Skip to main content

வார்த்தைகள் உன் வசமாய்!


உன்னைப் பேசி பேசியே
மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்…

ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
அழகிய கோலமாய்,

எதையோ எழுதத் துடிக்கும்
பேனா
தாள் தொடும் போது
மிக நெருக்கமாய் உன் முகம்….

மைத்துளி முடியும் போது
முழுதுமாய் நீ
நிறைந்திருக்கிறாய்…

மழலையாய்…
இமை விரிந்த போது
அம்மாவே உலகம் என்றிருந்தது….
எதனையும் அறியாமல்,
நீ வந்து சுமந்து செல்கிறாய்…
என் மணித் துளிகளை….

தொட்டு விடும் தூரத்தில்
நீயிருந்த போதிலும்……
அனுமதியற்று …காத்திருப்பில்….
இரப்பவனாய் நான்…..
இரங்காமல் நீ…..

நினைவுக்கெட்டிய வரையில்….
நீயில்லாத எதனையும்
என் வார்த்தைகள் பேசவில்லை…..

மூர்ச்சையற்றுப் போன வார்த்தைகளுக்கு
காற்றுக்கு வழி விட்டு…..
பேனா கொடுத்த போது….

மீண்டும்
எழுதத் தொடங்குகின்றது….
மயங்கி கிடந்த என்னை
மலர வைத்தது உன்னை கடந்து சென்ற காற்றல்லவா!


(கவிதை என்ற வடிவில் எதையாவது எழுதியே தீருவது என்று நினைத்து நான் என்றும் எழுதத் தொடங்கியது இல்லை. பல சந்தர்ப்பங்களில் பேருந்தில் செல்லும் போதும், தனியாக நடந்து செல்லும் போதும் நினைவுகளில் அவள் வந்து அமர்ந்து கொள்ள, என்னையும் அறியாமல் வார்த்தைகளை கோர்ப்பது உண்டு. ஆனால், பல சந்தர்ப்பங்களில் அவை மனதில் உதித்து அப்படியே மறைந்து போய்விடும். தாள் எடுத்து பதிந்து விடும் அளவுக்கு வழி கிடைத்ததில்லை. இன்று வழமைக்கு மாறாக போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்த பொழுதில் நீ அனுப்பிய குறுந்தகவல்கள், அளித்த நினைவுகளின் பதிவாய், கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் அனுப்பும் பகுதியில் கலைந்துவிடாது சேர்த்து வந்த வார்த்தைகள். அதனை தாளில் எழுதி வாசித்துப் பார்த்த போது உணர்வுகளில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. உங்களுக்காகவும் அதனை பதிவிடுகின்றேன். பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்களித்து விட்டுப் போகலாம்.)

Comments

  1. அழகாக இருக்கிறது கவிதை

    ReplyDelete
  2. //கௌரி பிரியா//
    உங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  3. //மழலையாய்…
    இமை விரிந்த போது
    அம்மாவே உலகம் என்றிருந்தது….
    எதனையும் அறியாமல்,
    நீ வந்து சுமந்து செல்கிறாய்…
    என் மணித் துளிகளை….//

    மிக அழகான கவிதை இந்த தளத்தை காட்டிய தமிழர்ஸ்க்கு தான் நன்றி சொல்லனும்

    ReplyDelete
  4. உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சுரேஸ்....

    ReplyDelete
  5. //ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
    ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
    அழகிய கோலமாய்,........

    நினைவுக்கெட்டிய வரையில்….
    நீயில்லாத எதனையும்
    என் வார்த்தைகள் பேசவில்லை…..//
    absolutely great words..... you have given words to my thoughts.... as you said... the thoughts roam around your heads.... before you take the pen....

    ReplyDelete
  6. un kavithai padiththathum etho onrai eluthivedavendum enra avalil vaarththaikalukaha poradukirathu en manam,,, piranththa kulanthai than thaaiyai kandathum eththanai aravaram kollumo athumatheri un kavithai enaku... kolzi eeri methiththu kunju saavatheillai...

    ReplyDelete
  7. தொட்டு விடும் தூரத்தில்
    நீயிருந்த போதிலும்……
    அனுமதியற்று …காத்திருப்பில்….
    இரப்பவனாய் நான்…..
    இரங்காமல் நீ…..


    Excellent....

    ReplyDelete
  8. உன்னைப் பேசி பேசியே
    மூர்ச்சையற்றுப் போய் கிடக்கின்றன வார்த்தைகள்...


    Hmmmmmmmm

    ReplyDelete
  9. ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி
    ஏதோ ஒரு புள்ளியில் முடியும்
    அழகிய கோலமாய்,........

    நினைவுக்கெட்டிய வரையில்….
    நீயில்லாத எதனையும்
    என் வார்த்தைகள் பேசவில்லை….. நன்றாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….