Skip to main content

உலக புவி தினம்: கொழும்பை அதிர வைத்த காலநிலை

கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிப்பவர்கள்; நேற்றிரவு நிச்சயமாக, நிம்மதியாக உறங்கியிருக்கமாட்டார்கள். தொடர்ச்சியான இடியும், மின்னலும் எவரையும் உறங்கவிட்டிருக்காது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களாக இலங்கையில் மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதைப் போன்றே புவியியல் சார் பிரச்சினைகளும் அவதானிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உணரப்பட்ட புவிநடுக்கங்கள். பருவம் மாறிய காலநிலை. ஏனைய பருவங்களைப் போலல்லாது கோடைக்காலத்தில் அதிகமாக உணரப்பட்ட உஷ்ண நிலை. கடந்த வருடத்தில் புசல்லாவை பகுதியில் பெய்த அமிலமழை. என காலநிலை அச்சுறுத்தல் இலங்கையிலும் அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கடந்த சில தினங்களாக புதிதாக பதிவு எதுவும் எழுதாத நிலையிலும், இன்று புவி தினம் என்பதால் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நேற்று உறங்கச் சென்றேன். ஆக புவி தினமும் கொழும்பை அதிர வைத்த நேற்றைய காலநிலையும் ஏதோ வகையில் நமக்கான செய்தியை சொல்லிச் செல்வதாக உணர்ந்தேன். "தண்ணீருக்கு காத்திருப்பவனுக்கு தேநீர் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகிறான்." கடந்த சில தினங்களாக யுத்த செய்திகளின் பரபரப்பு செய்திகள் ஒருபுறமிருக்க, இலங்கையில் காலநிலை மாற்றம் குறித்து ஏதாவது செய்தி கிடைக்குமா என்று ஊடகங்களை தேடிப்பார்த்தும் ஏமாற்றம் தான். அண்மையில் மின்னஞ்சல் மூலம் வந்த மடல் ஒன்று ஜூலை மாதத்தில் வரவிருக்கும் சுனாமி தொடர்பான செய்தியை தாங்கிவந்தது. அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வதிலும் பார்க்க, தொழிற்புரட்சிக்குப் பின்னரான காலநிலை சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அவதானிக்க வேண்டியவொன்றாகவும் எதிர்கால சந்ததியினருக்கு சவால் விடுக்கக் கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது என்பதை நாம் எவரும் மறுப்பதற்கில்லை. கடந்த 20 வருடங்களில் யுத்தத்தினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையிலும், இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என ஐக்கிய நாடுகளின் உயிரிழப்புக்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் மூலம் மனிதன் இயற்கையிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும்.



எனவே, உலக புவி தினமான இன்று சில நிமிடங்கள் அல்லது சில விநாடிகளாவது செலவு செய்து புவியைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்த பதிவு உதவி செய்யும் என நம்பகிறேன். நாம் வாழும் புவியைப் பற்றி சிந்திப்பதற்கும், அதன் மீதான அக்கறைக்கும் சிறப்பு நாள் ஒன்று தேவையா என்பதே சிந்திக்கக் கூடிய விடயம் தான். எனினும், இந்த உலகமயமாதலில் தந்தையர் தினம், அன்னையர் தினம், சகோதரர் தினம், நண்பர் தினம், காதலர் தினம் என எல்லாமே விளம்பரப் பொருளாகிவிட்ட காலத்தில், மனித வாழ்க்கையும் இயந்திரமயமாகிவிட்ட நிலையில் புவித்தாயின் நலன் குறித்து சிந்திப்பதற்கு ஏதோ ஒரு வகையில் இந்த நாள் பயன்படுகின்றது என்றால் புவித் தினத்தை கொண்டாடுவதில் தப்பில்லைத் தானே.

ஓசோன் துவாரம், பச்சை வீட்டு வாயு என்று பல விதங்களில் நாங்கள் இயற்கையுடனான முரண்பாட்டை வளர்த்துச் செல்கிறோம். இதன் விளைவுகளும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பனிமலைகள் உருகுதல், நீர்மட்டங்கள் உயருதல், சிறிய தீவுகள் நீரில் மூழ்கி போதல் என்றெல்லாம் பல அச்சுறுத்தல்கள் நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன.

எனவே கட்டாயமாக ஒவ்வொரு மனிதனும், வீட்டை, தனது வாகனங்களை, தனது உடைமைகளை விட புவியை நேசிக்க வேண்டும். இந்த நாளில் இதுவே என்னுடைய தாழ்வான கோரிக்கையாகவும் இருக்கின்றது.

புவி தினம் தொடர்பில் ஒரு சின்ன கதை : அட நீங்களும் கதை எழுதுவீங்களா! என நிறைய பேர் யோசிக்கிறாங்க.. அப்படியெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதை. தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மாணவன் ஒருவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது மிகவும் சோகமாகவும், பலத்த சிந்தனைகளுடனும் வீட்டிற்குள் நுழைகின்றான். அவனது நிலையைக் கண்ட தாயார், அவனிடம் சோகத்துக்கான காரணத்தை வினவுகிறார். அதற்கு பதலளிக்கும் மகன், 'இந்த உலகத்தில் எதுவுமே சரியாக இல்லை அம்மா, எங்களால் எதுவுமே செய்ய முடியாது" எனக் கூறுகின்றான். அத்துடன், தரையில் அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தலையில் வைத்தாறு அவன் இதனையே திரும்ப திரும்ப கூறியவாறு இருக்கின்றான். பின்னர் திடீரென தனது தாயை பார்த்து, "இன்று எங்கள் விஞ்ஞான ஆசிரியர் உலக புவி தினம் தொடர்பில் பாடம் எடுத்தார். உலக புவி தினத்தில் அனைவரும் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பிலும், புவியை பாதுகாப்பது தொடர்பிலும் ஏதாவது மனவுறுதி எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நிறைய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் எங்கள் சூழல் அசுத்தமடைகின்றதாம். இதன் காரணமாக தாவரங்களும், மிருகங்களும் அழிகின்றனவாம். எனவே இதனை காப்பாற்றுவதற்கு ஏதாவது வழிகளை சிந்திக்குமாறு ஆசிரியர் கூறினார். நானும் பாடசாலையிலிருந்து வீடு வரை யோசித்துக் கொண்டே வந்தேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை. என்னால் செய்யக் கூடியது ஒன்றுமே இல்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னால் நான் வாழும் சூழலின் காற்றையும், நீரையும், தாவரங்களையும், மிருகங்களையும் காப்பாற்ற முடியாது. என்னால் இந்த சூழலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது" எனக் கூறிக் கொண்டு அழுகிறான். இதனைப் பார்க்கும் தாய் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு "இந்த விடயம் உன்னில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, அப்படித்தானே? என மகனிடம் வினவுகிறார். ஆமாம் என்பது போல் மகன் தலையை மட்டும் அசைக்கிறான். "எனது தந்தை சொன்ன கதையொன்றை நான் உனக்கு சொல்கிறேன்" என தாய் ஒரு கதையை சொல்கிறார். " ஒருநாள் காலை நேரம், ஒருவன் கடற்கரையோரமாக நடந்து செல்கிறான். அப்போது கரையோரமாக நிறைய ஸ்டார்மீன்கள் ஒதுங்கி கிடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இறந்துவிட்டன. சில மீன்கள் மீண்டும் கடலுக்குள் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த அந்த மனிதன், அந்த மீன்கள் பாவம் என நினைத்துக் கொண்டு செல்கிறான். அப்போது சிறுவன் ஒருவன் ஸ்டார் மீன்களை வேக, வேகமாக கடலுக்கு எடுத்துப் போட்டுக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். அவன் மிகவும் களைப்படைந்தவனாக தன்னால் இயன்ற அளவு வேகமாக மீன்களை கடலுக்குள் தூக்கி போட்டவாறு இருக்கின்றான். அந்த சிறுவனின் அருகில் செல்லும் மனிதன், ஆயிரக்கணக்கான மீன்கள் கடற்கரையில் ஒதுங்கியிருக்கின்றன. உன்னால் அனைத்து மீன்களையும் கடலில் தூக்கிப் போட முடியாது. ஆனாலும், மீன்களை தூக்கி கடலில் போடுவதை தொடர்ந்தவாறே அந்த சிறுவன், நான் இந்த மீனை காப்பாற்றுவேன், இந்த மீனை காப்பாற்றுவேன எனக் கையில் எடுக்கும் ஒவ்வொரு மீனையும் காட்டிக் கூறியவாறு கடலில் போடுகின்றான். இதனைக் கேட்டு சற்று சிந்தித்த அந்த மனிதனும், மீன்களை கடலில் சேர்க்கத் தொடங்குகின்றான்." இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த மகன் "அவர்களால் காப்பாற்றப்பட்ட மீன்கள் அனைத்துக்கும், அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், அப்படித்தானே அம்மா?" என வினவுகின்றான். தாயும் ஆமாம் என்பது போல தலையை அசைக்கின்றார். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் சிறுவன் 'அப்படியானால் என்னால் எல்லாவற்றையும் முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக றான் செய்யும் மாற்றங்களுடாக பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்". என உறுதியாக தனது தாயிடம் கூறுகின்றான்.

ஆக, எங்களாலும் ஓசோன் துவாரத்தை அடைக்கவோ, பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை தடுக்கவோ முடியாவிட்டாலும், நாங்கள் செய்யக்கூடிய சிறிய காரியங்கள் ஊடாக அதன் மாற்றத்துக்கான பங்களிப்பை வழங்க முடியும். எனவே, உலக புவித்தினமான இன்று ஒவ்வொருவரும் புவியை காப்பதற்கு எங்களால் செய்யக் கூடிய சிறிய விடயம் ஒன்றை கொள்கைகளாக உறுதி பூணுவோம்.

"நான் இனிமேல் பொலித்தீன் பைகளை உபயோகிக்க மாட்டேன்." இது தான் என்னுடைய கொள்கை பிரகடனம். உங்களுடைய கொள்கை பிரகடனம் என்னவாக இருக்கப் போகிறது?

புவித்தினம் ஒரு சுருக்கமான பார்வை : அதிகரித்துச் சென்ற இயற்கை அழிவுகள் காரணமாக, சுற்றாடல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நாளில் வருடாந்தம் பாரிய அளவில் விழிப்புணர்வு ஊர்வலங்களையும், கல்வி திட்டங்களையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது. இருந்தாலும், வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு தினங்களில் உலக புவித் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் மார்ச் 21 ஆம் திகதி உலக புவித் தினமாக கொண்டாடப்படுகின்றது.

Comments

  1. கோபி,
    ஈழ தமிழரின் நிலைமை எவ்வாறு உள்ளது? உங்கள் கல்லூரியிலும் இனவெறி உண்டா?

    -அக்கறையுடன்
    தமிழ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….