
கடந்த சில தினங்களாக புதிதாக பதிவு எதுவும் எழுதாத நிலையிலும், இன்று புவி தினம் என்பதால் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நேற்று உறங்கச் சென்றேன். ஆக புவி தினமும் கொழும்பை அதிர வைத்த நேற்றைய காலநிலையும் ஏதோ வகையில் நமக்கான செய்தியை சொல்லிச் செல்வதாக உணர்ந்தேன். "தண்ணீருக்கு காத்திருப்பவனுக்கு தேநீர் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகிறான்." கடந்த சில தினங்களாக யுத்த செய்திகளின் பரபரப்பு செய்திகள் ஒருபுறமிருக்க, இலங்கையில் காலநிலை மாற்றம் குறித்து ஏதாவது செய்தி கிடைக்குமா என்று ஊடகங்களை தேடிப்பார்த்தும் ஏமாற்றம் தான். அண்மையில் மின்னஞ்சல் மூலம் வந்த மடல் ஒன்று ஜூலை மாதத்தில் வரவிருக்கும் சுனாமி தொடர்பான செய்தியை தாங்கிவந்தது. அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வதிலும் பார்க்க, தொழிற்புரட்சிக்குப் பின்னரான காலநிலை சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அவதானிக்க வேண்டியவொன்றாகவும் எதிர்கால சந்ததியினருக்கு சவால் விடுக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது என்பதை நாம் எவரும் மறுப்பதற்கில்லை. கடந்த 20 வருடங்களில் யுத்தத்தினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையிலும், இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என ஐக்கிய நாடுகளின் உயிரிழப்புக்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் மூலம் மனிதன் இயற்கையிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஓசோன் துவாரம், பச்சை வீட்டு வாயு என்று பல விதங்களில் நாங்கள் இயற்கையுடனான முரண்பாட்டை வளர்த்துச் செல்கிறோம். இதன் விளைவுகளும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பனிமலைகள் உருகுதல், நீர்மட்டங்கள் உயருதல், சிறிய தீவுகள் நீரில் மூழ்கி போதல் என்றெல்லாம் பல அச்சுறுத்தல்கள் நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன.

புவி தினம் தொடர்பில் ஒரு சின்ன கதை : அட நீங்களும் கதை எழுதுவீங்களா! என நிறைய பேர் யோசிக்கிறாங்க.. அப்படியெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதை. தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு மாணவன் ஒருவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது மிகவும் சோகமாகவும், பலத்த சிந்தனைகளுடனும் வீட்டிற்குள் நுழைகின்றான். அவனது நிலையைக் கண்ட தாயார், அவனிடம் சோகத்துக்கான காரணத்தை வினவுகிறார். அதற்கு பதலளிக்கும் மகன், 'இந்த உலகத்தில் எதுவுமே சரியாக இல்லை அம்மா, எங்களால் எதுவுமே செய்ய முடியாது" எனக் கூறுகின்றான். அத்துடன், தரையில் அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தலையில் வைத்தாறு அவன் இதனையே திரும்ப திரும்ப கூறியவாறு இருக்கின்றான். பின்னர் திடீரென தனது தாயை பார்த்து, "இன்று எங்கள் விஞ்ஞான ஆசிரியர் உலக புவி தினம் தொடர்பில் பாடம் எடுத்தார். உலக புவி தினத்தில் அனைவரும் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பிலும், புவியை பாதுகாப்பது தொடர்பிலும் ஏதாவது மனவுறுதி எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நிறைய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் எங்கள் சூழல் அசுத்தமடைகின்றதாம். இதன் காரணமாக தாவரங்களும், மிருகங்களும் அழிகின்றனவாம். எனவே இதனை காப்பாற்றுவதற்கு ஏதாவது வழிகளை சிந்திக்குமாறு ஆசிரியர் கூறினார். நானும் பாடசாலையிலிருந்து வீடு வரை யோசித்துக் கொண்டே வந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை. என்னால் செய்யக் கூடியது ஒன்றுமே இல்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னால் நான் வாழும் சூழலின் காற்றையும், நீரையும், தாவரங்களையும், மிருகங்களையும் காப்பாற்ற முடியாது. என்னால் இந்த சூழலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது" எனக் கூறிக் கொண்டு அழுகிறான். இதனைப் பார்க்கும் தாய் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு "இந்த விடயம் உன்னில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, அப்படித்தானே? என மகனிடம் வினவுகிறார். ஆமாம் என்பது போல் மகன் தலையை மட்டும் அசைக்கிறான். "எனது தந்தை சொன்ன கதையொன்றை நான் உனக்கு சொல்கிறேன்" என தாய் ஒரு கதையை சொல்கிறார். " ஒருநாள் காலை நேரம், ஒருவன் கடற்கரையோரமாக நடந்து செல்கிறான். அப்போது கரையோரமாக நிறைய ஸ்டார்மீன்கள் ஒதுங்கி கிடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இறந்துவிட்டன. சில மீன்கள் மீண்டும் கடலுக்குள் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த அந்த மனிதன், அந்த மீன்கள் பாவம் என நினைத்துக் கொண்டு செல்கிறான். அப்போது சிறுவன் ஒருவன் ஸ்டார் மீன்களை வேக, வேகமாக கடலுக்கு எடுத்துப் போட்டுக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். அவன் மிகவும் களைப்படைந்தவனாக தன்னால் இயன்ற அளவு வேகமாக மீன்களை கடலுக்குள் தூக்கி போட்டவாறு இருக்கின்றான். அந்த சிறுவனின் அருகில் செல்லும் மனிதன், ஆயிரக்கணக்கான மீன்கள் கடற்கரையில் ஒதுங்கியிருக்கின்றன. உன்னால் அனைத்து மீன்களையும் கடலில் தூக்கிப் போட முடியாது. ஆனாலும், மீன்களை தூக்கி கடலில் போடுவதை தொடர்ந்தவாறே அந்த சிறுவன், நான் இந்த மீனை காப்பாற்றுவேன், இந்த மீனை காப்பாற்றுவேன எனக் கையில் எடுக்கும் ஒவ்வொரு மீனையும் காட்டிக் கூறியவாறு கடலில் போடுகின்றான். இதனைக் கேட்டு சற்று சிந்தித்த அந்த மனிதனும், மீன்களை கடலில் சேர்க்கத் தொடங்குகின்றான்." இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த மகன் "அவர்களால் காப்பாற்றப்பட்ட மீன்கள் அனைத்துக்கும், அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், அப்படித்தானே அம்மா?" என வினவுகின்றான். தாயும் ஆமாம் என்பது போல தலையை அசைக்கின்றார். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் சிறுவன் 'அப்படியானால் என்னால் எல்லாவற்றையும் முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக றான் செய்யும் மாற்றங்களுடாக பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்". என உறுதியாக தனது தாயிடம் கூறுகின்றான்.
ஆக, எங்களாலும் ஓசோன் துவாரத்தை அடைக்கவோ, பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை தடுக்கவோ முடியாவிட்டாலும், நாங்கள் செய்யக்கூடிய சிறிய காரியங்கள் ஊடாக அதன் மாற்றத்துக்கான பங்களிப்பை வழங்க முடியும். எனவே, உலக புவித்தினமான இன்று ஒவ்வொருவரும் புவியை காப்பதற்கு எங்களால் செய்யக் கூடிய சிறிய விடயம் ஒன்றை கொள்கைகளாக உறுதி பூணுவோம்.
கோபி,
ReplyDeleteஈழ தமிழரின் நிலைமை எவ்வாறு உள்ளது? உங்கள் கல்லூரியிலும் இனவெறி உண்டா?
-அக்கறையுடன்
தமிழ்