
முதல் பதிவுக்கு பின்னர் ஒரு நீண்ட இடைவெளி கிடைத்தது. அடுத்த பதிவுக்கான விடயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நிறையவே கிடைத்தன. இருந்த போதிலும், பதிவு எழுதவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.வாசிப்பவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை அல்லது விமர்சிப்பதற்கு தூண்டுதலை ஏற்படுத்துமானால் அதுவே போதுமானது. சரி விடயத்துக்கு வரலாம். கடந்த வாரம் தொழில் நிமித்தமாக நான் கிழக்கு மாகாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். சுமார் 5 நாட்கள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டிய கட்டயாமும் எனக்கு ஏற்பட்டது. நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கொழும்புக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை மக்களையும் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரம் ஒன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த சைவ உணவகம் ஒன்றில் எங்கள் இரவு உணவை உட்கொள்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.( நான் ஒரு அசைவப் பிரியன் தான், இருந்தாலும் என்னோடு இருந்த சக ஊழியர் ஒருவர் சுத்த சைவ உண்ணி,அவருக்கு கம்பனி கொடுப்பதற்காக இரவில் மட்டும் நான் சைவம்). வழமை போல் ஒரு நாள் நாங்கள் இரவு உணவுக்காக அந்த உணவகத்திற்கு சென்றிருந்தோம். உணவுக்கான ஓர்டரை கொடுத்து விட்டு, உணவு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே அந்த சம்பவம் இடம்பெற்றது. நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து பார்த்தால், உணவகத்தின் காசாளர் அமர்ந்திருக்கும் இருக்கை நன்றாக தெரியும். ஒரு இரப்பவர் ( பிச்சைக்காரர் என்று அவரை அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.) தனது இரவு உணவை பெற்றுக் கொள்வதற்காக தன்னிடம் இருந்த சில்லறைகளை காசாளர் இருந்த மேசையில் போட்டதும், அந்த காசாளர் பழைய காகிதம் ஒன்றை எடுத்து, அதன் மூலமாக அந்த சில்லறைகளை மேசையில் இருந்து அப்புறப்படுத்தியதோடு,அவருக்கு உணவு கிடையாது என்று வெளியே விரட்டவும், உணவகத்தின் ஏனைய ஊழியர்களும் காசாளருக்கு உதவியாக அந்த நபரை அடிக்காத குறையாக வெளியே பிடித்து தள்ளிவிட்டனர்.
இந்த சம்பவம் எனது மனதிலே பெரும் குழப்பம் ஒன்றை தோற்றுவித்தது.உணவகத்தினர் நடந்து கொண்ட விதம் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. காரணம், இரத்தல் தொழிலை நாங்கள் சோம்பேறிகள் செய்யும் ஒரு தொழிலாகவே கருதுகிறோம். கொழும்பை பொறுத்த வரையில் மது அருந்துவதற்கும் வேறு பல அனாவசிய தேவைகளுக்குமே அவர்கள் இரத்தற் தொழிலை செய்கிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் இரத்தற் தொழிலுக்காகவே தமது கைகளை வெட்டிக் கொள்வதாக அண்மையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். ஆனால், அந்த உணவகத்திற்கு வந்த நபர் வயதானவர். மிகவும் சிரமப்பட்டே உணவகத்திற்கு வந்தார்.அவர் இலவசமாக உணவை கோரவில்லை என்பது என்னுடைய மற்றுமொரு வாதமாக இருக்கின்றது. ஆக, இத்தனைக்கும் மத்தியில் அந்த நபருக்கான உணவு மறுக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் என்று எனக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.பணத்தை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது, அப்படியானால் அந்த இரப்பவரும் பணம் கொடுத்துத் தானே தனக்கான உணவே கோரினார். ஆக அதுவும் காரணமாக இருக்க முடியாது. உணவகத்தில் உணவு இருக்கவில்லை என்ற காரணத்தையும் கூற முடியாது. என்னைப் பொறுத்த வரையில் அவர் இரப்பவர் என்ற காரணம் மட்டுமே அதற்கான காரணமாக இருக்க முடியும்.இவர்கள் இரப்பவர்களை ஆதரிக்காமல் இருப்பது சில சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இவ்வாறான முதியவர்களை எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களுடன் ஒப்பிட்டு அனுசரிக்க வேண்டிய தேவையையாவது அவர்கள் உணர்ந்திருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாகின்றன. எனது நண்பர்கள் பலருடனும், இது தொடர்பில் நான் கலந்துரையாடினேன். அவர்கள் என்னுடைய முடிவுடன் இணங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த பதிவு பலரும் வாசிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் ஒரு பகிர்வின் தேவை குறித்து இந்த பதிவை எழுதியுள்ளேன். வாசிப்பதும், விமர்சிப்பதும் இனி உங்கள் விரல்களில்.......
இது பற்றி சம்மந்தப்பட்ட கடைக்காரரிடம் கேட்டிருக்கலாமே.உங்களது குழப்பம் அந்த இடத்திலேயே தீர்ந்திருக்கும்.பழைய கடன் பாக்கி ஏதாவது இருந்திருக்கலாம்..என்னை பொறுத்தவரை சாப்பாட்டு கடைகாரர்கள் தன்மையுடன் தான் நடந்து கொள்வார்கள்.இரவு நேரத்தில் மிகுதியாகும் உணவை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கும் என்பதில் எனக்கும் ஒரு சந்தேகம் தான்.
ReplyDeleteநிச்சயமாக பழைய பாக்கிக்காக அந்த சம்பவம் இடம்பெறவில்லை. காரணம் அவர் தனது உணவுக்காக கொடுத்த சில்லறையை பழைய காகிதம் ஒன்றால் அப்புறப்படுத்தினார்கள். ஆக, அவர்களது தேவை பணமாக இருந்திருந்தால் அந்த சம்பவம் இடம்பெற்றிருக்காது. அது ஒரு தீண்டாமை நடவடிக்கையாகவே என்னால் கருத முடிகின்றது. அத்துடன் நான் எல்லா உணவகங்களையும் இங்கு குறிப்பிடவில்லை. ஒரு சில இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இருந்தாலும், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகாலம் தாழ்த்தி உங்கள் பதிவை வாசித்தற்காக வருந்துகிறேன். நான் உங்கள் பகிர்வை எந்த தயக்கமும் இன்றி ஆதரிக்கின்றேன். காரணம் தீண்டாமை என்பது தமிழர்களை பொருத்தவரை பெரும் சாபக்கேடாகும். ஆனால் இங்கு நான் ஒன்றை சொல்லியாகவே வேண்டும். எம்மை பெற்று வளர்த்து படிக்க வைத்து எங்களையும் மனிதனாக்கிய எமது பெற்றோரை இப்படி தவிக்க விடலாமா? அண்ணா உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் நான் அதே நேரம் அந்த முதியவரின் பிள்ளைகள் மீதே எனக்கு கோவம் வருகிறது. கடைக்காரரின் செய்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அம்முதியவரின் பிள்ளைகள் அந்த கடைக்காரரிலும் பார்க்க கொடியவர்கள்.
ReplyDelete