Skip to main content

மரணத்தின் ப்ரியம்


ஒரு மரணத்தைப் பற்றி கேள்விப்படுகையில்
தயவு செய்து உங்கள் பணிகளை
தொடர்ந்து செய்து அவமதிக்காதீர்கள்

சொற்களற்ற பிரதேசமொன்றில்
இருப்பது போலான பாவனையில்
மௌனிக்காதீர்கள்

மடிந்தவர்களின் ஆவியைப் பார்த்து
நாய்கள் குரைப்பதாகவும்
அமைதியற்ற உடலை
சுமந்தலையும் இறந்தவர்களுக்கான
பெரும்காற்று
கிளம்பி சுழன்றடிப்பதாகவும்
சொல்லும் நீங்கள் ஒரு கணமேனும்
நின்று நிதானியுங்கள்
பாதைகள் தோறும்
பிணங்களுக்கான கதறும் ப்ரியங்கள்
எல்லோரின் காலடியிலும்
நசுங்கியபடியிருக்கின்றன.
-க.அம்சப்ரியா-
(நீண்ட நாட்களுக்கு முன்னர் அம்ருதா என்ற இந்தியா சஞ்சிகையொன்றில் நான் வாசித்த கவிதை இது. வாசிப்பதோடு, பலரை வாசிக்க வைக்க வேண்டிய ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வை இந்த கவிதை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால் உங்களுடன் இந்த கவிதையை பகிர்ந்து கொள்கின்றேன்.)

Comments

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….