Monday, June 14, 2010

சே. நீ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்....

விடுதலையை விரும்பும், சுதந்திரத்தை விரும்பும், தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் ஆதர்சனமாக இருக்கும், ஒரே மந்திரச் சொல் ‘சே’.
1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் ஆர்ஜண்டீனாவின் ரொஸாரியோவில் எர்னெஸ்டோ குவேரா மற்றும் ஸெலியா டி லா செர்னா ஆகியோர் இந்த புரட்சிக் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். உலகெங்கும் உள்ள புரட்சி ஆர்வலர்களால் ‘சே(நண்பா அல்லது சகா)’என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரிய ஒரே மனிதன். பதவி கிடைத்தவுடன் தம்மை கடவுள்களாக அறிவித்துக் கொள்ளும் உலகில். தமக்கு கிடைத்த உயரிய பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுடன் இணைந்து, மக்கள் போராட்டத்துக்காக உயிர் துறந்த மனிதன். வாழ்நாளின் இறுதி வரை (1967, ஒக்டோபர் 9ஆம் திகதி) மக்களைப் பற்றிய சிந்தித்து மக்களில் ஒருவனாகவே மரித்த மாபெரும் செயல்வீரர் சே. புரட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல, எந்தவொரு செயலிலும் தீவிர மனவுறுதியுடன் செயற்படுபவர்களுக்கும் சே என்ற சொல் மறக்க முடியாதது.

சே என்ற மந்திரச் சொல்லை உச்சரித்து வரும் கோடிக்கானவர்களில் நானும் ஒருவன். சேயின் 82ஆவது பிறந்தநாள் அன்று பலரும் அவரைப் பற்றி பல மொழிகளிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நாளில் நானும் சே என்ற மனிதன் புரட்சியாளர்களுக்கும், சுதந்திரமாகவும், சுயஉரிமையுடன் வாழ விரும்புபவர்களுக்கு வழங்கிய சில கருத்துக்களை தமிழில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
"எனக்கு சே என்ற பெயர் மிக முக்கியமானதாகவும், நான் என் சொந்த வாழ்வில் மிகவும் நேசிக்கும் விடயங்களையும் குறிப்பதாகவும் இருக்கின்றது. எனக்கு அது எவ்வாறு பிடிக்காததாக இருக்கும்? ஒரு மனிதனின் சொந்தப் பெயரும், குடும்பப் பெயரும் சிறிய விடயங்கள். தனிப்பட்ட விடயங்கள். முக்கியத்துவமற்றன. மாறாக மக்கள் என்;னை சே என்று அழைப்பதை நான் மிகவும் விரும்புகின்றேன்."

"நான் ஆர்ஜண்டீனாவில் பிறந்தேன் என்பது யாருமறியாத இரகசியமில்லை. நான் கியூபாவைச் சேர்ந்தவனாகவும், ஆர்ஜண்டீனாவைச் சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன். இலத்தீன் அமெரிக்கப் பிரபுக்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதிருக்கும்பட்சத்தில் வேறு யாரையும் போலவே நானும் இலத்தீன் அமெரிக்காவிடம் நாட்டுப்பற்று உடையவனாக இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தேவை ஏற்படுமானால் எந்த நேரத்திலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காக எவ்விதமான கோரிக்கையையும் முன்வைக்காமல், எத்தகைய பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் யாரையும் சுரண்டலுக்கும், ஆளாக்காமல் நான் என் உயிரையும் கொடுப்பேன்."

"ஒரு புரட்சியாளனாக நான் இப்போது கொண்டிருக்கும் பல கருத்துகள், நான் மருத்துவம் படிக்கத் தொடங்கிய காலத்தில் என்னுடைய இலட்சியக் களஞ்சியத்தில் இல்லாமல் இருந்தன. எல்லோரையும் போல நானும் வெற்றி பெற்றவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஓய்வின்றி உழைத்து புகழ் பெற்ற ஆராய்ச்சியாளனாகி மனித குலத்துக்கு நன்மை செய்யும் கண்டுபிடிப்பை வழங்க வேண்டும் என்று நான் கனவு காண்பது வழக்கம். ஆனால் அந்த சமயத்தி;ல் நான் என் தனிப்பட்ட வெற்றியில் தான் கவனம் கொண்டிருந்தேன். நம் எல்லோரையும் போல நானும் அப்போது என்னுடைய சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட ஒருவனாகத்தான் இருந்தேன்.
நான் கிறிஸ்துவுமல்ல, பேரருளாளனுமலல. நான் கிறிஸ்துவுக்கு நேர்மாறானவன். நான் எதில் நம்பிக்கை வைத்திருக்கின்றேனோ, அதற்காகக் கையருகே உள்ள எந்த ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு நான் போர் புரிவேன். ஒரு சிலுவையிலோ அல்லது வேறு எதிலோ நான் ஆணிகளால் அறையப்படுவதை அனுமதிக்காமல் எதிராளியை அழிக்க முயல்வேன்."

"பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் ஆர்வமுடையவன் எனக் கூறலாம். நான் அத்தகையவன்தான். ஆனால் சற்றே வேறுபட்டவன். நான் கொண்டிருக்கின்ற நம்பிக்கைகளுக்காக உயிரைத் தருபவர்களில் நானும் ஒருவன்."

"ஒரு போராளியின் கடினமான வாழ்க்கையில் ஆணுக்கு இணையாகக் கடுமையாக உழைக்கக் கூடிய திறமையடையவர்கள் பெண் தோழர்கள். மேலும் அவர்கள் தம்முடைய இனத்துகேயுரிய சில அபூர்வ குணங்களையும் தம்முடன் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் வலிமையில் சற்றுக் குறைந்திருந்தவர்களாக இருந்தாலும், ஆண்களை விடவும் குறைவில்லாத விதத்தில் எதிரிகளைத் தாக்குகிறார்கள். போர் புரிகிறார்கள்."

"மிருக பலத்துக்கும், அநீதிக்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்."


"மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுவது எனும் முறையைப் பின்பற்றுவதாகவும், எல்லாச் செயற்பாடுகளும் மக்கள் நலனுக்காவே எனும் நோக்கத்துடனும் அமையும் போது ஆட்சி நடத்துவது என்பது எவ்வளவு எளிமையானதாக இருக்கின்றது."

"மக்களின் தலைவர்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. மக்களின் வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்தி அவர்களை ஒரு பீடத்தின் மீது உயர்த்தி வைத்துவிட முடியாது."

"உலகின் எந்தப் பகுதியில் அநீதி இழைக்கப்பட்டாலும் அதை மனப்பூர்வமாக உணரக்கூடியவர்களாக இருங்கள். அதுதான் புரட்சியாளர்களின் உண்மையான தன்மை."

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails