Wednesday, April 15, 2009

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனின் வார்த்தையை காப்பாற்றிய பராக் ஒபாமா....

உலக பொருளாதார நெருக்கடி, சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், வடகொரியாவின் அணுத்திட்டங்கள், பாகிஸ்தானில் தீவிரவாதம் (நம்ம இலங்கை பிரச்சினையும் தான்) என சிதறிக் கிடந்த உலகத்தின் கவனம் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி வந்தது தெரியுமா? உலகின் பார்வை மட்டும் அல்ல இன்னுமொர் ஜீவனும் நேற்று வெள்ளைமாளிகையை சுற்றி வந்துள்ளது. அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள் என்று எல்லாவாற்றிலும் அந்த நான்கு கால் ஜீவனுக்குத்தான் முதலிடம். அது யார் என்று யோசிக்கின்றீர்களா? அது வேறு யாருமில்லை. 'போ" என்ற நாய்க்குட்டித்தான் அத்தனை ஊடகங்களையும் கட்டிப்போட்ட செய்தி.அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி முதற் பெண்மணி போல, 'போ" இப்போது அமெரிக்காவின் முதல் நாய் (என்ன கொடுமை சார்?) 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது மகள்களுக்கு அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றம் தான் இந்த 'போ". (நிறைய அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை விட தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் அதிகம். அந்த வகையில் ஒபாமா தனது உறவுகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.)
அது என்னடா? தலைப்பில் ஹெரி ட்ருமன் பற்றி ஏதோ சொல்லியிருக்கின்றீர்களே! இதுவரை அது தொடர்பில் எதையும் காணவில்லையே என்று நீங்கள் தேடுவது புரிகின்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹெரி ட்ருமனிடம் உங்களுடைய சிறந்த நண்பன் யார் என்று ஊடகமொன்றால் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'வொஷிங்டன் நகரிலே உங்களுக்கு சிறந்த நண்பர் வேண்டும் என்றால் ஒரு நாயை வாங்கி வளர்க்கவும்" என்று பதலளித்தாராம். ஆக ஒபாமாவுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார். அத்துடன் ஹெரி ட்ருமனின் வார்த்தையையும் காப்பாற்றி விட்டார்.

இன்னொரு விடயம் தெரியுமா? நம்ம 'போ" வை நாளாந்தம் சுழற்சி முறையில் வோக்கிங் (அதுதாங்க, நாய்க்குட்டியை இயற்கை அழைப்புக்காக காலையிலும், மாலையிலும் நடக்க கூட்டிப் போறது.) கூட்டிப் போகவுள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார். அது என்ன சுழற்சி முறைன்னு கேட்கிறீங்களா? ஜோன் பியுக்கனனிடம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர்) கேட்ட நல்ல தெளிவா, விளக்கமா சொல்லுவார்.

நம்ம 'போ" வெள்ளை மாளிகையிலதான் தங்கப் போகிறார். அப்போ, அவர் எங்கே நித்திரை கொள்வார்? (நான் கேட்ட கேள்வி இல்லீங்க. அமெரிக்க ஊடகங்கள் கேட்ட கேள்வி) அதற்கு, தன்னுடைய படுக்கை அறையில் இல்லை என்றும் ஒபாமா ஊடகங்களுக்கு பதலளித்திருக்கிறார்.


'போ" பற்றி பின்குறிப்பு: 'போ" டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து, வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதம் வளர்க்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் செனட்டர் எட்வர்ட் கென்னடி வீட்டில் ஒரு மாதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாய்களை பயிற்றுவிக்கும் இடத்தில் ஒரு மாதம் இருந்துள்ளது. தற்போது வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. செனட்டர் எட்வர்ட் கென்னடி பராக் ஓபாமாவுக்கு இந்த நாய்க்குட்டியை பரிசளித்துள்ளார். 'போ"வுக்கு தற்போது வயது 6 மாதங்கள். கறுப்பு வெள்ளை நிறத்திலான இந்த நாய்க்குட்டி போர்த்துக்கேய நீர்நாய் வகையைச் சார்ந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails