Monday, July 20, 2009

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை மறுதினம் (22-07-2009) ஏற்படப் போகின்றது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை மறைக்கும் நிமிடங்களைத் தான் சூரிய கிரகணம் என்று நாம் சொல்கின்றோம். சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்த கிரகணம் 5 மணித்தியாலங்களும் 14 நிமிடங்களும் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி காலை 05.28மணிக்கு ஆரம்பிக்கும் சூரிய கிரகணம் காலை 10.42மணி வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூரிய கிரகணம், அடுத்து 2132 ஆம் ஆண்டே ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சூரிய கிரகணம் தென்படவுள்ளமையால், சூரிய கிரகணத்தை காணக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் வைரமோதிரம் என்ற அரியவகை சூரிய கிரகண நிகழ்வை காணலாம் எனவும் கூறப்படுகின்றது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைப்பதற்கு சற்று முன்னர் சூரியனின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பெரிய ஒளிக்கீற்று ஒன்றும், சூரியனின் சுற்றுவட்டமும் பார்ப்பதற்கு வைரமோதிரம் போல் காட்சியளிக்கும்.இந்தியாவின், பீகார் மாநிலத்தின் தரிகானா என்ற பகுதியில் தான் சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் எனவும், சூரிய கிரகணத்தை முழுமையாக பார்வையிடுவதற்கு அதுவே சரியான இடம் எனவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.அது மாத்திரமல்லாது, இந்த நூற்றாண்டில் இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் இது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் பின்னர் 2114 ஆம் ஆண்டே சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பீகாரின் பாட்னாவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவில் தரிகானா காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக நாசா விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகளின் பேறாகவே சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு இது சிறந்த பகுதி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து
, அந்தப் பகுதியை நோக்கி ஏராளமான விஞ்ஞானிகளும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களும் பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது ஏற்படக் கூடிய அதிகமான புவியீர்ப்பு விசையின் காரணமாக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற போதிலும் விஞ்ஞானிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ள விடயமாக உள்ளது.
சூரிய கிரகணம் அதிகபட்சமாக 6நிமிடங்கள், 38 செக்கன்கள் நீடிக்கலாம் எனகூறப்படுகின்றது. சூரிய கிரகணத்தின் போது காந்த விசைகளின் தன்மை, விலங்குகள் மற்றும் நுண்ணங்கிகளின் தன்மை என்பன தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதற்கும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியாவின் குஜராத், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் சூரிய கிரகணத்தின் போது 200 கிலோமீற்றர் அகலமான நிழலைக் காண முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சீனா மற்றும் ஜப்பானிலும் சூரிய கிரகணம் நன்கு தெரியும். ரிகானாவின் சூரியக் கோவில் பகுதியில் சூரிய கிரகணம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சூரிய கிரகணத்தின் போதான கிரகண கதிர்வீச்சின் காரணமாக புவிநடுக்கம், இயற்கை சீற்றம், சுனாமி என்பன ஏற்படலாம் என சொல்வது வெறும் வதந்தி எனவும், அறிவியல் ரீதியில் சூரிய கிரகணத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான முழு சூரிய கிரகணங்கள் இதற்கு முன்னர் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பல விஞ்ஞான உண்மைகள் உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டன.
  • 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது ஜென்சன் என்ற விஞ்ஞானி, இந்தியாவின், குண்டூர் என்ற பகுதியிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய வளிமண்டலத்தில் ஹீலியம் என்ற வாயு இருப்பதனை கண்டறிந்தார்.
  • 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தின் போது ஒளியும் வளைந்து செல்லும் தன்மையுடையது என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு நிரூபிக்கப்பட்டது.
இந்த வரிசையில் நாளை மறுதினம் ஏற்படப் போகும் சூரிய கிரகணமும் பல்வேறு வானியல் சார்ந்த வினாக்களுக்கு விடைகளை தேடித் தரும் என விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

சூரியனை எம்மால் நேரடியாக பார்க்க முடியாது. எனினும், வித்தியாசமான வடிவில் சூரியன் தோற்றமளிக்கும் கிரகணத்தன்று சூரியனைப் பார்ப்பதற்கு நம்மில் பலர் ஆர்வமாக இருப்பார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூரிய ஒளி நம் விழித்திரையில் குவிந்து எரித்து புண்ணாக்கிவிடும். இதனால் நாம் எமது கண்பார்வையையும் இழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது திடீரென இருள் ஏற்படும். அதன்போது நாம் சூரியனைப் பார்த்தால், எமது பார்வை மூன்று மடங்கு பெரிதாகி இருளைப் பார்க்க வேண்டும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி பத்துமடங்கு அதிகம் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. இந்நிலையில் முழு சூரிய கிரகணம் முடிந்து திடீரென ஒளி வெளிவருவதைப் பார்க்க நேரிட்டால் பத்து மடங்கு சூரிய ஒளி நமது கண்ணுக்குள் பாய்ந்து கண் பார்வையை இழக்கச் செய்யும். இதன் போது தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையோ, தொலைநோக்கி கருவிகள், பூதக்கண்ணாடி போன்றவற்றின் ஊடாகவோ சூரியனை பார்க்கக் கூடாது எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஊசித்துளை
புகைப்படக் கருவி மூலம் சூரிய ஒளியை உட்செலுத்தி திரையில் பார்க்லாம். அல்லது சூரிய கிரகணத்தின் போது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி வடிகட்டப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கொண்டு சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். எனினும், ஒரிரு நிமிடங்கள் மாத்திரமே அவ்வாறு பார்க்கலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக உள்ளது.

சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்ட சில முக்கிய வரலாற்று சந்தர்ப்பங்கள்:
  • கிமு 780 – ஜூன் 4 முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
  • கிமு 763 - ஜூன் 15 மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.
  • கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
  • 1778 ஜூன் 24 - அமெரிக்காவில் டெக்சாஸ், வேர்ஜீனியாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.
  • 1871 டிசம்பர் 12 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
  • 1929 நவம்பர் 1 - முழுமையான சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
  • 1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
தனிப்பட்ட காரணங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக நீண்ட நாட்களாக புதிதாக பதிவுகள் எதனையும் எழுதுவதற்கு முடியாமல் போனது. எனினும், இரண்டு மாதங்களை அண்மித்த காலப்பகுதியில் நிறைய நண்பர்கள் புதிய பதிவுகள் வராமைக்கு காரணங் கேட்டும், விசாரித்தும் மின்னஞ்சல், குறுந்தகவல் மூலம் கேட்டறிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நீண்ட சூரிய கிரகணம் தொடர்பில் எழுதவற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails