என்னுடைய எழுத்துக்களுக்கு முதலாவது ரசிகராகவும், விமர்சகராகவும், அவற்றிலும் பார்க்க நான் எழுதுவதற்கு பிரதான காரணங்களாக இருந்தவர்களில் ஒருவரான மாவை வரோதயனின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும். அவருக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அவரது மறைவுக்காக விடுத்துள்ள ஊடங்களுக்கான செய்திக் குறிப்பை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.
ஊடக செய்திக் குறிப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றி வந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும், விமர்சகரும், நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி.சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பெரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக அயராது செய்றபட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சுவையுணர்வு மிகும் ஆக்கங்களாற் தாயகத்துக்கு வளமூட்டினார்.
அவரது கவிதைகளும் உரைச் சித்திரங்களுங் கட்டுரைகளும், நாடகப் பிரதிகளும், தெளிவும், ஆழமும், சமூகப் பயனுமுடையன. தனது பல்வேறு தனிப்பட்ட துன்ப துயரங்கட்கிடையிலுங் குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகக் கடுமையான நோய்க்கு உட்பட்டிருந்த போதிலும், தன்னாலியன்றளவுக்கு தாயகத்திற்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வந்தார். சமூகச் சிந்தனை மிக்க சீரிய படைப்பாளிகள் பிற்போக்காளராற் காழ்ப்புணர்வுடன் நிந்திக்கப்பட்ட வேளைகளில், நிதானந் தவறாது உண்மைகளை விளக்கி அவதூறுகளை நிராகரித்துப் புதிய கலை இலக்கியப் பண்பாட்டை நிலை நிறுத்தும் ஓர்மம் அவரிடம் இருந்தது. அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும், பிள்ளைகட்கும், குடும்பத்தினருக்கும், தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களையுத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து தனது ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்கின்றது.
தேசிய கலை இலக்கியப் பேரவை.
வேதனை தருகிற இழப்பு. நட்போடு தலைசாய்த்து என் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅதிர்ச்சியான செய்தி , ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்கின்றேன்
ReplyDeleteமாவை வரோதயனின் ஈடுசெய்யமுடியாத இழப்பு எம்மை எல்லாம் கவலையடையச்செய்கிறது
ReplyDeleteவீரகேசரியின் விமர்சனங்களிலும் கட்டுரைகளிலும் என்னை கவர்ந்தவர்,அவருக்கே உரிய தனிப்பாணியில் எழுதும் பாங்கு சிறப்பானது,
ஒருமுறை தமிழ்சங்கத்தில் தேசிய கலை இலக்கியப்பேரவயின் நிகழ்வில் அவரின் ஒரு பேச்சைக்கேட்ட நினைவுகள் தான் எனக்கு இன்று வருகிறது
இவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது,
எனது அஞ்சலிகளும் வரோதயனுக்கு