Skip to main content

SOMETIMES IN APRIL : படிப்பினை தரும் திரைப்படம்

ஒரு நீண்ட விடுமுறை, கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் நீண்ட ஒரு விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றும். ஆனால் விடுமுறை கிடைத்தவுடன் சில சந்தர்ப்பங்களில் ஒய்வாக இருப்பதில் களைத்துப் போய்விடுகின்றோம். இருந்தாலும் இந்த விடுமுறை மழையின் காரணமாக விளையாட செல்வதற்கோ, நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கோ அதிக சந்தர்ப்பங்களை தரவில்லை. மழை காரணமாக மாலை நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இணையத்தை பயன்படுத்துவதற்கும் உசிதமற்ற சூழ்நிலை இருந்த போதிலும், வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில், மழையையும் பொருட்படுத்தாது ஒரு திரைப்படம் ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னோடு பணிபுரியும் ஒரு நண்பர் அந்த திரைப்படத்துக்கான டிவிடி இறுவட்டை எனக்கு தந்தார். நிர்ப்பந்தம் காரணமாகவே அதை வாங்கி வந்த நான், ஒரு பொழுதுபோக்குக்காகவே அதனை பார்க்கவும் அமர்ந்தேன். ஆனால் அந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்து 5 நிமிடங்களிலேயே அந்த திரைப்படத்தினை பார்க்க வேண்டியதன் உண்மையான அவசியத்தை அறிந்து கொண்டேன்.
உங்களில் ஒரு சிலரேனும் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்றாலும், அநேகமானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் இந்த பதிவை எழுதுகிறேன். அத்துடன் கடந்த காலங்களில் எனது பதிவில் வெறுமனே காதல் கவிதைகளை மட்டுமே எழுதி வருவதாக அதிகமானோர் விமர்சனம் தெரிவித்திருப்பதாலும், இவ்வாறான மாறுபட்ட பதிவை எழுதும் எண்ணம் எனக்குள் தோன்றியது. அதனிலும் மேலாக இந்த திரைப்படம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு இதை பலருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது.

எங்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையோடு ஒப்பிடும் போது இந்த திரைப்படம் நமக்கு சொல்லும் சங்கதிகள் நிறையவே இருக்கின்றன. இனப்படுகொலை (GENOCIDE) தொடர்பில் வரலாற்று பக்கங்களில் அதிகமாகவே படித்துள்ள எங்களுக்கு, அந்த பதத்தை கேள்வியுறும் போது உடனடியாகவே ஹிட்லரின் அடாவடித்தனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பதாக 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான படுகொலைச் சம்பவமாக ருவாண்டாவில் 100 நாட்களில் சுமார் 8 இலட்சம் பேரின் உயிர்கள் பிரிவினைவாதத்தால் பறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வர்த்தக நோக்கங்களுக்காகவும், ஒஸ்கர் விருதுக்காகவும் நிறையவே திரைப்படங்கள் ஹொலிவூட்டில் வெளிவந்திருக்கின்றன.

Ghosts of Rwanda (2004), 100 Days (2001), The Diary of Immaculee (2006), Rwanda: Living Forgiveness (2005), 60 Minutes - Hiding From Death (2006), Hotel Rwanda (2005) என்ற திரைப்படங்களே அவ்வாறு எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும். இந்த திரைப்படங்கள் பற்றிய தேடல் எனக்கு Sometimes in April (2005) என்ற திரைப்படத்தை பார்த்ததன் பின்னரே உருவானது. இந்த திரைப்படத்தில் சம்பவம் எவ்வளவு யதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஏனைய திரைப்படங்களை பார்த்தால் மாத்திரமே ஒப்பிட முடியும். எனினும், திரைப்படத்தை பார்த்ததன் பின்னர் இணையத்தளத்தில் அதிகம் தேடி அறிந்த வகையில் படுகொலை சம்பவத்தை 90 வீதம் வரையில் இந்த திரைப்படம் பதிவு செய்திருக்கின்றது எனலாம்.

Sometimes in April (2005) என்ற இந்த திரைப்படம் ராவுல் பெக் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் Debra Winger, Oris Erhuero, Idris Elba, Eriq Ebouaney ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் இடம்பெற்ற பாரிய அளவிலான இனப்படுகொலை தொடர்பாகவும், அதன் பிரதிபலிப்பாக ருவாண்டா எதிர்நோக்கி வரும் விளைவுகள் குறித்தும் இந்த திரைப்படம் ஆராய்கின்றது. டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு இனப்பிரிவினருக்கு இடையிலான இந்த படுகொலை சம்பவத்தை ஊ(ஹ)ட்டு பிரிவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான சம்பவ நகர்வுகளோடு படமாக்கியிருக்கிறார்கள். இந்த சகோதரர்களில் ஒருவர் டூட்ஸி பிரிவுக்கு எதிரான பிரசாரங்களை வானொலி மூலம் பரப்புபவராகவும், டூட்ஸி பிரிவைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்து இந்த படுகொலைகளின் போது தனது மனைவியையும், குழந்தைகளையும் இழந்தவராக மற்றையவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். வானொலியில் டூட்ஸி பிரிவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வந்த குற்றத்திற்காக 2004 ஆம் ஆண்டு தான்சானியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொள்வதாக ஆரம்பிக்கும் திரைப்படம், இரு சகோதரர்களுக்கும் இடையிலான கடந்த கால சம்பவங்களை நினைவு கூரல் எனும் அடையாளம் ஊடாக 1994 ஆம் ஆண்டு படுகொலைகளை திரைப்படுத்துகின்றது. இவர்களில் ஒருவர் தனது தவறை உணர்ந்து வருந்துபவராகவும், மற்றையவர் தனது மனைவியனதும், குழந்தைகளினதும் மரணத்துக்கு காரணமான சகோதரரின் தவறை மன்னிப்பவராகவும் வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவத்தை எதிர்நோக்கி தப்பி வாழ்பவர்கள் எவ்வாறு வருந்துகிறார்கள்? மற்றும் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டு இன்றும் உயிர் வாழ்பவர்கள் தமது தவறிற்காக எவ்வாறு வருந்துகிறார்கள்? என்ற கோணங்களில் FLASH BACK எனும் பழையதை நினைவு கூரல் உத்தி மூலம் இந்த திரைப்படம் நகர்ந்து செல்கின்றது. இந்த படுகொலை சம்பவத்தில் மறைமுக ஆதிக்க சக்திகளாக இருக்கக்கூடிய சில மேற்கத்தைய நாடுகளின் வேடத்தையும் மிகவும் தைரியமாக ராவுல் பெக் வெளிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளிநாட்டு பிரஜைகளை (ருவாண்டாவைச் சேராதவர்கள்) தங்கள் வாகனங்களில் பாதுகாப்புக்காக ஏற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஊ(ஹ)ட்டு பிரிவினைவாத ஆயுததாரிகளால் டூட்ஸி இனத்தார் படுகொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளையும், வெளிநாட்டு அரச பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சம்பவம் தொடர்பில் தன்னிலை விளக்கங்களை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதனையும் அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த பில் கிளின்டனின் சம்பவ அறிக்கைகளையும் திரைப்படத்தில் தக்க இடத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உதாரணமாக ஊ(ஹ)ட்டு பிரிவினைவாத ஆயுத குழுவின் தலைவருடன் தொலைபேசியில் உரையாடும் அமெரிக்க இராஜாங்க பிரதிநிதி ஒருவர் படுகொலைகளை நிறுத்துமாறு எச்சரிக்கும் சந்தர்ப்பத்தில், அந்த ஆயுத குழு தலைவர் ‘எங்கள் நாட்டில் எண்ணெய் இல்லை, எங்கள் நாட்டில் மூலவளங்களும் இல்லை, உங்களுக்குத் தேவையான எதுவும் எங்கள் நாட்டில் இல்லை’ என பதிலளிப்பதாக அமைக்கப்பட்டுள்ள காட்சியின் ஊடாக, அமெரிக்கா ஏன் இந்த சம்பவத்தில் தன்னுடைய ஆதிக்க தன்மையை பயன்படுத்தவில்லை என்பதை இலகுவாக விளக்கிவிடுகிறார் இயக்குநர். இன்று வரை இந்த படுகொலை ஏன்? எதற்காக? யாருடைய சுயநலத்துக்காக முன்னெடுக்கப்பட்டது? என்ற காரணங்கள் உண்மையாக ஆராயப்படவில்லை. (ஆராயப்படுவதன் மூலம் தனது பங்கும் இதில் வெளிப்படுவதை எந்த ஒரு மேற்கத்தைய நாடும் விரும்பவில்லை எனவும் கூறலாம்). திரைப்படங்களுக்கே உரிய சில வர்த்தக விடயங்களும் இந்த திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளன. பிரதான கதாபாத்திரமாக கூறப்படும் நபர் (அதாவது எங்களுடைய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகராக வருவாரே, சும்மா பஞ்ச் டயலொக்கெல்லாம் பேசிக்கிட்டு, அந்த ஆசாமி மாதிரி தான்) மாத்திரம் ஊ(ஹ)ட்டு பிரிவு ஆயுததாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிச் செல்லும் சில காட்சிகளைக் கூறலாம். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான ஒரு மேலோட்டமான பாதிப்பை அந்த திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 பேருக்கு ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததான செய்தியுடன் திரைப்படம் நிறைவடைகின்றது. இந்த சம்பவத்தில் 20 பேர் மாத்திரமா ஈடுபட்டார்கள்? இவ்வாறான தண்டனைகள் மூலம் இனி வரும் காலத்தில் அல்லது தற்காலத்தில் ஏற்படும் இனப்படுகொலைகள் தொடர்பான அச்சத்தை நீக்கிவிடலாமா? என்ற பல கேள்விகள் மனதில் இயல்பாகவே தோன்றிவிடுகின்றது. இந்த திரைப்படம் சம்பவம் பற்றிய படிப்பினையாக மாத்திரம் அல்லாது, இனி வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்பதாகவே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிறுத்துகின்றது.
வரலாற்று பின்சுருக்கம்: இந்த சம்பவம் தொடர்பான உண்மையான பின்னணியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன மற்றும் பொருளாதார தகைமைகளின் அடிப்படையிலேயே டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. டூட்ஸிகள் ருவாண்டாவின் சிறுபான்மையினராவர். அவர்களது தொழில் மந்தை மேய்ப்பது. பெரும்பான்மையினரான ஊ(ஹ)ட்டுக்கள் விவசாயத் தொழிலை மேற்கொள்பவர்கள். 1885 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் மாநாட்டில் ருவாண்டாவும், புரூண்டியும் ஜேர்மனியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை 1919 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்தது. இதனையடுத்து பெல்ஜியத்தின் நிர்வாக ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட ருவாண்டாவில், பொருளாதார தகைமை அடிப்படையிலான பெல்ஜிய நிர்வாகிகளின் வகுப்பாக்கம் டூட்ஸி மற்றும் ஊ(ஹ)ட்டு பிரிவினருக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்கத் தொடங்கியது. 1959 ஆம் ஆண்டு ஊ(ஹ)ட்டு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சமூக புரட்சி அந்நாட்டில் ஊ(ஹ)ட்டுக்களின் அதிகாரத்தை பலப்படுத்தியது. இதனையடுத்து டூட்ஸிக்கள் 20 ஆயிரம் பேர் ஊ(ஹ)ட்டுக்களால் கொலை செய்யப்பட்டதோடு சுமார் 2 இலட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் போது Rwandan Patriotic Front அமைப்பு டூட்ஸிக்களால் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி டூட்ஸிக்கள் மீண்டும் ருவாண்டாவுக்குள் ஊடுருவ ஆரம்பித்தனர். எனினும், 1990க்கும் 1993க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் டூட்ஸிக்களுக்கு எதிரான கருத்துக்களை ஊ(ஹ)ட்டுக்கள் மத்தியில் பரப்புவதற்கு Radio Télévision Libre des Mille Collines (RTLM) எனப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை பெரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி போராளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் அருஸா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ருவாண்டாவின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜூவனல் ஹபாயரிமானாவின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் மீறலாக 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி 8 இலட்சம் பேரின் உயிரைப் பலிகொண்ட படுகொலைச் சம்பவம் ஆரம்பித்தது. இதன் போது டூட்ஸிக்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஊ(ஹ)ட்டுக்களும், டூட்ஸி பெண்ணை மணந்தவர்களும் கொலை செய்யப்பட்டனர்.
சீனா, ஜப்பான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து விவசாய நடவடிக்கைக்கென இறக்குமதி செய்யப்பட்ட அரிவாள்கள், அல்லது பெரிய கத்தி போன்ற வடிவிலான கருவிகளே இந்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பதும் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். ஏப்ரல் மாதத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றதன் காரணமாகவே இந்த திரைப்படத்திற்கு Sometimes in April என பெயரிடப்பட்டுள்ளது.

Comments

  1. ருவாண்டாவில் ஆடப்பட்ட ருத்ரதாண்டவம் படம் வடிவில் பார்க்கப்பட்டாலும், நிஜம் காணும் நினைவில் நெஞ்சம் பதைக்கின்றது. விமர்சனம், விளக்கம், அலசப்படும் விதம் அற்புதம். அற்புதம். ஆட்டம், பாட்டு, அடிதடி சண்டை என்ற மசாலா படங்களைப் பார்த்து மறுகணம் மறந்து போகும் எமக்கு இனப்படுகொலையை, இருபதாம் நூற்றாண்டின் மானுடத்தின் மரண ஓலத்தை படம்போட்டவர்களைவிட பார்த்து பதைபதைத்து விமர்சித்து விலாசித்துள்ளமை போற்றத்தக்கது. படத்தை உருவாக்கிய உழைப்பாளிகள், பங்கேற்றோர், நடிப்பால் உயிர் கொடுத்து, நம் நாட்டவர்களை சிந்திக்க வைத்தவர்களை தேடிப்பிடித்து விபரம் சொன்னவிதம் மறுவார்த்தையின்றி மனதாரப் போற்றப்பட வேண்டும். ஏதோ ஒரு சக்தி மானுடத்திற்கு பாடம் கற்பிக்க நாளும் பல புதுமைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் கற்றுக் கொள்ளத்தான் நமது ஈகோ இடம் கொடுப்பதில்லை. இது போன்ற விமர்சனங்கள் எத்தனைப் பேரை சென்றடையும் என்பதும், சென்றடையும் சிலராவது சிந்திப்பார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயம். என்றாலும் உங்கள் சிந்தனையும் தேடலும், விமர்சனமும், சிபாரிசும் ஒரு சிலர் மீதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நான் ஒரு சாட்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள்நினைவு, போராட்டத்திலேஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்க…

காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்

உற்பத்திமுறையின்வளர்ச்சிக்கட்டங்களில்தான்வர்க்கவேறுபாடுகள்தோன்றுகின்றன. வர்க்கப்போராட்டம்கண்டிப்பாகபாட்டாளிசர்வாதிகாரத்திற்குவழிவகுக்கும். அந்தச்சர்வாதிகாரமானதுவர்க்கப்பிளவுகளைஒழித்துவர்க்கமற்ற

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது
அடிமையில்லை. அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுகமாதே! -பாரதி (புதிய ரஷ்யா)-
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை…