தனது பதவியேற்பின் போதே குவாண்டனாமோ சிறைக்கூடம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையும், ஒபாமாவின் பதவியேற்பு தொடர்பில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவின் பாராட்டுக்களும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.

எனினும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனால், ஆபிரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும், கீழைத்தேய நாடுகளுடன் சிறந்த உறவையும் கடைப்பிடிப்பதிலும் பராக் ஒபாமாவின் பங்கு அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பர்த்திருந்தாலும், அவரது அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற முதலாளித்துவ, மேலாண்மை பதவி நிலை என்ற அடையாளம் அதற்கெல்லாம் சாதகமாக இருக்குமா என்பது சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்தது. இருக்கின்றது.
அதனையெல்லாம் மாற்றும் விதமாக, அமெரிக்காவின் கால்பகுதியில் இருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடான கியூபாவுடன் 5 தசாப்தங்களாக நிலவி வந்த முரண்பாட்டை இல்லாது செய்யும் வகையில் கடந்த மாதம் பராக் ஒபாமா கைச்சாத்திட்ட செலவீன மசோதா பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் நிலவிவந்த தடைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக நேற்றைய தினம் வெள்ளை மாளிகை பேச்சாளர் அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் மூலம் கியூபாவில் வசிக்கும் தனது உறவினர்களை காலவரையறையின்றி சென்று சந்திப்பதற்கு அமெரிக்க வாழ் கியூபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கியூபாவில் வசிப்பவர்களுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் கியூபாவைச் சேர்ந்தவர்கள் பணம் அனுப்புவதும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் புஷ் நிர்வாகத்தில் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரமே அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்களுக்கு, கியூபா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் பராக் ஒபாமாவினால் கைச்சாத்திடப்பட்ட செலவீன மசோதாவின் ஊடாகவே இந்த பொருளாதார தடைநீக்கம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ரொபர்ட் கிப்ஸ் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கரீபியன் தீவுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க வல்லரசு இதே தொனியில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஏற்படுத்திய பேரழிவுகள் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.
1959 ஆம் ஆண்டு புரட்சிகரப் போராளி சேகுவேராவுடன் இணைந்து பிடெல் காஸ்ட்ரோ கியூபாவை பாடிஸ்டா(அமெரிக்காவின் உளவுத்துறையின் கையாளாக செயற்பட்டு வந்தவன்) என்ற கொடுங்கோலனிடம் இருந்து விடுவித்து ஜனநாயக நீரோட்டத்தில் அந்நாட்டை இணைத்தார். அன்றே கியூபா மீது சகல வழிகளிலும் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடிக்கு பின்னர் பேச்சில் வசீகரத்தன்மை கொண்டவராகவும், சிறந்த பேச்சாளராகவும் வர்ணிக்கப்படும் பராக் ஒபாமா, கியூபாவுடனான எவ்வாறான உறவுகளை பேணப் போகின்றார் என்பதை அவரது நடவடிக்கைகளில் இருந்தே அறிந்து கொள்ள முடியும் என பிடெல் காஸ்ட்ரோ தனது பாராட்டுக்களின் போது தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா இந்த பொருளாதார தடை நீக்கத்தை அறிவித்திருக்கின்றது. இந்த தடை நீக்கத்தின் ஊடாக அமெரிக்காவின் நிறுவனங்கள் கியூபாவில் செயற்படுவதற்கான வழிகள் ஏற்படும். ஆக மீண்டும் ஒரு ஆதிக்க சக்தியாக அல்லது காலனியாக்கல் சிந்தனையோடு அமெரிக்கா கியூபாவில் காலடி வைப்பதற்கு எண்ணுமாயிருந்தால், மீண்டும் ஒரு பாரிய தோல்வியையே அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும். பிடெல் காஸ்ட்ரோ என்ற புரட்சியாளன் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகினாலும், கியூப புரட்சியில் பிடெல் காஸ்ட்ரோவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட ராவுல் காஸ்ட்ரோவே தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். அத்துடன், வெனிசுவேலா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான வெளிப்படையான கொள்கைகளை அறிவித்து வரும் நிலையிலேயே பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்றார்.

இம்மாத இறுதியில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட் டொபேக்கோவுக்கான பராக் ஒபாமாவின் விஜயத்தின் போது கியூபாவுடனான உறவுகள் தொடர்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனத் தெரிய வருகின்றது. எவ்வாறாயினும், பராக் ஒபாமா ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளைப் போன்றே முதலாளித்துவ மேலாண்மை போக்குடன் செயற்படப் போகின்றாரா? அல்லது மக்களின் உண்மையான நலன்களை கருத்திற் கொண்டு செயற்படப் போகின்றாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment