Skip to main content

ஜனநாயகத்திற்கு ஒரு கடிதம்.................


அன்புள்ள ஜனநாயகத்திற்கு,

ஜனநாயக நாடொன்றின் குடிமகன் எழுதிக் கொள்வது. நலம், நலம் அறிய ஆவல் என்று தொடங்க முடியவில்லை. நீயில்லாத நாட்டில் நாங்கள் நலமோடு இருப்பது என்பது வெறும் கற்பனைதான். நான் பிறந்து கால் நூற்றாண்டுகளாகிவிட்டது. ஜனநாயகம் என்ற சொல்லை கேள்விபட்டு ஒரு தசாப்தங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. புத்தகங்களிலும், வரலாற்று நூல்களிலும் மாத்திரம் தான் அது எப்படி இருக்கும் என்று அறிந்துள்ளேன். இந்த நாட்டில் உனக்காக காத்திருக்கும் இலட்சம் பேரில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன். நீ இருப்பதாகவும், நாடெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகவும் பலர் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும்தான் இருக்கின்றார்கள். ஆனால், நான் ஒருபோதும் கண்டதில்லை. இந்த நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கின்றேன். அந்தப் பகுதிகளில் எல்லாம் உன்னை தேடிப் பார்த்திருக்கின்றேன். பலருக்கு உன்னைப் பற்றியே தெரியாது. பலருக்கு உன்னை காண ஆவல். பலருக்கு உன்னைப் பற்றி பேசினாலேயே வெறுப்பாக இருக்கின்றது.

என் அப்பா, அவரின் அப்பா என்று எல்லோரிடமும் கேட்டுவிட்டேன் உன்னைப்பற்றி. ஆனால் எவரும் உன்னைப் பார்க்கவில்லை. அதனால் தான் நேரடியாக உனக்கே இந்த கடிதத்தை எழுதிவிடத் துணிந்தேன். எப்படியும் உன்னைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆவல். உன்னைப் பற்றி பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆசையாகத் தான் இருக்கின்றது உன்னைப் பார்க்க. எனக்கு இன்றும் நல்ல நினைவு இருக்கின்றது. உன்னுடைய அம்சமாக கூறிக்கொள்ளும் தேர்தல் பொழுதொன்றில் வீட்டில் இருந்த என் பாட்டனிடம் போய் உன்னைப் பற்றி விசாரித்தேன். மிகவும் விரக்தியாக “குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்” என்றார். “அப்படியானால் உன்னைப் பார்த்திருக்கின்றாரா” என அவரிடம் மீண்டும் கேட்டேன். பிறந்த அன்றே சுவாசிக்கக் கூட அவகாசம் இன்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார். அவதாரங்களைப் பற்றியெல்லாம் இந்த உலகில் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். உன் அவதாரங்கள் சில உலக நாடுகளில் உலா வந்ததாகவும் வரலாறுகளில் படித்திருக்கின்றேன். எமது நாட்டைப் பற்றி உனக்கு தெரியாதது அல்ல. இப்போது நீ அவசியமாக இங்கு தேவை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே மௌனம் காக்கப் போகின்றாய்? உன்னைப் பற்றி பேசிப் பேசியே இங்கு பலர் தலைவர்களாகி விட்டார்கள். ஆயுத முனையில் அமைதி பேசிக் கொண்டு, அதற்கு உன் பெயரை கூறி வருகின்றார்கள். அவர்களின் பேச்சு வல்லமைகளில் நீ பிராசரத்திற்கான கருவியாக மாறியிருப்பது வேதனையாக இருக்கின்றது. உன் எதிரிகள் உந்தன் பெயரில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். உந்தன் பெயரில் பல நிறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர், இடாம்பீக வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், உன்னையே நம்பிக் கொண்டிருக்கும் பலர் உன்னைப் பற்றி பேசுவதற்கே அஞ்சியிருக்க வேண்டிய சூழ்நிலை.

எல்லாத்தையும் மீறி நீ வருவாய் என்ற நம்பிக்கையில் பல தலைமுறைகள் காத்திருந்தும், நீ கல் நெஞ்சம் கொண்டவனாகவே இருக்கின்றாய். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த காத்திருப்பு தொடரப் போகின்றது. உன் மௌனம் இன்னும் நீண்டால் நாங்கள் கூடி வேறு வழிபற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். இது உனக்கான இறுதி அழைப்பு அல்லது இறுதி எச்சரிக்கை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உனக்காக இன்னும் நீண்ட நாட்கள் நாங்கள் காத்திருப்போம் என்று நீ எண்ணியிருந்தால் அது வீண் கற்பனை மாத்திரமே.

இந்த மடலை தந்தி போல் பாவித்து பதில் அனுப்பு.
நன்றி,
ஜனநாயக தேசத்தில் வாழ துடிக்கும் ஒரு குடிமகன்.

Comments

 1. நன்றி....அண்ணாமலையான்
  நன்றி....என்ன கொடும சார்

  ReplyDelete
 2. ennuma namburenka????????? nankal than thatti parika vendum

  ReplyDelete
 3. நல்லதொரு காத்திரமான பதிவு நண்பரே...
  ஜனநாயகத்திர்ற்கு மடல் வரைந்தீர் அனால் அதன் முகவரிதாறீரோ? ஒசாமா பின் லடேனின் முகவரி கூட கண்டு பிடித்திடலாம் ஆனால் ஜனநாயகத்தின் முகவரி முடியாது...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது
அடிமையில்லை. அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)-
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…