Skip to main content

மை நேம் இஸ் கான் - உடன்படும் ஒரு பார்வை...

பொதுவாகவே நான் இந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பதில்லை. நேரங் கிடைக்கும் போது சில படங்கள் பார்ப்பதுண்டு. எனினும்> மை நேம் இஸ் கான் திரைப்படம் தொடர்பில் இந்தியாவில் எழுந்திருந்த சர்ச்சைகள் மற்றும் நண்பர்களால் அந்தப் படம் அருமையான படம்> அற்புதமான படம் என்ற பல கருத்துக்களின் பின்னர் அந்த படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததன் பின்னர் என்னால் அந்தளவு திருப்தி அடைய முடியவில்லை. ஷாருக்கானின் படங்களில் இருக்கும் தேவைக்கு மீறிய நடிப்பு> திரைப்படங்களில் தனது கதாபாத்திரத்தின் மீதான திரைக்கதை அதிகாரம் என்ற பல வழமையான விடயங்களையே அவதானிக்க முடிந்தது. அதனால் அந்தப் படம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் எழுத விரும்பவில்லை. முக்கியமாக எழுத ஒன்றும் தோன்றவில்லை.

அலுவலக நேரங்களில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இணையங்களை வலம் வந்த போது கண்ணில் பட்ட விமர்சனம் இது. என்னுடைய எண்ணங்களுடன் பொருந்தியிருந்ததுடன்> இதனை வாசித்த பின்னர் மை நேம் இஸ் கான் திரைப்படம் குறித்த சில புதிய தெளிவுகள் பிறந்ததன் காரணமாகவும் இதனை என் பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

மை நேம் இஸ் கான்: புளித்துப்போன காதல் கதை

சச்சிதானந்தன் சுகிர்தராஜா

முதலில் சொல்லிவிடுகிறேன். இது முழுமையான திரைப்பட விமர்சனம் அல்ல. அதற்குச் சம்பந்தமில்லாத செய்திகளும் வரும். காவல்துறையினரின் பாதுகாப்பு இன்றி e-bay இல் எக்கச்சக்கமான தொகை கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்காது> அரை அரங்கம் நிரம்பிய பார்மீங்கம் சினிவேர்ல்ட் திரை அரங்கில் மை நேம் இஸ் கான்படத்தை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் பார்த்தேன். ஆரவாரமில்லாமல் என்ற வார்த்தையை நெஞ்சறிந்து தான் இங்கு நுழைத்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. சென்ற வாரம் இதே அரங்கில் என்னை நானே ஒரு சுய ஆக்கினைக்கு உட்படுத்திக்கொண்டேன். தன்னறிவைத் தற்காலிகமாக இழந்த தருணத்தில் ஒரு தமிழ்ப் படத்தை அதீத சினிமா உணர்வுள்ள தமிழ் ரசிகர்களுடன் பார்த்தேன். அசல்படத்தின் கதா நாயகன் அஜித் திரையில் முதல் முறையாகத் தன் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தபோது திரை அரங்கமே அதிரும்படி கத்தல்கள், கைதட்டல்கள், விசில்கள், அங்க அசைவுகள். இதற்கு எதிர்மாறாக, ஹிந்தி திரைப்படத்தில் ஷாரூக் கான் முதலில் அறிமுகமாகும்போது, இலக்கிய ஆசிரியர்கள் வர்ணிப்பதுபோல் திரையரங்கில் மயான அமைதி நிலவியது. அரங்கின் கம்பளத்தில் சோளப் பொரி விழுந்தால் கூடக் கேட்கும்படியான மௌனம். இந்த தாய்நாடு விட்டு வாழும் தமிழ் ரசிகர்களின் சாமி ஆட்டம் ஒரு பட்டினத்துப் பழமொழியை நினைவூட்டியது: you can take a person out of the village but you can’t take the village out of the person. பெர்லினில் மை நேம் இஸ் கான்படத்துக்கான நுழைவுச்சீட்டு ஆயிரம் ஈரோக்களுக்கு e-bayஇல் விலை போனதாக வலைத்தளத்தில் படித்தேன். அதில் தென்படும் எல்லாச் செய்திகளும் நம்பத்தக்கவையல்ல.

சிவசேனாவும் அதன் தலைவர் பால் தாக்கரேயும் இந்தப் படத்திற்குத் தெரிவித்த எதிர்ப்பு, இந்தப் பத்தியைக் கணினியில் ஏற்றும்வரைக்கும் ஐக்கிய இராச்சியத்து இந்துக் கலாச்சாரக் கண்கானிகளை அதிகம் பாதித்ததாகத் தெரியவில்லை. பால் தாக்கரே என்ற இன்றைய கெட்டியான எண்ண இயலாளர் அவர் கேலிப்பட வரைவாளராக இருந்த ஒரு காலகட்டத்தில் என்ன மாதிரியான ஆளாக இருந்தார் என்பதைத் தற்செயலாக என் கண்ணில்பட்ட ஒரு நூல் தெரிவித்தது. அதை இந்தப் பத்தியின் இறுதியில் சொல்கிறேன்.

பழக்கப்பட்ட பாத்திரப் படிமங்கள்

சரி, திரைப்படத்திற்கு வருவோம். இந்தப் படத்தின் கலை நுணுக்கங்கள், ஒளிப்படக் கோணங்கள், திரை இசை பற்றிய தீர்ப்புகளை சினிமா விமர்சனத்தைத் தொழில் வாழ்வாகக்கொண்ட தொழில்முறை விமர்சகர்களிடம் விட்டுவிடுதே சரி. ஷாரூக்கானுக்கு இந்த வருடம் ஆஸ்கார் பரிசு கிடைக்காவிட்டால் அவர் பக்தர்கள் துடிதுடித்துப்போய்விடுவார்கள். சராசரி மனிதர்களுக்கு இவரது போலித்தனமான நடிப்பு எரிச்சலைத் தரும்.

இந்தப் படம் வெளிப்படுத்தும் கலாச்சார தாற்பரியங்கள் குழப்பத்தைத் தருகின்றன. பாத்திரப் படைப்புகள் பொதுக்களத்தில் பரிச்சயமான வகை மாதிரிகளுக்குள்ளேயே சுழலுகின்றன.

மை நேம் இஸ் கானில் மூன்று நிகழ்வுக் கோப்புகள் உண்டு - இஸ்லாம் பற்றிய தப்பான மனக்கோட்டம், Asperger’s syndrome உடைய ரிஸ்வான்கானின் சரிதம் மற்றும் இந்துவான மதிராவுக்கும் முஸ்லிமான ரிஸ்வானுக்குமான காதல் கதை. இந்திய வெகுசனத் திரைப்பட மரபுப்படி இங்கே சொல்லப்பட்ட முதலிரண்டு காரியங்களும் வளமைபோல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. 9/11க்குப் பிறகு இஸ்லாமுக்கும் மேற்கு உலகுக்கும் ஏற்பட்ட தப்பெண்ணங்களைச் செப்பனிடும் அறிகுறிகள் படத்தில் இல்லை. ரிஸ்வான் தன்னுடைய அஸ்பேகர்ஸ் பிணிக்கூட்டு (syndrome) நிலைமையை எப்படிச் சமாளிக்கிறான் என்ற விளக்கங்கள் இல்லை. எஞ்சியிருப்பது எப்போதும் பார்த்துப் புளித்துப்போன காதல் கதைதான்.

9/11க்குப் பின் வெளிவந்த திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் எதிரெதிர்க் கூறுகளில் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று, படு இருண்மையான தீவிரவாதியாக இருப்பார். அல்லது அதி உத்தமராக இருப்பார். இந்த இரண்டு வகை மாதிரிகளும் இந்தப் படத்தில் உண்டு. பயங்கரவாதத்தைப் போதிக்கும் இஸ்லாமியரும் ரிஸ்வானைக் கத்தியால் குத்தவருபவரும் முந்தைய வகைக்கு எடுத்துக்காட்டு. ரிஸ்வான் சகோதரரின் மனைவி ஹசினா கான் இஸ்லாமிய மரபாளராக மாறுவதையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். தெளிவுள்ளவராயிருந்த இந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர், இறுகி வரும் அமெரிக்க இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் தன்னுறுதியை நிலைநாட்டவும் இறுதியில் முகத்திரை போட்டுத் தன் இஸ்லாமிய மரபை மீள்கண்டுபிடிக்கிறார்.

ரிஸ்வானின் பாத்திரம் பின்னையதுக்கு உதாரணம். அவர் ஒரு உயர் குணமுடைய குடிமகனாக, பல்துறை அறிவு வாய்ந்தவராக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரது குடிமை நல் உணர்வுக்குச் சான்றுகள்: மசூதியில் பயங்கரவாத்தைப் பரப்புரை செய்யும் முஸ்லிம்கள் பற்றிய தகவலை திஙிமிக்குத் தெரிவிக்க முயல்வது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் காப்பாற்றும் முயற்சி. சாதாரணமான, எல்லோரையும்போல் குப்பை மோக சீரியலில் லயித்திருக்கிற, ஐபில் ரசிக்கிற, ஆட்டோ ஓட்டுநரிடம் மோதாமல் வாடகைக் கூலி தருகிற, பக்தி வைராக்கியமற்ற, எல்லாரையும் போல் தூங்கி வழிகிற ஒரு இஸ்லாமியரைத் திரையில் காண்பது அரிதான காரியம். ஊடகங்களால் பதியல் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் சிக்க மறுக்கும், பொருத்தமற்ற இந்த இஸ்லாமியர் வணிக சினிமாவுக்கு உதவாதவர்.

இப்படத்தில் வரும் திரை இந்தியர்கள்/இந்துக்கள்கூடத் தெளிவற்ற, கறைபட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ரிஸ்வான் பயங் கரவாதி அல்ல என்று நிரூபிக்க முயலும் தொலைக்காட்சி மாணவர்களும் அதை அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தும் ஒளிபரப்பாளரும் தங்களின் தொழில்வாய்ப்பு மேம்படும் என்று கருதியே அந்தச் செயலில் ஈடுபட்டார்களே தவிர, தவறாகக் கைதுசெய்யப்பட்ட சுத்தவானான முஸ்லிமை மீட்பதற்காக அல்ல. உந்துவிடுதி (motel) நடத்தும் ஜித்தேஷ் வெள்ளை இனவாதிகள் அவனது நிறுவனத்தைத் தாக்கும்போது நான் இந்துஎன்று சீறுகிறான். ஆனால் ரிஸ்வான் பிரபலமானதும், ‘ரிஸ்வான் இங்கு தங்கியிருந்தான்என்று பலகையில் எழுதி காசு சம்பாதிக்கிறான்.

இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் தீவிர சோதனைக்குப் பின் விமான நிலையப் பாதுகாவலர் ரிஸ்வான் கானிடம் உன் பிரயாணத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறார். அதற்கு ரிஸ்வான் நான் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்க்க வேண்டும் அவருக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும்என்கிறான். உன்னுடைய செய்தி என்னஎன்று பாதுகாவலர் திருப்பிக் கேட்கிறார். இதே கேள்வியைத்தான் நாமும் இத்திரைப்படத்தைப் பற்றிக் கேட்க வேண்டியிருக்கிறது.

கேலிச் சித்திரம் பேசுதடி, என் எண்ணம் கலங்குதடி

இந்தப் படக் கதைக்கு நேரடியான சம்பந்தமில்லாத, ஆனால் இந்தப்பட வெளியீடு ஏற்படுத்திய சர்ச்சைகள், அந்தப் பிரச்சினைக்கு அடி கோலிட்டவரைப் பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்து, இந்தப் பத்தியை முடிவுக்குக் கொண்டுவருகிறேன். சாதாரண மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறார்கள்? போஸ்டர்களைக் கிழித்து எறியவும் திரை அரங்குகளை முற்றுகையிடவும் அவர்களுக்கு ஆவேசம் எங்கிருந்து வந்தது? ருவாண்டா முதல் பால்கன் வரை நடந்த இனக் கொலை, சுத்திகரிப்புகளை ஆராய்ந்த Daniel Jonah Goldhagen (நூலின் தலைப்பு: Worse than War: Genocide, Elimination and the ongoing assault on humanity) எல்லோருக்கும் தெரிந்த விடையை நடப்பு உதாரணங்களுடன் கூறுகிறார். அவர் சொல்லும் காரணம் சில சக்திவாய்ந்த மனிதர்களின், முக்கியமாக அரசியல்வாதிகளின் உந்துதலே தீமை தரக்கூடிய அதிகாரத்துவ வெகுசனவாதத்தைப் பரப்புகிறது. மக்கள் சுயமாக வன்முறையில் ஈடுபடுவதில்லை. மக்களிடத்தில் உள்ளுறைந்திருக்கும் காற்புணர்ச்சிகளை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். முசோலினி ஒருமுறை கூறினார்: நான் பாசிசத்தை உருவாக்கவில்லை. இத்தாலிய மக்களின் ஆழ்மனத்திலிருந்து பிழிந்தேடுத்தேன்.

மும்பாய்க் கலவரத்தைத் தூண்டிவிட்ட தாக்கரே பற்றி ஒரு செய்தி தருவேன் என்று தொடக்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? இதோ அது: என்னுடைய நூல் அல மாரியில் எதோ ஒரு புத்தகத்தைத் தேடப் போனபோது நாராயணன் வாமன் திலக்கின் (1861-1919) ஒரு நூல் தொகுப்பு எதிர்பாராதவிதமாக என் கவனத்தை ஈர்த்தது. திலக் ஒரு மராத்திய பிராமணர். தற்செயலாகக் கிடைத்த கிறிஸ்தவ வேதமான புதிய ஏற்பாட்டை வாசித்துப் பல எதிர்ப்புகளுக்கிடையே கிறிஸ்தவரானார். கிறிஸ்துவைப் பற்றி மராத்திய பக்தி வழிமுறையில் பல பாடல்களை எழுதியிருந்தார். அவற்றில் ஒன்று இராமாயண பாணியில் எழுதிய கிறிஸ்தியணம். இவரது பாடல்களின் ஒரு திரட்டு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் Bhakti Niranjana என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஒரு மதம் மாறிய இந்து முழுக்க இயேசு கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் புகழ்பாடும் இந்தத் தொகுப்பிற்கு அட்டைப்படம் வரைந்தவர் தன் கையொப்பத்தைப் போட்டிருந்தார். படித்துப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. மறுபடியும் கவனமாக வாசித்தேன். சித்திரம் வரைந்தவர் இன்றைக்கு இன, மத துவேஷத்தைத் தூண்டிவிடும் பால் தாக்கரே. தொகுப்பாசிரியர்கள் பால் தாக்கரேக்குத் தங்களின் நன்றியையும் தெரிவித்திருந்தார்கள். இது தாக்கரே காசுக்காகச் செய்த வேலை அல்ல. கிறிஸ்தவப் பதிப்பகங்கள் படைப்பாளிகளுக்குச் சன்மானம் வழங்குவது அரிது. அப்படிக் கொடுத்திருந்தாலும் அந்தத் தொகையில் பால்தாக்கரே இரண்டு தட்டு பேல் பூரிதான் வாங்கியிருக்கக்கூடும். 1966இல் சிவசேனா ஆரம்பிக்கும்முன் தீட்டிய ஓவியம் இது. ஒரு விசாலப் பார்வையுள்ளவராகத் தென்பட்ட ஒருவர் எப்படி ஒரு குறுகலான எண்ணம் உடையவரானார் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. வேறு பல எண்ணங்களும் வருகின்றன.

நன்றி: காலச்சுவடு (மார்ச்)

Comments

  1. படத்தைப் பற்றிய தங்கள் பார்வைகளுடன் உடன்படுகிறேன்!

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல...

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்...

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...