Skip to main content

ஓக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்

1966 ஒக்ரோபர் 21 எழுச்சி இலங்கைத் தமிழர்களின் சாதிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர எழுச்சியாகும். சாதியத்தையும்- தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அவ் எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட வெகுஜனப் போராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்தது. ஜனநாயக மனித உரிமைகளை வென்றெடுத்து சமத்துவத்தையும் சமூக அந்தஸ்தையும் நிலை நாட்டியது.இவ் ஒக்ரோபர் 21எழுச்சி இடம் பெற்று நாற்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இன்றைய இளம் தலைமுறையினர் அன்றைய போராட்டங்களின் முக்கியத்துவமோ அவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருந்த சாதிய-தீண்டாமைக் கொடுமைகள் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் கூட சாதியக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெவ்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கும் போது அவற்றின் அன்றைய தீவிரத்தையும் சமூகத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.


கடந்த நூற்றாண்டின் முற்கூற்றிலிருந்து வடபுலத்திலே சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் வெளி வெளியான குரல்களாகி வளர ஆரம்பித்தன. ஐம்பதுகள் வரை அவற்றின் வளர்ச்சிகள் கோரிக்கைகளாக, மனுக்களாக, இரந்துரைகளாகவே இருந்து வந்தன. ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் ஓரளவிற்கு அழுத்தக் குரல்களாகி, எல்லைகளுக்கு உட்பட்ட சாத்வீகப் போராட்ட வடிவங்களையும் பெற்றது. அவையும் பாராளுமன்ற எதிர்பார்ப்புக்களாகவும் சீர்திருத்தக் கோரிக்கைகளாகவும் இருந்து வந்தன. சைவ கிறிஸ்தவ வேளாள ஆதிக்க சக்திகளிடமும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடமும் மன்றாடிக் கேட்கும் நிலையே காணப்பட்டது. அப் பாராளுமன்றத் தலைமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கிப் போட வேண்டிய பிச்சை போன்று எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்திற்கு மனுக்கள் அனுப்பி அற்ப சொற்ப சலுகைகளுக்காகக் காத்து நிற்கும் நிலையே நீடித்து வந்தது. சாதி அடிப்படையிலான அமைப்புகளும் குறிப்பிட்ட எல்லைகளுக்கு அப்பால் போராட்டப் பாதையில் செல்ல முடியாத நிலைக்குள்ளேயே சுழன்று வந்தன. சாத்வீகமான சமாதான வழிகளுக்கு அப்பால் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றப் பதவி அன்றைய செனட்டர் பதவி போன்ற சில பதவிகள் பட்டங்கள் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் உள்ள ஓரிரு படித்தவர்களுக்குக் கிடைத்தால் உரிமைகளை வென்றெடுத்து விடலாம் என்ற போலியான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. இதனால் 1960களின் நடுக்கூறு வரை தாழ்த்தப்பட்ட மக்களது சாதிய அடிமைத்தன வாழ்வில் பெரும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. சில சீர்திருத்தச் செயற்பாடுகள் இடம் பெற்ற அதேவேளை சாதிய முரண்பாடானது உள்ளார்ந்த வளர்ச்சி பெற்று வந்தது. அவ்வப்போது அதன் வெளிப்பாடுகள் வெவ்வேறு முனைகளில் அடையாளங் காட்டி நின்றன.
இச் சூழலிலேயே பழைய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து பிரிந்து பாராளுமன்றப் பாதையை நிராகரித்து புரட்சிகரப் பாதையில் செல்வதற்கு தீர்மானித்த தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சி தோற்றம் பெற்றது. 1964ல் மாக்சிச லெனினிசப் பொதுவுடைக் கட்சியாகிக் கொண்ட வேளையில் புரட்சிகரப் போராட்டப் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகள், இளம் தலைமுறையினர் அணிதிரண்டனர். தெற்கிலும் மலையகத்திலும் பெருமளவு புரட்சிகர சக்திகள் திரண்டமை போன்றே வடக்கு கிழக்கிலும் புரட்சிகர உணர்வுடன் வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரண்டனர். அன்றைய தேசிய சர்வதேசிய நிலைமைகள் வர்க்கப் போராட்ட சக்திகளுக்கும் புரட்சிகர எழுச்சிகளுக்கும் சாதகமானவையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாகிய தமிழ்த் தேசியத்தை சைவ-வேளாள மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகள் தமது பாராளுமன்றப் பதவிகளுக்கான பாதையில் முன்னெடுத்தன. அதேவேளை சாதிய முரண்பாடும் ஒடுக்குமுறையும் உள்ளுர கனன்று கொண்டிருந்தது. ஒரு சிறிய உரசல் ஏற்பட்டாலும் அதுவே தீப்பிழம்பாகக் கூடிய கொதி நிலையில் அது காணப்பட்டது.இத்தகைய சாதிய சமூக முரண்பாட்டு அம்சத்தின் யதார்த்த நிலைமையை உரியவாறு அடையாளம் கண்டே புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானித்தது. 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ம் திகதி அன்று சாதிய-தீண்டாமையை எதிர்த்து சுன்னாகத்திலிருந்து ஒரு ஊர்வலத்தை ஆரம்பித்து யாழ் முற்றவெளியில் பொதுக் கூட்டத்தை நடாத்தவும் முடிவு செய்தது.

இவ் எழுச்சியில் பங்கு கொள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுவுடைமைக் கட்சியின் சகல அணியினரும் அவர்களுடன் ஆதரவான மக்கள் இளைஞர்களும் குழுமினர். ஆனால் பொலீஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தது. அதற்கு சாதிய ஆதிக்கம் கொண்டவர்களதும் பிற்போக்கு தமிழ் அரசியல் சக்திகளினதும் தூண்டுதல் இருந்தது. ஆனால் பொலீஸ் தடையையும் மீறி 'சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும்" என்னும் செம்பதாகையின் கீழ் சாதிய- தீண்டாமைக்கு எதிரா புரட்சிகர முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து புறப்பட்டு பிரதான வீதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைக் கடந்து செல்ல அணிவகுத்துச் சென்றது. வீதியின் குறுக்கே பொலீஸ் படை தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிந்தது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம், டாக்டர் சு.வே. சீனிவாசகம் வீ.ஏ. கந்தசாமி இ.கா. சூடாமணி கே. டானியல், டி.டி. பெரேரா எஸ்.ரி.என். நாகரட்ணம் போன்றோர் தலைமை தாங்கிச் சென்றனர்.

ஊர்வலத்தின் மீது பொலீஸ் படை மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டது. தோழர்களின் தலைகள் தோள்களில் இருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தன. மேற்சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கே.ஏ. சுப்பிரமணியம், வீ.ஏ. கந்தசாமி, இ.கா. சூடாமணி ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டு பொலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஊர்வலத்தில் திரண்டவர்கள் பொலிஸ் தாக்குதலுக்குப் பின்பும் கலந்து செல்லவில்லை. பொலிசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் யாழ் நகரின் கூட்டத்திற்கு ஊர்வலமாகச் செல்வதையே வற்புறுத்தி நின்றனர். மீண்டும் மோதல் வெடிப்பதைத் தவிர்க்க, முழங்கங்கள் இன்றி யாழ் நகருக்கு நடந்து செல்வதற்கு பொலீஸ் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அவ்வாறு எட்டு மைல்கள் நடந்து சென்ற ஊர்வலத்தினர் யாழ் நகரில் மிகப் பெரும் கூட்டத்தை நடாத்தினர். கூட்டத்திற்கு தோழர் டாக்டர் சு.வே. சீனிவாசகம் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன், கே. டானியல், சி.கா. செந்திவேல் ஆகியோர் உரையாற்றினர். "அடித்தால் அடியை வாங்கிக் கொண்டிருந்த அடிமைத்தன நிலையை மாற்றி அடித்தால் திருப்பி அடிக்கும் புரட்சிகர நிலைப்பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகரப் போராட்ட நிலைப்பாடாக முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு எமது கட்சி வழிகாட்டி தலைமை வழங்கும்" என்ற அறை கூவலை கட்சியின் சார்பாக விடுத்தார். அன்று சுன்னாகத்தில் சாதியத்திற்கு எதிராகத் திரண்டெழுந்த மக்களுக்கும் தலைவர்களுக்கும் விழுந்த அடியானது "பிட்டுக்கு மண் சுமந்த சிவபிரான் மீது வீழ்ந்த அடி ஜீவராசிகள் அனைத்திற்கும் வீழ்ந்தது" என்று புராணக் கதையில் கூறப்பட்டது போன்றே தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவர் மீதும் வீழ்ந்த அடியாகியது.

அன்றைய எழுச்சியைத் தொடர்ந்து சாதிய தீண்டாமைக்கு எதிரான வடபுலம் தழுவிய கூட்டங்கள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள் எனப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டன. அவற்றை சாதி ஆதிக்க சக்திகள் பொலீஸ் துணை கொண்டு அடக்க முற்பட்டன. அத்தகைய அடக்குமுறைகள் மேன்மேலும் அவ் இயக்கம் மக்களிடையே பரவக் காரணமாகியது. மக்கள் போராட்டங்களில் இறங்கத் தயாராகி வந்தனர். கட்சி அதற்கான போராட்ட மார்க்கத்தையும் செயல் தந்திரத்தையும் வகுத்து நின்றது.

சங்கானையில் உள்ள தேனீர்க் கடைகளில் சமத்துவம் கோரி போராட்டம் ஆரம்பித்தது. அமைதியாகவும், சமாதனமாகவும் சமத்துவத்துடன் தேனீர் தரும்படி கேட்டபோது மறுப்பும், பலாத்காரமும் பதிலாகக் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து சங்கானையின் நிச்சாமம் கிராமம் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டது. அவர்களது துப்பாக்கிக்கு சின்னர் கார்த்திகேசு என்பவர் இலக்காகி உயிர் நீத்தார். வீடுகள் எரியூட்டப்பட்டன. பலர் காயங்கள் பட்டனர். ஆனால். மக்கள் அடிபணிந்து விடவில்லை. பதிலுக்கு போராடும் திடசங்கற்பத்துடன் எதிர்த்து எழுந்தனர். எதிரிகளின் பிற்போக்கு பலாத்காரத்தை முறியடிக்க தமது கைகளில் ஏந்தக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் எடுத்தார்கள். மக்களைப் பாதுகாத்து உரிமைகளை வென்றெடுக்க போராட்ட முன்னணியில் சங்கானை மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கியப்பட்டு அணிதிரண்டனர். சங்கானைப் போராட்டத்தின் உக்கிரத்தையும் மக்கள் காட்டிய புரட்சிகர உறுதிப்பாட்டையும் தொடர்ந்து வடபுலம் எங்கும் சாதிய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் முன் செல்ல ஆரம்பித்தன.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தியாகி சின்னர் கார்த்திகேசு அரங்கில் 1967ல் தோற்றம் பெற்றது. பொதுவுடைமை இயக்க ஆதரவாளரும் சமூக அக்கறை மிக்கவருமான எஸ்.ரி.என். நாகரட்ணம் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவர்களாக டாக்டர் சு.வே. சீனிவாசகம் மான் முத்தையா கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். வெ. சின்னையா, சி. கணேசன் இணைச் செயலளார்களாகவும் கே. டானியல், அமைப்பாளாராகவும்தெரிவு செய்யப்பட்டனர். முப்பத்தைந்து பேர்வரை பொதுச் சபையாகவும் தெரிவு பெற்றனர். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரு சாதிய அமைப்பாக அன்றி சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து நின்ற பொதுவுடைமைவாதிகள் ஜனநாயக சக்திகள் முற்போக்கு சிந்தனையுடையோர் நல்லெண்ணம் கொண்ட சமூக நலன் விரும்பிகள் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பாகவே செயலாற்றியது. அதேவேளை புரட்சிகர பொதுவுடமைக் கட்சியின் வர்க்கப் போராட்ட நிலை நின்ற அணுகுமுறையில் அமைந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும் அவ்வெகுஜனப் போராட்டங்களை வழி நடாத்திச் சென்றது.

சங்கானைப் போராட்டத்தைத் தொடர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, கரவெட்டி- கன்பொல்லை போன்ற பகுதிகளில் தேனீர்கடைப் போராட்டங்கள் வெடித்தன. அப்போராட்டங்கள் சாதி ஆதிக்கவாதிகளையும் சாதி வெறியர்களையும் அவர்களுக்கு பக்கபலமாக நின்ற ஆளும் வர்க்க அரசு யந்திரமான பொலீசையும் எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் தமது போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுத்தனர். அதே வேளை மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி கோவில் போன்ற பெரும் கோவில்களிலும் ஏனைய கோவில்களிலும் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் இடம் பெற்றன.

சுமார் ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போராட்டங்கள் சாதிய தீண்டாமையை உடைத்தெறிந்து கொண்டது. தேனீர்க் கடைகள், ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டது. இவற்றை வெற்றிகளாகப் பெற்றுக் கொள்வதற்கு இடம் பெற்றற புரட்சிகரமான வெகுஜனப் போராட்டங்கள் பல்வேறு வகையிலான அனுபவங்கள் பட்டறிவுகளை வழங்கியது. எதிரிகள் யார், நண்பர்கள் யார், என்பதைத் தெளிவாக்கியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உயர்த்தப்பட்டோர் எல்லோரும் எதிரிகள் அல்லர். அவர்கள் மத்தியில் உள்ள சாதி ஆதிக்க சக்திகளும் அவர்களது கையாட்களான சாதி வெறியர்களும் இவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்த அரசு யந்திரமான பொலீஸ் படையும் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளாக இருந்தனர். அதேவேளை அப்போராட்டங்களில் உயர்த்தப்பட்டோர் மத்தியில் உள்ள பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், சமூக நலன் விரும்பிகள் இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து நின்று போராடினர் என்பது மிக முக்கிய விடயமாகும். சாதிவாதமும், தலித்தியமும் முன்னிறுத்தப்படக் கூடிய இன்றைய சூழலில் இவ் விடயம் வர்க்க நிலைப்பாட்டிற்குரிய வரலாற்று அனுபவமாக அமைந்திருந்தது.

சட்டரீதியானதும் சட்டமறுப்பானதும் ஆயுதங்களைக் கையாண்டதுமான அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில் 15 வரையிலானவர்கள் தமது இன்னுயிர்களை இழந்து தியாகிகள் ஆகினர். பலர் பாடுகாயங்கள் பட்டனர். சிறை சித்திரவதைப் பட்டனர். ஆனால் எச்சந்தப்பத்திலும் போராட்டத்தை தளர்த்தவோ கைவிடவோ இல்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இடம் பெற்ற ஒக்ரோபர் 21 எழுச்சியம் அதன் பாதையிலான போராட்டங்களும் பெறுமதிமிக்க அனுபவங்களையும் பட்டறிவுகளையும் தந்தன. பொதுவுடைமைவாதிகளின் வெகுஜனப் போராட்டப் பயிற்சிப் பட்டறைகளாகவும் பிற்கால தலைவர்களின் தொட்டிலாகவும் அன்றைய வெகுஜனப் போராட்டங்கள் அமைந்தன. இன்றைய தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் உச்ச நிலையில் இருந்து வரும் இன்றைய சூழலில் அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் அனுபவங்கள் மிகக் கனதியும் பெறுமதியும் மிக்கவையாகும். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவெனில் தமிழ்த் தேசியவாதத்தை முன் நிறுத்துவோர் அத்தகைய வெகுஜனப் போராட்டங்களில் இருந்த பல்வேறு சாதகமான அம்சங்களைப் படிப்பதற்கு தயார் இல்லாத நிலையில் இருந்து வருவதாகும். அன்று கூட தமிழ்த் தேசியவாதத்தின் பாராளுமன்றத் தலைமைகள் இவ்வெகுஜனப் போராட்டங்களை துளியளவும் ஆதரிக்கவில்லை.

கடந்த காலத்தின் படிப்பினைகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்திற்கு அவசியமானவையாகும். அவ்வாறே நிகழ்காலம் தான் எதிர்காலத்திற்கு அடிப்படையாகின்றது. எனவே தமிழர் வரலாற்றில் நீண்டு நிலைத்து வந்த உயர்த்தப்பட்டோராகவும் தாழ்த்தப்பட்டோராகவும் பிரித்து இரண்டு வகைத் தமிழரை நிலைப்படுத்தி வந்த சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து முறியடித்த வரலாற்று நிகழ்வே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியாகும். அதில் முன்னின்று போராடியவர்கள் தலைமை தாங்கியவர்கள் முன்னோடிகளாக இருந்தவர்களில் பலர் இன்று மறைந்து விட்டனர். அத்தகையோரை இந்த நாற்பத்து மூன்றாவது ஆண்டு நினைவின் போது உயர்ந்த புரட்சிகர கௌரவத்துடன் நினைவு கூர்கின்றோம்.

முரண்பாடுகளின் வகைகளையும் வளர்ச்சிகளையும் யதார்த்த நிலைமைகளின் ஊடாக அடையாளம் கண்டு அவை சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு சரியான கொள்கை வகுத்துக் கொள்வது பிரதானமானதாகும். அத்தகையை நிலைநின்று மக்களை அணிதிரட்டி சரியான தந்திரோபாயங்களின் ஊடாக போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது என்பதனையே அன்றைய போராட்டங்கள் வரலாற்று அனுபவமாக வழங்கிச் சென்றன என்பதை இவ்வேளை நினைவு கூர்ந்து கொள்வது அவசியமானதாகும்.

நன்றி: புதியபூமி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.

பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…

தொலைநோக்கி - பிறந்த கதை

இன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுபிடிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.
1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

கந்தசாமி… சுமார் 2 வருடங்களுக்கும்மேலாகவிக்ரம்ரசிகர்களையேகாத்திருக்கவைத்ததிரைப்படம். கடைசியாகவெளிவந்தவிக்ரமின் “பீமா” திரைப்படம்பாரியவெற்றியைசந்தித்திருக்காதநிலையில், புதியஇயக்குநர்களின்வரவு, சூர்யாபோன்றோரின்அர்ப்பணிப்புடனானநடிப்புபோன்றபலபோட்டிகளுக்குமத்தியில்கந்தசாமிபடம்வெளிவந்திருக்கின்றது. படம்வெளியிடப்படுவதற்குமுன்னரேபலபிரமாண்டங்கள்படம்பற்றியஎதிர்பார்ப்பைஏகத்துக்கும்அதிகரித்திருந்தன. படபூஜைக்கானஅழைப்பிதழ், படப்பாடல்வெளியீட்டின்போதுகிராமங்களைதத்துஎடுத்தமைஎனஆரம்பம்அதிரடியாகஇருந்தநிலையில், படவெளியீடும் 1000 பிரதிகளுடன்பிரமாண்டமாகவேஇருந்தது.
தர்க்கரீதியாகபலஓட்டைகள்நிறைந்த 3 மணித்தியாலங்கள்நீளமானபடத்தின்கருமிகவும்பழையகதை. சங்கரின்படங்களில்பலசந்தர்ப்பங்களில்பேசப்பட்டவிடயம். மிகஅண்மையில்சிவாஜியில்கூடஇந்தவிடயம்தான்கூறப்பட்டிருந்தது. கருப்புபணத்தைமக்கள்நலனுக்காகபயன்படுத்தும்முறை. சற்றுமாறுப்பட்டமுறையைசுசிகணேசன்கந்தசாமியைப்பயன்படுத்திஇயக்கியிருக்கிறார். படம்முழுக்கவிக்ரமின்நடிப்புசிறப்பாகஇருக்கின்றது. ஒருசி.பி.ஜஅதிகாரியாகவரும்காட்சிகளிலும், மக்களுக்குஉதவும்கந்தசாமிபாத்திரத்திலும்சரிநடிப்புபி…