந்தவர்கள் என்பவர்கள் உள்ளடக்கப்படும் பட்சத்திலும் சுமார் 5 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்யலாம். அந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி என்பதனை மாற்றியமைத்திருக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது.


1958ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தமும், 1966ஆம் ஆண்டு பண்டா-டட்லி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படுவதற்கு ஏதுவாய் அமைந்த தேர்தல்களில் சிறுபான்மை வாக்குகள் வெற்றி பெறுவதில் எவ்வளவு ஆதிக்கத்தை செலுத்தின என்பதனை வெளிப்படையாக உணர்த்துகின்றன. எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிரான வெற்றியை அறிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “இலங்கையில் இனிமேல் சிறுபான்மையினர் என்ற பிரிவினர் இல்லை” என்று அறிவித்தமையும், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் விருப்பத்துக்கு மாறான முடிவு வெளிவந்துள்ளமையும் ஏதோ ஒன்றை உணர்த்தியிருக்கின்றன. 30 ஆண்டுகளாக யுத்தம், இடம்பெயர்வு, யுத்தம், இடம்பெயர்வு என்று மாறிமாறி துன்பங்களை அனுபவித்து வந்த வடக்கு, கிழக்கு மக்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒருவராக இருக்கும் இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதியாக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையின் ஊடாக வெளியாகும் செய்தி என்ன? அவர்கள் முழுமையான மாற்றம் ஒன்றை விரும்புகின்றார்கள் என்ற செய்தியா? அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறித்த நம்பிக்கையா? என்பது கேள்வியாக மாத்திரமே உள்ளது.

இவ்வாறு தேர்தல் முடிவுகளை கவனத்திற் கொண்டு குறித்த பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சிறந்த முடிவொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை கொள்ளலாம்.

ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என யாருடனும் இணையாது தனித்து சிறுபான்மை கட்சிகள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கவுள்ள கட்சி ஆதரவுக்காக, கட்டயாமாக இந்த சிறுபான்மை
கட்சிகளின் கூட்டமைப்பை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களையும், நிபந்தனைகளையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும். அதனை விடுத்து தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும், தமது பரம்பரையினரின் எதிர்பார்ப்புக்களை மாத்திரம் நிறைவேற்ற எண்ணியிருந்தால்…….. ???????

பாராளுமன்றத் தேர்தல் என்பது முழுமையாக நிலவுடைமையாளர்களையும், முதலாளிகளையும், வல்லரசு போட்டியிட்டு வரும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக அமைப்பு. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தின் பெறுமதியை அறிந்து கொண்டால் இதன் உண்மையான அர்த்தம் உங்களுக்கும் புரியும். அந்த அளவில் ஜனநாயகத்தை அமுல்படுத்தும் நிர்வாக அலகாக பாராளுமன்றம் எவ்வளவு தூரம் இயங்குகின்றது என்பதும் இயல்பான கேள்வியே. அதனிலும் பார்க்க இந்த முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும், ஏகாதிபத்திய நாடுகளின் கைக்கூலிகளாக உள்ளவர்களும் மக்களின் நலன் குறித்து எவ்வளவு தூரம் சிந்திப்பார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இத்தனைக்கும் மத்தியில் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த பாராளுமன்றத் தேர்தல்அடிமைகளாக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெற வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்களா?. தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்ற பேதத்தை காலம் காலமாக வளர்த்து அந்த பிரிவினையில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் கைகளில் இருந்து அரசு இயந்திரத்தை பறித்தெடுத்து மக்களுக்கான உண்மையான ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை சிறுபான்மை கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுமா? ஏகாதிபத்திய பேராசைக்காக பிரதான கட்சிகளை தமது நாடுகளின் நிகழ்ச்சத்திட்டத்துக்கு அமைய ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் நாடுகளால் மறைமுகமாக அடிமைகளாக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெற வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது.

ஒரு அவசியமான அரசியல் பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. நீண்ட நாட்களாக எழுத நினைத்த பல விடயங்களை வெளிக்கொணர முயற்சித்துள்ளேன். பதிவுகள் என்பது திறந்த விவாதங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையினால் இந்த பதிவுக்கான ஆரோக்கியமான பின்னூட்டங்களை வரவேற்கின்றேன்.

Monday, February 1, 2010

தொடரும் முடிந்த முடிவு....

அட….இதுக்குத்தான்…இத்தனை ஆர்ப்பாட்டமா? என்று யோசிக்கும் போது, தேர்தல் வந்தது. என்ன நடந்தது? யாருக்கு இலாபம்? கேள்விகள் மட்டும்தான் மிச்சம்.


மீண்டும் செங்கோலுக்கான ஒரு போட்டி
பிறர் கறை காட்டி தம்மை புனிதப் படுத்திக் கொண்ட
கோமாளிகள்….
சிறந்த கோமாளியை தெரிவு செய்த
மக்கள் கூட்டம்

பிரசார பீரங்கிகளாய் சில ஊ(ஊ)டகங்கள்
வால் பிடித்து, கொடி பிடித்து, கோன் உயரச் செய்யும் கோலாகலங்கள்….

வளமான எதிர்காலமும், நம்பிக்கையான மாற்றமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைக்காய் ஒரு புள்ளடியிட்டு….
எங்கிருந்தோ எவனோ ஆட்டி வைக்க
குடுமி கொடுத்து காத்திருக்கும் அடிமைகளாய் வாக்காளர்கள்…

உடன்படிக்கைகளும், வாக்குறுதிகளும், தாவல்களும், இன்னும்பலவும்….
தொடரும் மாயாஜாலங்களாய்….

துப்பாக்கிகளின் (துர்ப்பாக்கிகளின்) வேட்டுக்கள் (வோட்டுக்கள்) உள்ளவரை……

ஜனநாயகப் போர்வையில்….

LinkWithin

Related Posts with Thumbnails