ஒரு ஊரிலே, பல வெள்ளை ஆடுகளும், சில கறுப்பு ஆடுகளும், சில பழுப்பு நிற ஆடுகளும்,இந்த நிறங்கள் கலந்த ஆடுகளும் இருந்தன. நீண்ட காலமாக ஒன்றாகித் திரிந்த இந்த ஆடுகளுக்கு திடீரென ஒரு தலைவன் தேவைப்பட்டான். எல்லா ஆடுகளும் ஒன்று கூடி நடந்தும், கிடந்தும், படுத்தும், பாய்ந்தும், மேய்ந்தும் சிந்தித்தன. இறுதியில் எல்லாம் கூடி தேர்தல் ஒன்று நடத்துவதற்கு முடிவெடுத்தன.
ஏற்கனவே வெள்ளை ஆடுகளுக்கு தலைவனைப் போல் இருந்த ஆடு, போட்டியின்றி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது. ஆனால், இன்னொரு வெள்ளைஆடு, இன்னும் சில வெள்ளை ஆடுகளுடன் சேர்ந்து வேறொரு வெள்ளை ஆட்டை தேர்தலில் போட்டியிட வைத்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த இன்னும் சில வெள்ளை ஆடுகளும் போட்டி போடுவதற்கு முன்வந்தன. தனித்த ஒரு கறுப்பாடும், சில பழுப்பு ஆடுகளும் கூட போட்டியிட முடிவு செய்து களமிறங்கின.
போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. வீதிகளில் காகிதம் உண்ணும் ஆடுகளுக்கு, வீடு தேடி புல்லும், தரமான புண்ணாக்கும் கிடைக்கும் எனவும், ஆடுகளுக்கு சிறந்த பட்டிகள் கிடைக்கும் எனவும், புதிதாய் புல் நிறைந்த வெளிகள் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பிரசாரங்கள் முடக்கி விடப்பட்டன. ஒட்டப்படும் பிரசார சுவரொட்டிகள் ஏனைய கட்சி ஆதரவு ஆடுகளால் மேயப்பட்டன. சில ஆடுகள் கைகலப்பிலும் ஈடுபட்டன. சில கறுப்பு ஆடுகள் ஒரு வெள்ளை ஆட்டையும், மற்றும் சில கறுப்பு ஆடுகள் வேறொரு வெள்ளை ஆட்டையும் ஆதரிப்பதாக அறிவித்தன. கறுப்பு ஆடுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.
கறுப்பு ஆடுகளை ஆதரிப்பதாக கூறி பல ஒநாய்கள் உலகெங்கிலும் இருந்த பட்டிகளில் இருந்து வந்தன. வெள்ளை ஆடுகளுக்கு ஆதரவாய் சில ஒநாய்களும் வந்தன.
தேர்தல் நெருங்கி வந்தது. தேர்தல் நடைபெற்றது. பல ஆடுகள் வாக்களிக்கச் சென்றன. சில ஆடுகள் வாக்களிக்காது இருந்தன. வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன. கறுப்பு ஆடுகளுக்கும், பழுப்பு ஆடுகளுக்கும் பெரும் ஏமாற்றம். வெள்ளையாடொன்று தலைவன் ஆனது.
காலங்கள் போனது. மீண்டும் தேர்தல் வந்தது. மீண்டும் கடும் பிரசாரம். கடும் போட்டி. மீண்டும் கறுப்பு ஆடுகள் வெள்ளை ஆடுகளுடன் ஒப்பந்தம் போட்டன. தேர்தல் வந்தது. வெள்ளை ஆடொன்று வெற்றி பெற்றது. காலம் கடந்தது.
வெள்ளை ஆடுகளே, வெள்ளை ஆடுகளாக இருந்தன. கறுப்பு ஆடுகள் கறுப்பு ஆடுகளாக மட்டுமே இருந்தன. வெள்ளை ஆடுகளே தலைவனாக இருந்தன. கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் தேர்தல் காலங்களில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும், முழக்கமிட்டும் கொண்டிருந்தன. இறுதியில் கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் மேலும் பல வெள்ளை ஆடுகளும் உண்பதற்கு காகிதங்களும் இல்லை. புல்லும் இல்லை. பழுதாய்ப் போன புண்ணாக்குத் தானும் இல்லை. அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கின்றன.
பிரசார சுவரொட்டிகள் கொஞ்சமும், பிரசார வாக்குறுதிகள் கொஞ்சமும் உண்ணக் கிடைக்கும் என்ற ஆசையில். காலங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. வெள்ளை ஆடுகள் வெள்ளை ஆடுகளாக மட்டுமே இருக்கின்றன. கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் மாறிமாறி வெள்ளை ஆடுகளை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் காலங்களில் மட்டுமே புல்லும், புண்ணாக்கும், குறைந்தபட்சம் காகிதமும் கிடைக்கின்றது. அதனால், காலம் முழுதும் தேர்தல் காலமாக இருக்கக் கூடாதா என அப்பாவி கறுப்பு ஆடுகளும், அப்பாவி பழுப்பு ஆடுகளும், ஏன் சில வெள்ளை ஆடுகளும் கூட எண்ணிக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் முடிந்த பிறகும் ஒநாய்கள் எதுவும் போகவில்லை. இன்னும் இருந்தன.பல ஒநாய்கள் வெறியோடு காத்திருந்தன. ஆடுகள் அடிபட்டு சாகும் வரை அமைதியாக.
இது முழுக்க முழுக்க ஒரு கதை எழுதும் முயற்சியே. எந்தவிதமான அரசியற் கலப்பும் அற்றது. அற்றது. அற்றது.
நல்ல கதை, இது நல்ல கதை.
ReplyDeleteஆடுகளைப் பற்றியும் ஓநாய் போன்ற இதர விலங்குகளின் இயல்புகளையும் சிறப்பாக ஆராய்ந்து இந்த கதை படைக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் மாடு, எருமை, நாய், பூனை போன்ற விலங்குகளையும் கதாநாயகர்களாக்கி கதை படைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்...!
:)
ReplyDeleteஇது முழுக்க முழுக்க ஒரு கதை எழுதும் முயற்சியே. எந்தவிதமான அரசியற் கலப்பும் அற்றது. அற்றது. அற்றது.//
நம்பிட்டம்.. நம்பத் தானே வேண்டும்..
நன்றி லோஷன் அண்ணா, நீங்க நம்பினத நாலு பேருக்கும் சொல்ல நம்பச் சொல்லுங்க...
ReplyDeleteநன்றி நிமல்... முயற்சி செய்வோம்...மிருகங்கள பத்தி எழுதினா யாரும் வழக்கு போடவும் மாட்டங்க....அதனால....ரிஸ்க் இல்ல....
ReplyDeleteஉங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது என எனக்கு மட்டுமல்ல உங்களது நண்பர்களுக்கும் தெரியும்....சுவாரசியம்....
ReplyDelete