Saturday, March 27, 2010

SEVEN POUNDS சுயம் மீட்கும் பயணம்...

நீண்ட நாட்களுக்கு முன்னர் என்னுடைய நண்பர் ஒருவர் செவன் பௌன்ட்ஸ் என்ற படம் ஒன்றைப் பற்றி கூறியிருந்தார். மிகவும் அருமையான படம் என்றும், நேரம் கிடைக்கும் போது பார்க்குமாறும் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியமைக்கு மிக முக்கிய காரணம் நான் வில் ஸ்மித்தின் தீவிர ரசிகன். அவர் கூறிய பின்னர், சில நாட்களுக்கு அந்த படத்தை தேடி தேடி களைத்துவிட்டேன். இறுதியில் HBOவில் அந்த படம் போடுவதாக கடந்த வாரம் முதல் விளம்பரங்களைப் பார்த்தும் இன்று காலைதான் அதற்கான தருணம் கிடைத்தது. படத்தை பார்த்த பின்னர்தான், அடடா! இவ்வளவு நாட்களாக இந்த படத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்குள்.

SEVEN POUNDS- நடிகராக வில் ஸ்மித் தன்னை முழுமையாக நிரூபித்திருக்கும் ஒரு திரைப்படம். 2008 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த படத்தின் கதை சொல்லும் பாங்கு மிகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம். இந்த படத்தின் மூலக்கருவாக இருக்கக் கூடிய நாயகன் பென் தோமஸின் கடந்த கால வாழ்க்கை சிறிய, சிறிய காட்சிகளாக சொல்லப்பட்டு வருகின்றது. வில் ஸ்மித்தை ஒஸ்கர் விருதுகளில் சிறந்த கதாநாயகன் விருதுக்கு பரிந்துரை செய்ய வைத்த The Pursuit of Happyness என்ற திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநரான Gabriele முச்சினோ எவ்வித தொய்வும் இன்றி அழகாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் தான் எடுத்துக் கொண்ட கதையை மக்களுக்கு வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய படங்களில் பொதுவாகவே காணப்படும் இரகசியம் ஒன்றை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை கலை, இந்த படத்தில் கையாளப்பட்டிருக்கின்றது. இத்தாலியரான இவரின் திரைப்பட பாணியில் பல ஹொலிவூட் விமர்சகர்கள் எதிர்ப்பு நிலையை பின்பற்றி வருகின்ற போதிலும், மக்களின் சாதாரண வாழ்க்கை முறையிலிருந்து கதை சொல்லும் பாங்கு ரசிர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
வாகனம் செலுத்தும் போது தனது கையடக்கத் தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை வாசித்தவாறே செல்லும் போது ஏற்படும் விபத்தே இந்த படத்தின் ஒன்றரை மணித்தியாலங்கள் கதாநாயகன் பயணிப்பதற்கான கதைக் கருவாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் கட்டம், பெரும்பாலானவர்களின் கண்களை ஈரமாக்கியிருக்கும். சிலர் மனதை ஆட்டிப்போட்டிருக்கும். சிலர் மனதில் தாம் வாழ்க்கையின் தடங்கள் தொடர்பான கேள்விகளை உருவாக்கியிருக்கும்.தமது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து, அதன் விளைவான உயிர் இழப்புக்கள். நாயகனின் மனதில் ஆழமாய் வடுவாகிப் போகின்றது. இதிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்கு பென் எடுக்கும் முயற்சிகளும், உதவி செய்வதற்காக தெரிந்தெடுக்கும் ஏழு பேரின் வாழ்க்கையும், அவர்களின் துன்பங்களுமே கதையை நகர்த்திச் செல்கின்றது. கண் பார்வை இழந்த பியானோ கலைஞர், வைத்தியசாலையை கொண்டு நடத்துவதற்கு பணமின்றி இருக்கும் வைத்தியசாலை பணிப்பாளர், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண், கணவனின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள பெண், மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவையாய் இருக்கும் ஒருவர், ஒரு சிறுவன் என ஏழு பேரை தெரிவு செய்து, அவர்கள் அந்த உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களா என்பதை வரி சேகரிக்கும் அதிகாரியாக சென்று விசாரிக்கிறான் பென்.
இந்த பயணத்தில் தான் சந்திக்கும், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் எமிலி ரொசா (Rosario Dawson) என்ற பெண்ணிடம் தன்னையறியாமலேயே காதலில் விழுந்து விடுகின்றான் பென்.

எமிலி ரொசா, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வில் ஸ்மித்துடன் தொலைபேசியில் உரையாடும் காட்சி. எமிலியின் வீட்டுக்குச் சென்று அவருக்குத் தெரியாமல் பழுதடைந்துள்ள அச்சு இயந்திரத்தை திருத்தும் காட்சி. படத்தின் இறுதிக் கட்டத்தில் எமிலியின் வீட்டில் இரவு விருந்துக்குச் சென்று இருவரும் உரையாடும் காட்சி. உதவி செய்வதற்கு ஏழு பேரையும் தேடிச் சென்று விசாரிக்கும் காட்சிகள் என்று வில் ஸ்மித்தால் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக நடிக்க முடியும் என்பதனை இயக்குநர் நிரூபித்துள்ளார்.
Men in black, Bad Boys, Hancock, I Robot என்று பல படங்களில் தனது அக்ஷன் மற்றும் நகைச்சுவையால் ரசிக்க செய்த வில் ஸ்மித்துக்கு இது ஒரு வித்தியாசமான படம்.

செவன் பௌன்ட்ஸ் ஆழமான, உணர்வுகளை தூண்டக்கூடிய சவாலான அனுபவமாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.

2 comments:

  1. http://geethappriyan.blogspot.com/2009/06/seven-pounds.html
    நானும் இதற்கு எழுதினேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails